
(WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய “வாராயோ என் தோழி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு)
அன்று மாலை வீடு திரும்பிய அரவிந்த், “அம்மா ! இன்னிக்கு என் கூட சேப்பாக்கில் ஐபிஎல் பார்க்க வர்ரீங்களா?”என்றான். சுகன்யாவுக்கோ பயங்கர ஆச்சர்யம் .
“என்னப்பா என்னையா கூப்பிடறே ?” என்றாள் .
“ஆமாம்மா, என் பிரண்டுக்கும் எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தேன். ஆனால் அவன் இன்னிக்கு வரலைன்னு சொல்லிட்டான், ” என்றான் .
அவள் மகனுக்கு அவளை விட அவன் அப்பாவிடம் பிரியம் அதிகம். வழக்கமாக வீட்டில் கிரிக்கெட் பார்க்கும் போதே, அப்பாவிடம் மகன் ஸ்கோர் கேட்பதும், மகனிடம் அப்பா சில ஊகங்களைக் கேட்பதும் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
சில சமயங்களில் அப்பா பிள்ளை என்பதை மீறி நண்பர்களுக்குள் சண்டை வருவது போல் இங்கும் இருவரும் சூடாக விளையாட்டைப் பற்றி விவாதம் செய்வதும் நடக்கும். ரசித்தபடி கடந்து விடுவாள் சுகன்யா.
ஆனால் அப்பாவுடன் எல்லா விஷயங்களையும் ஷேர் செய்வான்.
அப்பாவை ஏன் கூப்பிட வில்லையாம். இவன் கூப்பிட்டானாம். அவர் தமக்கு ஏதோ வேலை இருப்பதாகச் சொன்னாராம் .
முன்பெல்லாம் எல்லா மகன்களைப் போல அம்மா பிள்ளையாகவே இருந்தான் அரவிந்த்.
பதின்ம வயது நெருங்க, நெருங்க கொஞ்சம் இடைவெளி வர ஆரம்பித்து, அவன் படிப்பிற்காக வேறு மாநிலக் கல்லூரியில் சேர்ந்து ,விடுதியில் தங்கிப் படித்து முடித்து, இப்போது சென்னையிலேயே வேலை கிடைத்துப் பணிக்குச் சென்று வருகிறான். இந்த நாலு வருடப் பிரிவு அம்மா பிள்ளை இருவரின் இடையே ஒரு பெரிய பிளவையே ஏற்படுத்தி விட்டது எனலாம்.
அலுவலகம் சென்று வந்ததும் தன் அலை பேசியிலேயே மூழ்கி விடுவான்.
இவள் சாப்பிட அழைத்தால் உடனே வர மாட்டான். இவள், “வேளையோடு சாப்பிடுப்பா,” என்று கூறினால், எரிப்பது போல் ஒரு பார்வை பார்ப்பான்.
எடை போடுகிறது என்று சரியாகச் சாப்பிடுவது இல்லை. இவள் ஏதாவது சொன்னால், “உனக்கென்ன தெரியும்,” என்று பார்வையிலேயே சொல்வான்.
இவள் மேலும் ஏதாவது சொன்னால், “ஓ யூ டியூபுல, வாட்சப்பில வர்ரதை எல்லாம் எனக்குச் சொல்லாதீங்கம்மா, ” என்பான் கிண்டலாக.
சில சமயங்களில் இவளே தோழமையாகச் சென்று பேசினாலும் முகச் சுழிப்பே பரிசாகக் கிடைக்கும். எங்காவது நல்ல, கெட்ட நிகழ்வுகளுக்கு அழைத்தால் கூட வர மறுத்து விடுவான். அப்பா வரும் வரை தனது அறையிலேயே பழியாய்ச் சிறை இருப்பான்.
எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ஊரடங்கு தான். ஊரடங்கு காலத்தில் ஆசிரியராக இருந்த அவள் இணைய வழியில் வகுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது.
தொண்ணூறுகளில் பட்டப் படிப்பை முடித்த அவள், தொழில் நுட்பத்தைப் பயன் படுத்த அதிகச் சிரமப் பட்டாள். அவள் படித்த நாளில் இருந்த யூனிக்ஸ், போர்ட்ரான் எல்லாம் இப்போது இல்லை. அதனால் அவள் தன் மகனின் உதவியை நாடும் நிலை வந்தது. முனைவர் பட்டம் வரை பெற்ற அவளை முன்பு நல்ல அறிவானவள் என்று நம்பியிருந்த மகன், கணிப்பொறி தெரியாத அம்மாவை ஒன்றும் தெரியாதவள் என்று நினைத்து விட்டான் போலும். எல்லாமே அவனிடமிருந்து அவள் கற்றுக் கொண்டு, வெற்றிகரமாக இணைய வழியில் வகுப்பு எடுத்தாள் என்றாலும், அவன் பார்வையில் அவள் ஒன்றும் அறியாதவள் என்று நினைக்கலானான்.
அவள் யோசனையைக் கலைத்தது மகன் குரல்.
“என்னம்மா? நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க ஏதோ யோசிக்கறீங்க?”
“ஒண்ணுமில்லேப்பா. நான் வரேன். உங்க அப்பா வந்தால் நீ கொஞ்சம் சந்தோஷமா இருப்பியோன்னு நினைச்சேன்.”
“ஏம்மா நீங்க வந்தாலும் நான் சந்தோஷமாத்தான் இருப்பேன்,” சொல்லி விட்டு முறுவலித்தான் மகன் .
அப்போது அவன் பேரழகனாக ஒளிர்ந்தான்.
எல்லோரும் அவனை அவள் ஜாடை; அதனால் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள்.
கூரிய மூக்கு. சிவந்த நிறம். அழகில் அம்மாவையே உரித்து வைத்திருந்தான்.
அவளுடைய தோழியர் எல்லாம் அவனை அவளுடைய ஆண் பதிப்பு என்று சொல்வார்கள் .
வெகு காலம் கழித்து அவன் முகத்தில் வந்த புன்னகை அவனை மேலும் அழகாக்கியதால் , அவள் அன்பு மகனைப் பார்த்து ரசித்தாள். மிக உற்சாகமாகக் கிளம்பினர் அம்மாவும் மகனும்.
அவளுக்கு வயது நாற்பத்தைந்தைக் கடந்திருந்தாலும், தோற்றத்தில் முப்பதிற்கு மேல் மதிக்க முடியாது. சுடிதாரில் அவள் சுந்தரியாகத் தெரிந்தாள்.
அன்பு மகன் பின்னால் பைக்கில் அமர்ந்து போகும்போது முழு உலகமுமே சொர்க்கமாகத் தெரிந்தது .
விமான நிலையம் வரை வண்டியில் போய், அங்கே தன் பைக்கை நிறுத்தி விட்டு, மெட்ரோவில் சேப்பாக்கம் செல்வதாய்த் திட்டமிட்டிருந்தான்.
மாலை நேரச் சென்னை நகரம் இது வரை அவள் உணராத வகையில் இன்று புதிய அழகோடு ஒளிர்ந்தது. முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அன்புக் கணவரோடு உலா வந்த அழகைச் சென்னை மீண்டும் அணிந்து கொண்டதோ?
கடல் காற்று தாலாட்டியது.
அதிகம் கூட்டம் இருக்கும் இடங்களில் அம்மாவிற்குப் பாதுகாப்பாக முதுகுப் பகுதியில் கைகளைக் கொடுத்து, பெரிய மனிதனைப் போல அழைத்துப் போகும் தோரணை கணவர் ஷ்யாமை நினைவு படுத்தியது. ரசித்தபடியே, மெட்ரோவில் பயணம் செய்தாள். மகனுடன் எஸ்கலேட்டரில் ஏறும்போது அன்பாகக் கைகளைப் பற்றிக் கொண்டான் மகன்.
நிறுத்தம் வந்ததும்,”ஸ்டேடியம் வரை நடக்க முடியுமாம்மா?” என்று பாசத்துடன் அவன் கேட்டதும் , “முடியும்பா,” என்றாள்.
“கொஞ்சும் மைனாக்களே,” பாடல் காட்சியில் ஏராளமான பாரதியார்கள் முகமூடி போட்டு வருவது போல், அந்த ரோடு முழுவதும் தோனி முகமூடி அணிந்து, மஞ்சள் டீ ஷர்ட் அணிந்து மக்கள் கூட்டம். ஆண், பெண் வயது வித்தியாசமின்றி எல்லோரும் டீ ஷர்ட் அணிந்திருந்தனர்.
டீ ஷர்ட், முகமூடி, CSK கொடி விற்பனை ஆங்காங்கே சூடாக நடை பெற்றுக் கொண்டிருந்தது .
தனக்கு டீ ஷர்ட் வாங்கிக் கொண்டிருந்த அரவிந்த், “அம்மா! நீங்களும் வாங்கிக்கோங்க ,” என்றான்.
“பாருங்க. எல்லோரும்தான் போட்டுக்கறாங்க,” என்றான்.
சுகன்யா தயங்கினாள் .
அவன் சொன்னதால் வாங்கிக் கைப்பையில் வைத்துக் கொண்டாள்.
முகமூடியைப் போட்டுக் கொண்டு பையனுடன் நடந்தபோது சிரிப்பு வந்தது.
இது வேறு விதமான சூழல்!
அக்கம் பக்கம் இளைஞர்கள், யுவதியருடன் ஆடிக் கொண்டு வந்தபோது , அந்த உற்சாகம் இவளுக்கும் தொற்றிக் கொண்டது போல் இருந்தது .
கிரிக்கெட் ஸ்டேடியம், பச்சைப் புல் வெளியுடன், மெய் நிகர்ப் பலகைகளைத் தாங்கி, நட்சத்திர விளையாட்டு வீரர்களுடன் சொர்க்கமாய் மிளிர்ந்தது .
இவர்கள் இருந்த இருக்கைக்கு முந்தைய வரிசையில் ஒரு யுவதி, செக்கச் செவேலென்று, அந்தக் கால குஷ்பூவின் உடல் வாகுடன், லெக்ஷணமான முக வசீகரத்துடன் ஒரு முறைக்கு இரு முறை பார்க்க வைத்தாள். நல்ல அடர்த்தியான முடி கார்மேகமாய் முதுகை மறைத்தது. அவள் அணிந்திருந்த மஞ்சள் உடை, அவள் சிவந்த முகத்தில் எதிரொளி செய்கிறதோ? முகமே அழகிய வண்ணமாக – ஒரு உயிரோவியமாக அவள!
“பிள்ளைக் கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே!” – பாரதியின் பாட்டை நினைவு படுத்தினாள் அவள்! நல்ல வாளிப்பான, மதர்ப்பான உடல்!
மாருதி ஓவியங்களைத் தோற்கச் செய்யும் முக அழகு! ஜெயராஜ் ஓவியத்தைத் தோற்கச் செய்யும் ஈர்ப்பு !
ஆனால் போட்டிருந்த டீ ஷர்ட் உடலுக்குப் பொருந்தாமல், மிக இறுக்கமாக இருந்தது. ஆடல், பாடல் எனத் தோழர், தோழிகளுடன் மகிழ்ச்சியாய், துடிப்புடன் இருந்ததைப் பார்த்தபோது சுகன்யாவுக்கு தனது இளமைக் காலத்தில் சகோதரர்களுடன் கிரிக்கெட் பார்த்தபோது, அத்தை, “ஆம்பளை பசங்களோடு நீ ஏன் உட்கார்ந்து கிரிக்கெட் பார்க்கறே ? வீட்டு வேலை எல்லாம் செய்து பழகு,” என்று கத்தியது நினைவுக்கு வந்தது.
அந்தப் பெண் அரவிந்தை ஓரக்கண்ணில் பார்த்தாற்போல் இருந்தது. இவன் முகத்திலும் லேசான மாற்றம்!
தோழியும், அவளும் அரவிந்தைப் பார்த்து ஏதோ வாய்க்குள் சொல்லிச் சிரித்தனர். அவளும் முகம் பொத்திச் சிரிப்பது போல் இருந்தது .
நண்பர்கள் திரும்பி இவர்களைப் பார்த்து, “ஹாய் அரவிந்த்! ஹாய் ஆண்டி, ” என்று ஸ்நேகமாய்ச் சிரித்தனர். உற்சாக மங்கையர் ஆடுவதைப் பார்த்தால் பாவமாக இருந்தது.
எல்லோர் கைகளிலும் மொபைல்! செல்பி மோகம்!
“உன் பிரெண்ட்சோட போய் உட்கார்ந்துக்கோ அரவிந்த்,” என்று சொல்லியும் அரவிந்த், அவர்களுக்குக் கை காண்பித்து விட்டு இவளுடனேயே அமர்ந்திருந்தது பெருமையாய் இருந்தது.
ஒரு விஷயம் கவனித்தாள். இளம் பெண்கள் முழு ஈடுபாட்டுடன் விளையாட்டைப் பார்க்கவில்லை. அவர்கள் சுயமி எடுப்பதுவும், பதிவிடுவதுமாக இருந்தனரே அன்றி, ஆட்டத்தில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. சிக்ஸ், அவுட், விக்கெட் என்ற சொல்லாடல்களுக்கெல்லாம் பொருள் தெரியாமல் ஆண் நண்பர்களிடம் கேட்டுதான் அறிந்து கொள்கிறார்கள் என்பதை உணர முடிந்தது .
இவளுக்கு இப்போது ஆடும் கிரிக்கெட் வீரர்கள் பெயர் தெரியாததால், மகன் ஒவ்வொருவர் பெயரையும் சொன்னான். மேலும் அங்கிருந்த போர்டில் பெயர்களைப் படித்துத் தெரிந்து கொண்டாள்.
பீல்டிங் செய்ய வரும் வசீகரமான இளம் வீரர்கள் இவர்கள் இருந்த இடத்துக்கு அருகாமையில் வர, ரசிகர்கள் உற்சாகமாய்க் கூச்சலிட்டனர்.
எதிர் அணியின் முதலாளினி – அந்த அழகிய நடிகையும், நிறைய இளம் பெண்கள் புடை சூழ வந்திருந்தது, ஆயர் பாடியில் கோபியர் புடை சூழ ராதை வருவதைப் போல் இருந்தது.
டிவியில் அவரைக் காண்பிக்கும்போதெல்லாம்,”நெஞ்சினிலே, நெஞ்சினிலே ஊஞ்சலே,” என்று ஜானகி குரல் உருகி ஓடியது.
…..
இடைவேளை! அரவிந்த் சென்று ஏதாவது வாங்கி வருவதாகக் கூறிச் சென்றான்.
முன் சீட்டில் இருந்த அழகுப் பெண் மட்டும் சீட்டில் கூனிக்குறுகி அமர்ந்திருந்தது தெரிந்தது .
“என்ன ஆச்சுமா?” என்று, இவள் கேட்டதுதான் தாமதம், அவள் விழிகளில் நீர் !
அப்போதுதான் கவனித்தாள் CSK மஞ்சள் கொடியை வைத்து, தோள் பட்டையை முடியிருந்தாள். மெதுவே அவள் அருகே இவள் சென்று “ஏதாவது பிரச்சினையா ?” என்று கேட்டாள்.
அவள் உடை கிழியக்கூடாத இடத்தில் கிழிந்திருந்ததை அறிந்தாள். நல்ல வேளை! அவளுக்காக வாங்கிய டீ ஷர்ட் கைப்பையிலேயே இருந்தது . ஓய்வறைக்கு அழைத்துச் சென்று போட வைத்தாள். நல்ல வேளை ! மீப்பெரு அளவில் வாங்கியதால் அவளுக்குப் பொருந்திற்று. அந்தப் பெண் கண்ணீருடன் நன்றி சொன்னாள்.
இருவரும் சேர்ந்து வருவதை, பாப் கார்ன் வாங்கி வந்த அரவிந்த் பார்த்து வியந்தான்.
ஓய்வறைக்குப் போய் வந்ததை தோழியிடம் சொல்லியிருப்பாள் போலும் . அவளும் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். அரவிந்தை அந்த அழகுப் பெண் பார்த்த பார்வையில் மின்னல் வெட்டியது .
ஏதோ குறுஞ்செய்தி வந்தது அவனுக்கு! முன் சீட் அழகியிடமிருந்தா?
ஆட்டம் மிக விறுவிறுப்பாகப் போனது. ஒய்ட், lbw இதெல்லாம் அம்மா பேசுவதைக் கண்டு ஆச்சரியப் பட்டான் மகன்.
“அம்மா நீங்க வீட்ல டீவில கிரிக்கெட் பார்க்கவே மாட்டீங்க ?” என்றான்.
“ஆமாப்பா. ஏதாவது வேலை இருக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி பெண்கள் கிரிக்கெட் டீம்ல விளையாடியிருக்கேன்,” என்றாள். வியந்தான் .
கிளம்புமுன் அந்த அழகுப் பெண் தோழியுடன் வந்து நன்றி சொல்லி விட்டுக் கிளம்பியது. ஒரே நொடி! அரவிந்தையும் பார்த்து மின்னலாய் ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றது.
அம்மாவும் , பிள்ளையும் நிதானமாகவே நடந்து சென்றனர் கூட்டத்தை எல்லாம் முன்னே போக விட்டு! சாலை முழுக்க தனியார் டிவி சேனல் காரர்களும் , யூ ட்யூபர்களுமாய் நிறைந்திருந்தனர்.
முகம் முழுவதும் மேக் அப் போட்ட ஒரு பெண், இவர்களை நிறுத்தி, தங்கள் சேனலுக்குப் பேட்டி எடுத்தாள். காமிரா ஒளி வெள்ளத்தில் அம்மாவும் , பிள்ளையும்!
அரவிந்திடம், “இவர்கள் உங்களுக்கு என்ன உறவு?” என்று கேட்க, அவனும் பெருமையுடன், “அம்மா, ” என்றான்.
அவள் வியந்தாள். தான் மூத்த சகோதரி என்று நினைத்ததாகச் சொன்ன பொழுது சற்று வெட்கமாக இருந்தது சுகன்யாவிற்கு! அரவிந்திடம் சில கேள்விகளைக் கேட்டாள். அவன் அழகிய ஆங்கிலத்தில் பிளந்து கட்டினான்.
சுகன்யாவிடம் கேள்விகள் கேட்கப் பட்டபோது, அவள் தன்னுடைய ஊகங்களையும், யாருக்கு அதாவது எந்த அணி வெல்ல வாய்ப்புகள் உள்ளன என்பதையும் தெளிவாக உரைத்த போது, அரவிந்த் தன் அம்மாவை வித்தியாசமாகப் பார்த்ததை உணர முடிந்தது.
அங்கு வந்தவர்களிடையே அம்மா, பிள்ளையாக வந்தது இவர்கள் மட்டுமே என்று கூறி, அரவிந்தைப் பார்த்து,” உங்களுக்கு ஒரு இளமையான, அழகான மற்றும் அறிவான அம்மா கிடைத்துள்ளார். வாழ்த்துக்கள், ” என்றாள்.
அரவிந்தின் நடையில் ஒரு துள்ளல் தெரிந்தது.
மெட்ரோ ரயிலில் ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷனில் கூட்டம் முழுவதும் இறங்கி ரயிலே காலியாகிப் போனது.
அம்மாவும் , பிள்ளையும் மட்டும் அந்தப் பெட்டியில்! அரவிந்த் அம்மா மடியில் படுத்துக்கொண்டான். தலையை வருடச் சொன்னான். முன்பெல்லாம் தூக்கம் வருவதற்காக அம்மாவை வருடச் சொல்வான் குழந்தைப் பருவத்தில். சுகன்யாவுக்கு அந்த நினைவு வந்தது. வருடும் அம்மா கைகளைப் பற்றிக் கொண்டான்.
“தாங்க் யூமா, ” என்றான், கண்கள் மின்ன.
“எதுக்குப்பா ?”
“இன்னிக்கு எனக்குக் கம்பெனி கொடுத்ததற்கு! … அப்பறம் …ஐஷு நீங்க பண்ண ஹெல்ப்பைப் பத்தி எனக்கு மெசேஜ் போட்டாம்மா. “
“யாரு முன் சீட்டில் இருந்த அழகுப் பெண்ணா? உன்னை முன்பே அவளுக்குத் தெரியுமா ?’
அரவிந்த் முகம் சிவந்து மேலும் அழகானது.
“எங்கேயோ பார்த்த மயக்கம்?” என்ற யாரடி நீ மோஹினி பாடலிலே உதித் நாராயணனின் குழைவான குரலில்,” ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன். ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னைப் பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்,” என்ற பாடலும் நினைவில் ஊஞ்சலிட்டது.”
“ஆண்களும் வெட்கப் படும் போது அழகாக இருப்பார்கள்,” என்று எங்கோ என்றோ படித்தது நினைவுக்கு வந்தது.
“எனக்குப் ப்ரொபோஸ் பண்ணினா; அப்புறம் சில்லி ரீசனுக்காகப் பிரிஞ்சோம். எங்க காலேஜ்தான்! இப்போ ரொம்ப நாளுக்கப்பறம் மெசேஜ் போட்டா. அப்பா கிட்டே நீங்கதான் சொல்லணும்.”
நிறுத்தம் வந்தது . இறங்கினர். காற்று சில்லென்று வீசியது. இவ்வுலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணம் உண்டு போலும்.
CSK அன்று வென்றதோ இல்லையோ ஒரு அம்மாவாக தான் வெற்றி பெற்றதாக உணர்ந்தாள், சுகன்யா.

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி
சென்னையில் வசித்து வரும் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி 30 வருடங்களாக இயற்பியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை வானொலியின் இளையபாரதம் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். பள்ளத்தாக்கு இலக்கியப் பேரவை நடத்திய கவிதைப் போட்டிகளில் பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளார். இவரது நாடகங்கள் சென்னை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. சிறுவர் நிகழ்ச்சிகள் மற்றும் மகளிர் நிகழ்ச்சிகள் நிறைய நடத்தியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். ஹைக்கூ உலகம், கரை சேரும் காகிதக் கப்பல்கள், இமயம் தொடும் இயைபுகள், இங்காவின் ஆலாபனைகள், மலர்கள் தீட்டிய வரைவுகள், ஹைக்கூ 2020, இதயம் மீட்டும் இயைபுகள், கரைசேரும் காகிதக் கப்பல்கள், வானம் தொட்ட சிட்டுக்குருவிகள், ஊஞ்சலாடும் ஊசித்தும்பிகள், கவி நானூறு, ஐந்திணை இருநூற்றைம்பது, நத்தையின் வழித் தடத்தில் மின்னல் மற்றும் பலநூல்களில் இவர் படைப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
தனிநூல்களாக 33 நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமது இலக்கியப் பணிகளுக்காகவும், ஆசிரியர் பணிக்காகவும் பல விருதுகளையும் , பட்டங்களையும் பெற்று வருகிறார். ஹைக்கூ அருவி, தகை சால் தன்முனைக் கவிஞர், கவிதைப் பேரொளி, துளிப்பா பரிதி, ஞான சரஸ்வதி உள்ளிட்டவை அவற்றுள் சில. குமுதம், குமுதம் ஸ்நேகிதிதி, வாரமலர், குமுதம் பக்தி, கணையாழி, கலைமகள் போன்ற பல முன்னணி இதழ்களை இவர் படைப்புக்கள் அலங்கரித்துள்ளன. அமெட் பல்கலைக் கழகம், இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.

தாய்க்கும் மகனுக்குமான அழகான நட்பு கலந்த பாசத்தைச் சொல்லும் கதை.