
குடித்துவிட்டு வந்து ரகளை பண்ணிக் கொண்டிருந்த வேலுவின் இடது கையில் சிக்கியிருந்தது வள்ளியின் தலைமுடி. வலது கையில் ஓங்கிய அரிவாள். ” இன்னிக்கு உன்னை ஒரு வழி பண்ணாம விடுறது இல்லடி” ஆங்காரத்தோடு கூவினான்.
வழக்கம் போல “அம்மாவை விடுப்பா” என்று தடுக்க வந்த பிள்ளை பாபுவிடம் “இன்னைக்கு உங்க அப்பன் ரொம்ப மோசமான மூடுல இருக்கான் நீ ஓடி போய் தப்பிச்சுக்கோ “என்றாள்.
பாபு சட்டென்று ஏணையில் உறங்கிக் கொண்டிருந்த தன் தம்பி 10 மாத கண்ணனையும் தன் மார்போடு இறுக்கிக் கொண்டு “அம்மா நீயும் ஓடிடுமா ” என்று கண்ணீர் வழியும் கண்களோடு வெளியேறினான் .
பாபு பேசியதைக் கேட்டு கோபத்தோடு வேலு அவன் பக்கமாகத் திரும்பியபோது கீழே தான் குடித்துவிட்டு எடுத்த வாந்தியில் காலை வைத்து மடால் என்று வழுக்கி விழ, வலது கையில் ஆங்காரத்தோடு ஓங்கி இருந்த அறிவாள் பலமாக அவனுடைய வலது காலில் விழுந்து கால் வெட்டுப்பட்டது. ரத்தம் பீச்சி அடிக்க வலியில் அலறினான்.
ஒரு கணம் விக்கித்து நின்ற வள்ளி அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு வெளியே ஓடினாள் இவனை ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பக்கத்து வீட்டில் உதவி கேட்க.
129
