கமலா முரளி/அம்மா வருவாள்

கருக்கல்ல எழுப்பி விட்டாங்க அம்மா.
“ராஜு, எந்திரிடா, டவுன் ஆசுபத்திரிக்கி போவணும்.”
குட்டித்தம்பியைத் தூக்கிக் கொண்டு, பேருந்தில் ஏறினார்கள்.
“டவுன் ஆஸ்பத்திரி இறங்கு” பலமாகக் குரல் கொடுத்தார் நடத்துநர்.
ராஜு அம்மாவைத் தட்டி எழுப்பினான்.
“தம்பி, பாப்பாவை நீ தூக்கிக்கோ” என யாரோ சொல்ல ராஜுவின் தோளில் குழந்தை.
மருத்துவமனை வாசலில் சுருண்டு விழுந்தாள் அம்மா.
செவிலியர்கள் ஓடி வந்தனர். விறுவிறுவென சிகிச்சை ஏற்பாடுகள் நடந்தன.
ராஜுவுக்குப் பயமாக இருந்தது. தம்பியை இறுக்கிப் பிடித்தபடி கலங்கி நின்றான்.
“கண்ணா, இந்தா இந்த சீட்டைக் கொண்டு போய் எதிரால இருக்கிற மருந்து கடையில் கொடு. இந்த மருந்து வந்தா தான் அம்மா பிழைக்கும்”
தம்பி வலது காலில் இருந்த தண்டையைக் கழற்றி கடைக்காரரிடம் கொடுத்து மருந்தை வாங்கிக் கொண்டு ஓடி வந்தான்.
கால் தடுக்கி சேற்றில் விழுந்த போதும், மருந்தையும் தம்பியையும் தவறவிடவில்லை.
மருந்தை செவிலியரிடம் கொடுத்தான்.
“நல்ல சமயத்துக்கு மருந்தை வாங்கி வந்துட்ட.”
அம்மா பிழைத்து வருவாள் என்ற நம்பிக்கையுடன் தம்பியை தோளாடு அணைத்தவாறு நின்றான் ராஜு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன