
“என்னங்க நம்ம ராசுக்குட்டி முன்னைமாதிரி சரியா சாப்பிட மாட்டேங்குது,பேசவும் மாட்டேங்குது என்று தன் கணவன் ராமுவிடம் புலம்பினாள் பூங்கொடி..உடனே விளையாடிக்கொண்டிருந்த ராசுக்குட்டியை “தம்பி இங்க வா” என்று அவன் அழைத்ததும் ஓடி வந்தான். அவனை அருகில் அழைத்து மடியில் உட்கார வைத்தான். “ஹோம் வொர்க் முடிச்சியா?” “ம்”, என்று ஒற்றை வார்த்தைப் பதிலாகத் தந்துவிட்டு ஓடிவிட்டான்.
பாப்பா பிறந்ததில் இருந்து இப்படி தான் இருக்கான். அது பக்கத்தில கூட வரமாட்டேங்கிறான்.வெறிச்சு பார்க்கிறான்.கவலையா இருக்கு.
“சரி சரி விடு,போகப் போக எல்லாம் சரியாகி விடும். சின்ன புள்ள.இத்தனை நாளா அவனை மட்டும் நல்லா கவனிச்சு வளர்த்தே. சவலை தட்டிருக்கு”..
ஒரு நாள் அவன் ஸ்கூல் விட்டு வந்ததும் பூங்கொடி குழந்தையைப் பாயில் விட்டுவிட்டு கொல்லைப் பக்கம் துணி துவைக்கப் போனாள். ராசுக்குட்டி கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான். வீல் வீல் என அழ ஆரம்பித்தது குழந்தை. சத்தம் கேட்டு அவள் உள்ளே வருவதற்குள் சத்தம் நின்று இருந்தது. பதற்றத்துடன் வந்தவள் அந்த காட்சியைப் பார்த்ததும் அமைதியானாள். ராசுக்குட்டி எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “செல்லக்குட்டி , பட்டுக்குட்டி” என கொஞ்சிக் கொண்டிருந்தான்
வார்த்தைகள் 122
