WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திரு கௌரி சங்கர் எழுதிய “அவன் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு –

வெயில் நேரம். நடை பயிற்சியை விடிகாலை 7.00 மணிக்குள் முடித்து விட வேண்டும். அல்லது மாலையில் 5.00 மணிக்கு தொடங்க வேண்டும்.
மாலை ஐந்து மணி. மரங்கள் அடர்ந்த சாலைகளில் நடந்து செல்வது ஒரு சுகம். “ஓய்வு என்பது நாம் பார்த்து வந்த வேலைக்குத்தான். உடல் இயங்கிக்கொண்டு தான் இருக்கவேண்டும்.” மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகள். குறைந்த பட்சம் தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நான் நடந்து கொண்டு தான் இருக்கிறேன்.
அன்றைய தினம் வீட்டில் இருந்து வெளியில் வந்து, வீடு இருக்கும் தெருவில் இருந்து மூன்றாவது தெருவில் நுழையும்போது, சிறிது தூரத்தில் மக்கள் கூட்டமாக தெருவை ஆக்கிரமித்து நின்று கொண்டு இருப்பது நன்றாகவே தெரிந்தது.
ஏதாவது விபரீதம் நடந்து இருக்கவேண்டும் என்று மனதில் பட்டது. நான் என்னுடைய நடையின் வேகத்தை கூட்டினேன். அடுத்த இரண்டு நிமிடத்தில், நானும் கூட்டத்தில் ஒருவனாகக்கலந்தேன்.
அது ஒரு மூன்று மாடி கட்டிடம். அந்த கட்டிடத்தின் அருகில் அமைந்திருந்த வேறு ஒரு கட்டிடத்தில் இருந்த ஒரு செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஒருவன் நின்று கொண்டு இரு கைகளையும் அசைத்துக்கொண்டு இருந்தான்.
நான் ஒரு மரத்தின் நிழலில் நின்று கொள்ள ஆரம்பித்தேன். நான் நின்று கொண்டு இருந்த இடத்தில் இருந்தே எனக்கு நன்றாக தெரிந்தது. அவன் நீலக்கலர் டீசெர்ட் அணிந்திருந்தான். அதிக அளவு சாயம் போன ஜீன்ஸ் பேண்ட் அவனுடைய மற்றொரு ஆடை.
காரணம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வக்கோளாறால் அருகில் நின்று கொண்டு இருந்த ஒரு பெரியவரிடம் கேட்க, “அவன் தற்கொலை பண்ணிக்க போகிறேன், என்று மிரட்டிக்கொண்டு இருக்கிறான்,” என்றார்.
“என்ன காரணம் என்று தெரியுமா?”
“அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் அவன் பார்த்து வந்த வாட்ச்மன் வேலையில் இருந்து அவனை துரத்தி விட்டார்களாம்.”
ஆர்வம் அதிகமாகி, கண்களை இடுக்கிக்கொண்டு மேலும் கூர்ந்து நோக்கியபோது தான் தெரிந்தது எனக்கு –
- அவன் தான்; அவனே தான்.
அன்று சனிக்கிழமை. வீட்டில் இருந்து பத்து நிமிடம் நடந்து சென்றால் அந்த சிறிய பூங்கா வந்து விடும். அது என்னவோ தெரியவில்லை. சிறு வயது குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும்போது, 60 வயதுக்கும் முந்திய கால கட்டங்களுக்கு மனம் சென்று விடுகிறது. சிறு வயது நினைவுகள் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும். வழக்கம் போல என்னுடைய ஏழு வயது பேரனை விளையாட விட்டு விட்டு நான் அவன் விளையாடுவதையும், மற்ற குழந்தைகள் விளையாடுவதையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகள் ஊஞ்சலில் விளையாடுவது மற்றும் சறுக்கில் சறுக்கி வருவது. ஒரு தடவை ஊஞ்சலில் உயரே, உயரே சென்று விட்டு திரும்பி ஊஞ்சல் தரையை தொடுகிற வரையில் வந்தவுடன், அந்த குழந்தைகளின் முகங்களில் தெரியும் சந்தோஷமும் பெருமையும் இருக்கிறதே – கண் கொள்ளாக்காட்சி தான். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்கிய முகபாவனையை ஏந்திக்கொண்டு இருப்பார்கள்.
படிகளில் போட்டி போட்டு ஏறிக்கொண்டு சறுக்கில் சறுக்கி விளையாடுவதற்கு தான் அதிக குழந்தைகள் ஆசைப்படுகின்றன. ஜூனியர்களுக்கு சவால் விடும் தோரணையில், சறுக்கில் தலைகீழாக சறுக்கி வந்து, பிறகு எழுந்து நின்று, தங்களுடைய டவுசர்களை உதறிக்கொண்டு ரஜனிகாந்த் ஸ்டைலுக்கு லுக் விடும் சீனியர் பையன்களும் வந்து விடுவார்கள். அந்த சீனியர்களின் தலைகள் தரையில் இடித்துவிடுமோ என்று பயத்தில், கூச்சல் போடும் தாய்மார்களின் கதறல்கள் கேட்டுக்கொண்டு இருக்கும். சறுக்கில் ஏற வேண்டுமா அல்லது ஏற வேண்டாமா என்ற மனநிலையில் நின்று கொண்டு இருக்கும் சில குழந்தைகள். மற்றும் அவர்களை உசுப்பி விடும் தாய்மார்கள் அல்லது பாட்டிகள் -இவர்களையும் அங்கு பார்க்கலாம்.
சில பெண் குழந்தைகள் மணல் வீடுகளை கட்டிக்கொண்டு இருந்தார்கள். யானை, குருவி, நாய், மாடு – இப்படி கற்பனை வடிவங்களை மணலில் கொண்டு வர முயற்சிகள் செய்து கொண்டு இருந்தார்கள். இப்படியும் விநோதங்களை அங்கு பார்க்கலாம். அத்தனைக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல இருக்கும், அந்த குழந்தைகளின் உற்சாக கத்தல்கள். நேரம் அதிகம் செலவழித்தாலும், மனதளவில் பயன்கள் அதிகளவில் வந்து சேரும். மனதில் உற்சாகம், நிம்மதி – இப்படியான நேர்மறை உணர்வுகளை தேவைக்கு அதிகமாக சுமந்து கொண்டு வீட்டிற்கு வரலாம்.
சட்டென்று என் முன்பாக அவன் வந்து நின்றான். அவன் எனக்கு முன்பாக வந்த போது, கிட்டத்தட்ட நான்கு நபர்கள் அமரக்கூடிய ஒரு பெஞ்சில் நான் மட்டும் தான் நடுநாயகமாக அமர்ந்து இருந்தேன். அவனுடன் வந்திருந்த எட்டு வயது சிறுவன் மற்றும் ஆறு வயது சிறுமியை விளையாட சொல்லி விட்டு என்னிடம் வந்தான்; கேட்டான்.
“நான் இங்கு உட்காரலாமா?”
“உட்காரு; இடம் தான் நிறைய இருக்கிறதே,” என்று சொல்லி விட்டு அவனை பார்த்து சிரித்தேன். அவனும் பதிலுக்கு சிரித்து வைத்தான்.
அவனுடைய முகம் நிறைய கவலைகளை உள் வாங்கி வைத்துக்கொண்டு இருந்தது முகம் சிறிது உப்பலாகவும் இருந்தது.
“மனைவியுடன் சண்டையாக இருக்கலாம். அல்லது வேலை பார்க்கும் அலுவலகத்தில் முதலாளி திட்டியிருப்பார்.”- என்னை அறியாமலே மனதில் சிந்தனைகள் வளர்த்துக்கொண்டேன்.
ஐந்து நிமிடங்கள் குழந்தைகள் விளையாடுவதை அவனும் பார்த்துக்கொண்டு இருந்தான். நானும் பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் அவனை திரும்பி பார்த்தபோது, என் உதடுகளில் புன்முறுவல் இருக்க, அவன் அப்போதும் இறுக்கத்திலேயே இருந்தான்.
“அவன் உடலளவில் பூங்காவில் இருந்தாலும், மனம் வேறு எங்கோ இருக்கிறது,” என்று என் மனம் சொல்லியது.
திடீர் என்று என்னை திரும்பி பார்த்தவன், வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தான்.
சட்டென்று டிஷர்ட் பாக்கெட்டில் இருந்து தினசரியில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட தாளால் சுற்றி வைத்திருந்த சிறிய பொட்டலத்தை எடுத்து பெஞ்சில் வைத்து பிரிக்க ஆரம்பித்தான்.
என்னுடைய மனம் உஷாரானது. “ஒருவேளை கஞ்சா போன்ற போதை பொருளாக இருக்குமோ – அல்லது பான் பராக் போன்ற சமாச்சாரங்களாக இருக்குமோ?” பொட்டணம் பெரிதாக இருந்தாலும், பொட்டணத்தை அவன் பிரிக்கவும், அதில் இருந்தது இரண்டே இரண்டு பீடிகள் மட்டுமே.
ஒன்றை எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டான். இன்னொன்றை எடுத்து தயக்கத்துடன் என்னிடம் நீட்டினான். நானும் வாங்கிக்கொண்டேன். “சேர்ந்து புகை பிடிப்பது” என்பது புகை பிடிப்பவர்களின் கலாச்சாரம். அந்த பழக்கம் ஒற்றுமையை வளர்க்கும் என்பது புகை பிடிப்பவர்களின் தீராத நம்பிக்கை.
என்னுடைய உடலமைப்பு, சிகையலங்காரம் போன்றவற்றை பார்த்த அவனுக்கு – “இவரும் பீடி வம்சத்தை சார்ந்தவர் தானா?” என்ற சந்தேகம் அவனுடைய மனதை கிளறுவதை என்னால் உணர முடிந்தது.
அவனிடம் கேட்டேன். “ராம்சேட் பீடியா?”
“ஆமாம் சார்.”
“ஏன் மஹாராஜா இல்லையா?”
சிறிது துணுக்குற்ற அவன் கேட்டான் – “சார் நீங்களும் பீடி குடிப்பீங்களா?”
“ஏன், நான் பீடி குடிக்கக்கூடாதா?”
மெதுவாக பேச்சு கொடுக்கத்தொடங்கினேன். அலுவலகத்தில் மனித வள ஆலோசகர் என்ற பதவியை இருபது வருடங்களாக ஏந்திக்கொண்டு இருந்ததால் கிடைத்த அனுபவங்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் எனக்கு மிகவும் உதவும். என்னால் அப்போது சும்மாவும் இருக்க முடியவில்லை.
வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி, திடீர் என்று தனது மனக்குமுறலை என்னிடத்தில் கொட்டுவாள். ஐந்து நிமிடங்கள் செலவழித்து, அவளின் மன இறுக்கத்தை தளர்த்த யுக்திகள் செய்வேன். பெரும்பாலும், அத்தகைய யுக்திகள் கதைகளாகவோ அல்லது உதாரணங்களாகவோ இருக்கும். இறுக்கம் தளர்ந்து செல்வாள். எனக்கு கிடைப்பது ஒரு நிறைவு.
என்னுடைய இயல்பான பேச்சு அவனுடைய இறுக்கம் தளர்வதற்கு உதவி செய்வதை நான் உணர ஆரம்பித்தேன். அது தான் என்னுடைய விருப்பமும் கூட.
நான் பேச ஆரம்பித்தேன். “தம்பி, எனக்கு அப்போது பத்து வயசு இருக்கும். தூத்துக்குடியில் வசித்து வந்த நான் கிராமத்துக்கு வாரத்துக்கு ஒரு தடவை சென்று விடுவேன். கிராமத்தில் விரிந்து பரந்து இருக்கும் கண்மாயில் நீந்தி குளிக்கிறதே ஒரு சுகம். கண்மாயை சுற்றி எட்டு ஆலமரங்கள். பெரிசு பெரிசா இருக்கும். அதன் விழுதுகளை பிடிச்சி தொங்குவோம்; குதிப்போம்; பல்டிகள் அடிப்போம். திருடன் – போலீஸ் விளையாட்டுகள் விளையாடுவோம். ஒரு நாள் ஒரு மரத்துக்கு பின்னாலே, புகை வர்ற மாதிரி தெரியவும், நானும் இன்னொரு நண்பனும் எட்டி பார்க்கவும் தான் தெரிந்தது – எங்களை விட வயதில் மூத்த நான்கு பையன்கள் திருட்டுத்தனமாக பீடி குடித்துக்கொண்டு இருந்தார்கள். சட்டென்று என்னைப்பிடித்த அவர்கள், எரிந்து கொண்டு இருந்த பீடியை என்னுடைய உதட்டுக்குள் சொருகி விட்டார்கள். என்னை அறியாமலே காற்றை உறிஞ்சவும், பீடியின் நெடி சுவாசத்தை நெறுக்கியது. அத்தோடு சரி. என்னவோ எனக்கு புகை பிடிப்பதில் விருப்பம் கிடையாது.”
சொல்லி விட்டு அவன் முகத்தை பார்க்கவும், அவன் சிறிது மனம் தளர்ந்தவனாக மாறியிருந்தான். உதடுகளில் புன்னகை எட்டிப்பார்த்தது.
“அது சரி தம்பி, வீட்டுல சண்டையா?”
“இல்லேங்க சார். நான் ஒரு குடியிருப்புல எட்டு வருசமா வாட்ச்மன் வேலை பார்த்து வருகிறேன். இத்தனைக்கும் சம்பளம் கூட்டிக்கொடுங்கன்னு நான் ஒரு தடவை கூட கேட்டது இல்லை. அவர்களாகவே கொடுக்குறது தான். அந்த சம்பளத்தை நம்பித்தான் என்னுடைய வீட்டில நாலு உசுருகள் இருக்குது. என்னுடைய பொஞ்சாதியும் அந்த வளாகத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து கொண்டு வருகிறாள். குழந்தைகள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாளையில் இருந்து நீ வேலைக்கு வரவேண்டாம்னு இன்னெக்கி காலைல திடீர்னு செக்ரட்டரி சொல்லிட்டாரு. அவருக்கு தெரிஞ்ச ஒரு பையனுக்கு வேலை கொடுக்கப்போறதா இரண்டு வீட்டுக்காரங்க என்கிட்டே சொல்லுறாங்க.”
இன்னும் சிறிது நேரத்தில் அவன் அழுது விடுவான் போன்று இருந்தது. குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற தவிப்பு அவன் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரிந்தது. சற்று முன்பு அவன் கூட்டிக்கொண்டு வந்து விளையாட விட்ட அந்த சிறு குழந்தைகளின் முகங்கள் என் கண்கள் முன்பு வந்து போனது.
“நான் எப்படியாவது உனக்கு உதவி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்”.
சொல்லி விட்டேனே தவிர, அவனுடைய விபரங்கள் எவற்றையும் நான் வாங்கிக்கொள்ளவேயில்லை. பிற்பாடு தான் விபரங்களை நான் வாங்கவில்லை என்று தெரிந்தது.
……
அவனை தெளிவாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், கூர்ந்து என்னுடைய பார்வையை நான் அவன் மீது செலுத்தவும், அவன் அடுத்த நொடியில் என்னை நன்றாகவே தெரிந்து கொண்டான்.
“சார், சார், இங்க பாருங்க சார்; எனக்கு வேலை கொடுக்கலைனா, நான் இங்கிருந்து குதிச்சி செத்து போய் விடுவேன். இவர்கள் தான் என்னுடைய குடும்பத்துக்கு பதில் சொல்லியாகணும்.”
சுமார் அரைமணி நேரமாக போராடிக்கொண்டு இருந்த அந்த குடியிருப்பின் சங்க நிர்வாகிகள், காவல் துறையை சார்ந்தவர்கள், மற்றும் சிலர் – முதலில் என்னை சர்வ சாதாரண பிரஜையாக பார்த்தவர்கள், அடுத்த நொடியில், என்னை ஒரு பிதாமகனாக நினைத்து நெறுக்கிக்கொண்டு வர ஆரம்பித்தார்கள்.
முதலில் தடுமாறிய நான், அடுத்த சில நொடிகளில் சுதாரித்துக்கொண்டேன்.
“சார் உங்களுக்கு அவனை நன்றாகத்தெரியுமா?’
“அதிகம் பரிச்சயம் இல்லை; ஓரளவு தெரியும். நல்ல ஊழியன்.”
“சார், எப்படியாவது அவனை கீழே இறங்கச்சொல்லுங்க. நீங்கள் சொன்னால், அவன் கண்டிப்பாக கேட்பான் என்று நினைக்கிறன்;” – குடியிருப்பு சங்க தலைவர் பேசினார்.
பூங்கா பெஞ்சில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது அவனுடைய மனக்குமுறலை அவன் என்னிடம் இறக்கி வைத்தது நினைவுக்கு வந்தது.
“அவனை நான் இறங்கச்சொல்ல வேண்டும் என்றால், உங்களுடைய நிலைப்பாட்டைப்பற்றி சொல்லுங்கள்.” – இது நான்.
செக்ரட்டரி திடீர் என்று எனக்கு பதில் சொல்ல ஆரம்பிக்கவும், அங்கிருந்த இருபது குடியிருப்பு வாசிகள் அவரை விலாவாரியாக திட்ட ஆரம்பித்தார்கள்.
“கணேசன், எல்லாம் உங்களால் தான். ஒழுங்காக வேலை பார்க்கிறவனை நீங்கள் எப்படி வேலையை விட்டு நீக்க முடியும்? மேலும் அசோசியேஷன் என்று ஒன்று இருக்கும்போது, நீங்கள் மட்டும் தன்னிச்சையாக எப்படி முடிவுகள் எடுக்க முடியும்? அவனுக்கு ஏதாவது ஒன்று ஆகி அவனுடைய குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விட்டால், அப்புறம் நாங்கள் உம்மை சும்மா விடமாட்டோம்.”
பதறிப்போன செக்ரட்டரி சொல்ல ஆரம்பித்தார். “அவனுக்கே வேலை கொடுத்திடுவோம்.”
திடீர் என்று நான்கு குடியிருப்பு வாசிகள் சத்தம் போட ஆரம்பித்தார்கள்.
“அவனுக்கு தற்போது கொடுக்கிற சம்பளத்தை விட மாசத்திற்கு 2000 ரூபாய் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.”
பதறிப்போன செக்ரட்டரி திரு, திருவென்று முழிக்கவும், அவர்கள் மீண்டும் தொடர்ந்தனர். “முடியாதுன்னா சொல்லுங்கள். அவன் கீழே இறங்க மாட்டான்.”
குடியிருப்பின் தலைவரும், பொருளாளரும் கண் அசைக்க, செக்ரட்டரி அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள, இப்போது நான் அவனை மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன்.
“தம்பி, நீ கீழே இறங்கி வந்திடு.”
“சார் வேலை கொடுப்பாங்களா?”
“கொடுத்துட்டாங்க.”
” எப்படி சார் சொல்றீங்க?” – அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.
சட்டென்று எனது சட்டையின் இடது பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து, உயர்த்தி அவனிடம் காட்டி, சொன்னேன். (அன்றைக்கு கூரியரில் என் பெயருக்கு வந்த கடிதம் அப்போது ஆபத்பாந்தனாக உதவியது.)
“இங்கே பாரு. செக்ரெட்டரி கைப்பட எழுதிக்கொடுத்திருக்காரு.”
….
அடுத்த நான்கு நிமிடங்களில் அவன் என் முன்பாக நின்று கொண்டு இருந்தான். குடியிருப்புவாசிகள் தங்களுடைய கண் அசைவுகளால் எனக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு மெதுவாக நகர்ந்து சென்றனர். காவல் துறை துணை ஆய்வாளர் என்னுடைய கைகளைப் பிடித்து குலுக்கினார். “ரொம்ப பிரில்லியண்டாக டீல் பண்ணீட்டிங்க சார்.”
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அவருடைய ஜீப்பில், என்னையும், அவனையும் ஏற்றிக்கொண்டு செல்ல ஆரம்பித்தார். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு ஹோட்டல் முன்பாக ஜீப்பை நிறுத்திவிட்டு, அவரும் நானும் உள்ளே சென்றோம். அவன் ஜீப்பில் இருந்தான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தோம்.
துணை ஆய்வாளர் நான் மட்டுமே கேட்கும்படிக்கு சொன்னார். “சார், நீங்கள் கடவுள் மாதிரி வந்து பிரச்சனையை சரி செஞ்சிட்டிங்க. இவன் மட்டும் இன்னெக்கி ஏடாகூடமா பண்ணியிருந்தான்னா நான் பலருக்கு பதில் சொல்லியிருந்திருக்கணும். நான் புள்ளகுட்டிக்காரன். எனக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. மனசு நொடிஞ்சி போயிருப்பேன். ரொம்ப ரொம்ப நன்றி சார். “
குடியிருப்பு வாசலில் அவனை இறக்கி விட்டவர், அவன் கையில் நான்கு பிரியாணி பொட்டலங்களை கொடுத்தார். ஒரு இனிப்பு பார்சலையும் கொடுத்தார். “தம்பி, நடந்ததை அப்படியே மறந்திடு. மனசுல எதையும் வச்சிக்கிடாமல், குடும்பத்தோடு சந்தோசமா சாப்பிடு. உன்னுடைய வேலைக்கு நான் கியாரண்டி.”
வேலை மீண்டும் கிடைத்துவிடும் என்ற சந்தோசம் மற்றும் மாதத்திற்கு ரூபாய் 2000 கூடுதலாக கிடைக்கும் என்ற சந்தோசம் இரண்டும் இணைந்து அவனுடைய கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தன.
என்னுடைய மனது நிறைந்து வழிந்தது.
என் தரப்பில் நான் அவனுக்கு வேறு ஒரு பொட்டலத்தை தந்தேன். அவன் ஆர்வத்தோடு பொட்டலத்தை பிரிக்கவும், பொட்டலத்தில் “ராம்சேட்” பீடிக்கட்டுகள் இரண்டும் “மஹாராஜா” பீடிக்கட்டுகள் மூன்றும் இருந்தன.
[13:08, 9/10/2026] Gowrishankar: அ. கௌரி சங்கர்
திரு அ. கௌரி சங்கர் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற பின்னர், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் போன்றவற்றை எழுதி வருகிறார். அமேசான் தளத்தில், 260க்கும் அதிகமான புத்தகங்களை கிண்டில் (Kindle) மின் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். இவருடைய சிறுகதைகள் மற்றும் மைக்ரோ கதைகள் தினமணி கதிர் வார இதழ்களில் வெளிவந்துள்ளன.
குவிகம் பதிப்பகத்தார நடத்திய குறும்புதினம் போட்டி, மதியொளி ஞான சரஸ்வதி – உத்திராடம் புக்ஸ் நடத்திய சிறுகதை போட்டி, விடியல் பதிப்பகத்தார் நடத்திய சிறுகதை போட்டி, பனிப்பூக்கள் – மின்னசோட்டா, கலிபோர்னியா மின்தளம் நடத்திய சிறுகதை போட்டி மற்றும் குவிகம் சார்பில் நடந்த லலிதா ஈஸ்வரன் சிறுகதை போட்டி போன்றவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றுள்ளார். இவர் குவிகம் பதிப்பகத்தார் மூலமாக “சுட்டு விடும் தூரம்”” என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். மேலும் G2 பதிப்பகம் மூலம் சதுரங்க வலை என்ற குறுநாவலை வெளியிட்டுள்ளார். சூலினி சக்கரம் என்ற மின்புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

அ. கௌரி சங்கர்
திரு அ. கௌரி சங்கர் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற பின்னர், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் போன்றவற்றை எழுதி வருகிறார். அமேசான் தளத்தில், 260க்கும் அதிகமான புத்தகங்களை கிண்டில் (Kindle) மின் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். இவருடைய சிறுகதைகள் மற்றும் மைக்ரோ கதைகள் தினமணி கதிர் வார இதழ்களில் வெளிவந்துள்ளன.
குவிகம் பதிப்பகத்தார நடத்திய குறும்புதினம் போட்டி, மதியொளி ஞான சரஸ்வதி – உத்திராடம் புக்ஸ் நடத்திய சிறுகதை போட்டி, விடியல் பதிப்பகத்தார் நடத்திய சிறுகதை போட்டி, பனிப்பூக்கள் – மின்னசோட்டா, கலிபோர்னியா மின்தளம் நடத்திய சிறுகதை போட்டி மற்றும் குவிகம் சார்பில் நடந்த லலிதா ஈஸ்வரன் சிறுகதை போட்டி போன்றவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றுள்ளார். இவர் குவிகம் பதிப்பகத்தார் மூலமாக “சுட்டு விடும் தூரம்”” என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். மேலும் G2 பதிப்பகம் மூலம் சதுரங்க வலை என்ற குறுநாவலை வெளியிட்டுள்ளார். சூலினி சக்கரம் என்ற மின்புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.
