
தான் பிறந்த நாளும் ,பெற்றோரையும் அறியாமல் ,தனக்கு தானே ராஜா என பெயர் சூட்டிக் கொண்டான்.பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசை. ஆனால் குப்பைகளை சேர்த்து விற்று தன் பசியை போக்கினான். கரூரில் அவன் தினமும் குப்பை பொறுக்குவதால் அவனை தெரியாதவர்கள் யாரும் இல்லை. அது போல அவன் பசி என எந்த உதவி கேட்டாலும் அவன் முகத்தை பார்த்து உதவி செய்தார்கள். ராஜாவுக்கோ எப்படியாவது காசு சேர்த்து படித்துவிட வேண்டும் என்ற கனவு.அன்று ஞாயிற்றுக்கிழமை ,பகல் முழுதும் குப்பை பொறுக்கிவிட்டு மாலை 4 மணி அளவில் பசி துடிக்க ஒரு தெருவில் தூங்கி விட்டான்.திடீரென குழந்தை அழுகுரல் கேட்க ,அவன் கண் விழித்துப் பார்த்தான்.ஒரு குப்பை தொட்டியில் குழந்தை அழுது கொண்டிருந்தது. உடனே அதை வாரி அணைத்தான்.உடனே பக்கத்து டீக்கடையில் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினான்.குழந்தை முகம் மலர அவனைப் பார்த்து சிரித்தது. பசி பஞ்சம் பறந்து போக , வாழ்க்கையில் ராஜாவுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது. இப்போது அந்த குழந்தைக்காக வாழ தயாரானான் ராஜா.
