
அந்த கிராமம் நேபாளத்திற்கும், திபெத்திற்கும் நடுவே இரண்டு நாட்டிற்கும் எல்லையாக இருந்தது . அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் தான்.
சுற்றுலாப் பயணிகளின் சுமையைச் சுமந்து அந்த வருவாயை வைத்துத் தான் அரைவயிற்றுக் கஞ்சியில் அவர்களின் ஜீவிதம் . இடையிடையே பெரு வெள்ளம், மண்சரிவு என இயற்கைப் பேரிடர் வேறு.
எப்பவும் போல் அன்றும் காலை கிராமத்துப் பள்ளிக்குப் போனான் உபேந்திரா. தலைமையாசிரியர் வரப்போகும் பேராபத்தை உணர்ந்து எல்லாக் குழந்தைகளையும் பத்திரமாக வீட்டிற்குத் திருப்பி அதே வேனில் அனுப்பினார்.
வரும் வழியில் எங்கிருந்தோ குழந்தையின் அழுகுரல் கேட்டது. இவன் தேடிப் பார்த்தால் யாரும் அருகில் இல்லாது ஒரு குழந்தை மட்டும் தனியாக அழுது கொண்டு இருக்கத் தன் வீட்டிற்குப் பாசமா தூக்கி வந்தான்.
"என்னடா திரும்பிட்டே, இது யார் குழந்தை" என்று பதறிய அம்மாவிடம் , "ஏதோ ஒரே வெள்ளமாம், பாவம்மா இந்த தங்கச்சிப் பாப்பா வழியில் கிடந்தது, நம் வீட்டில் இருக்கட்டுமா " என்றதும் "சரிப்பா இயற்கை தந்த பரிசுன்னு வைச்சுக்கலாம் " என்றது அந்தத் தாயுள்ளம்.
122
