
குழந்தை ராஜாவுடன் விளையாடுவதும், அவனை அழாமல் பார்த்துக்கொள்வதும் மணிக்கு மிகவும் பிடித்தமான வேலை! கையில் தூக்கி, தோளில் சாய்த்தபடி அவனைத் தூங்க வைப்பான்.
ராஜாவின் அம்மாவுக்குத் தனியார் அலுவலகத்தில் வேலை. வேலைக்குச் செல்லும் நேரங்களில் மணியின் அம்மாதான் ராஜாவைப் பார்த்துக்கொள்வாள். காலையில் வீட்டில் விட்டுப்போனால், மாலையில் வந்து அழைத்துச்செல்வாள். சில நேரங்களில் மணியே ராஜாவைத் தூக்கிச் சென்று அவன் வீட்டில் விட்டுவிடுவான் – அடுத்த தெருவில்தான் அவன் வீடு.
ராஜாவும் வளர்ந்து, பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதும் அவன் வீட்டுக்கு வருவது நின்று போனது.
மணிக்குப் படிப்பு எட்டிக்காயாய்க் கசந்தது. ஆனாலும் உழைக்கும் நல்ல மனிதனாக வளர்ந்து, தனியார் கம்பெனி ஒன்றில் தலைமை டிரைவராக வேலை செய்துகொண்டிருந்தான்.
ராஜா மணி அன் கோ கம்பெனியின் முதலாளியின் அலுவலக அறையில் மாட்டியிருக்கும் பெரிய ஓவியத்தில், குழந்தையாக அவரைத் தூக்கிக் கொண்டு நிற்கிறான் சிறுவன் மணி!
“ஐயா, போகலாங்களா?” – வெள்ளை யூனிஃபார்மில் சிரித்த மணியைப் பார்த்து, புன்னகையுடன் தலையசைத்தார் முதலாளி ராஜா!
105
