ஆர். வெங்கடேஷ்/ஒழுக்க வாத்தியார்

காலையில் வீட்டைப் பூட்டும்போது, என் மனைவி கேட்பார், “எல்லா ரூம்லயும் லைட் ஆஃப் பண்ணிட்டீங்களா?” இரவு படுக்க போகும்முன், “வாசல் கதவு சாத்தி தாழ்பாள் போட்டுட்டீங்களா?” என்ன செய்வேன் என்று நினைக்கிறீர்கள்? ‘ஆஃப் செய்துவிட்டேன்’ என்றோ, ‘தாழ்பாள் போட்டுவிட்டேன்’ என்றோ சொல்லமாட்டேன். ஓடிப் போய் எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு, மீண்டும் உறுதி செய்து கொண்டு வருவேன்.

இத்தனைக்கும் அந்தக் கேள்விகள் எழுவதற்குச் சற்று நேரத்துக்கு முன்னர் தான் இந்த வேலைகளை நான் செய்திருப்பேன். ‘செய்தேனா’ என்று சந்தேகம். மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்திக்கொள்ள மனம் உந்தித் தள்ளும்.

மற்றவர்களுடைய கட்டுரைகளையோ, கதைகளையோ எடிட் செய்ய உட்காரும்போதே, மனம் அடித்துக்கொள்ளத் தொடங்கும். ஒரு தவறைக் கண்டுபிடித்தேன் என்றால், அடுத்தடுத்த வரியில் இன்னும் இரண்டு தவறுகள் இருக்கும். ஒரு தவறைக் கண்டுபிடித்த மிதப்பில் மற்றவற்றை விட்டுவிடுவேனோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்.

யாரேனும் ‘ஒன்றிணைந்து’, ‘அவைகள்’, ‘கேரளா,’ ‘கர்நாடகா’, ‘ஹரியானா’ என்றெல்லாம் எழுதியிருந்தால், படித்தவுடனே பதற்றம் உருவாகிவிடும். முதல் வேலையாக, ‘ஒருங்கிணைந்து,’ ‘அவற்றை / அவற்றுக்கு,’ ‘கேரளம்’, ‘கர்நாடகம்,’ ‘ஹரியாணா’ என்று திருத்தினால் தான் மனசு நிம்மதி அடையும்.

இந்தப் பதற்றத்துக்கு உளவியலில் ‘Obsessive-Compulsive Disorder (OCD)’ என்று பெயர். பெரும்பாலோருக்கு ஏதேனும் ஒரு ஓ.சி.டி. இருக்கும். தொடர்ச்சியாக பழக்கத்தினாலும், வாழ்க்கை முறையினாலும், மனத்தில் ஆழப் பதிந்து போன நம்பிக்கைகளாலும், இத்தகைய ஓ.சி.டி. ஏற்பட்டுவிடும்.

சாலையில் போகும்போது, ‘ராங் சைட்டில்’ யாரேனும் வண்டி ஓட்டிக்கொண்டு வந்து, அதைப் பார்த்த உடனே கோபம் வந்தால், அதுவும் ஒரு ஓ.சி.டி. தான். அடுத்தவருக்கு ஒரு வேலையைக் கொடுத்துவிட்டு, அவர் அதை தன்னிச்சையாக செய்ய அனுமதிக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை பிடுங்கி எடுத்து ‘மைக்ரோ-மேனேஜ்மென்ட்’ செய்தால் அதுவும் ஒரு ஓ.சி.டி. தான்.

ஆட்டோகாரரிடம் பேரம் பேசுவது, காய்கறிகாரரிடம், கறிவேலைப்பிலை கொசுறு கேட்பது, ஸ்வீட் கடையில் போய் நின்றவுடன், முன்னே நீட்டிக்கொண்டிருக்கும் தட்டில் இருந்து இரண்டு பக்கோடா துகள்களை வாயில் எடுத்துப் போட்டுக்கொள்வது – இவை எல்லாமே ஒவ்வொரு விதமான ஓ.சி.டி.க்கள்.

குறித்த நேரத்தில் ரயிலோ, பேருந்தோ கிளம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது, ‘அப்பாயின்மென்ட்’ கொடுத்த நேரத்தில் மருத்துவர் பார்க்க வேண்டும் என்று விரும்புவது, வங்கிகளும், அரசு அலுவலகங்களும் வரையறுக்கப்பட்ட குடிமக்கள் சாசனங்களுக்கு ஏற்ப சேவைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவது… அவ்வளவு ஏன், தேர்வு அறையில் துளி சத்தமும் கேட்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது உள்பட அனைத்துமே ‘கச்சிதமாக இருக்க வேண்டும்’ என்ற நம் ஓ.சி.டி.கள் தான்.

விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படம் சக்கைபோடு போட்டதற்குக் காரணம், அதில் அம்பி கேரக்டருக்கு இருக்கும் ‘நியாயம், ஒழுங்கு’ என்ற ஓ.சி.டி.கள் தான்.

அரசியலில் தூய்மை, பொதுவாழ்க்கையில் நேர்மை என்றெல்லாம் எதிர்பார்க்கிறோமே, இவையெல்லாமும் ஒருவகை ஓ.சி.டி.க்கள் தான். அவ்வளவு ஏன், ‘தரம்’, ‘தகுதி’, ‘மதிப்பெண்’, ‘கிரேடு’ என்றெல்லாம் பேசுகிறோமே, இவை கூட ஓ.சி.டி.கள் தான்.

நம் மனங்களுக்கு ஓர் ஒழுக்க வாத்தியார், கையில் பிரம்போடு காத்திருக்கிறார். அவர் சின்ன வயதில் இருந்தே பயிற்சி பெற்று வந்திருக்கிறார். எது தவறு, எது சரி என்பது இம்மியும் பிசகாமல் அவருக்குத் தெரியும். அந்தத் துலாக்கோல் கொண்டு, ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு இடத்தையும், ஒவ்வொரு தருணத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு மனிதரையும் அவர் அளவிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரது இலக்கணப்படி எல்லாமே தவறு தான்.

இதுபோல் ஒவ்வொருவர் மனத்திலும் இருக்கும் ஒழுக்கவாத்தியார், பயங்கரமாக ஆட்டம் போடுகிறார். அவர் சொல்வதைக் கேட்டுத்தான், ஒவ்வொருவரும் சமூக நீதிபதிகள் ஆகிக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய ஓ.சி.டி.கள் நல்லதா, கெட்டதா என்று யோசித்துக்கொண்டிருப்பேன். இந்த யோசனையே அபத்தம் என்று தோன்றும். இந்த மதிப்பீடுகளைத் தாண்டி ஒரு கோணம் அல்லது ஒரு பார்வை இருக்கும். ஒரு யதார்த்தம் இருக்கும். அந்தப் பக்கத்து சாளரத்தை மூடிவிட்டு, இந்தப் பக்கத்தில் இருந்து மட்டுமே பார்த்துவிட்டு, தப்பு, சரி என்று எடை போடுவது எவ்வளவு சரி?

இப்போதெல்லாம் ஒரு முயற்சி செய்கிறேன். என் ஓ.சி.டி.களை நானே கடக்க முயல்கிறேன். ‘என்ன விவரம் போதாமல் இப்படி எழுதுகிறார்களே, பேசுகிறார்களே?’ என்று கேட்பதில்லை. ‘அவர்களுக்குத் தெரிந்த விவரம் அவ்வளவு தான்’ என்று ஏற்க பழகிவிட்டேன்.

குறித்த நேரத்தில் வண்டி கிளம்பவில்லையா? சரி, இருக்கவே இருக்கிறது மொபைல் என்று அதில் ஏதேனும் ஒரு ‘டெக் டாக்’ போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ‘ஒன்று நடக்கும்’ என்று எதன் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. ‘முயன்று பார்ப்போம். நடந்தால், பெருமாள் திருவுள்ளம்’ என்று விட்டுவிடுகிறேன்.

இதனால், ஒரு நல்லது நடந்திருக்கிறது. எந்தவிதமான உள்போராட்டங்களோ விமர்சனங்களோ இல்லாமல், நிம்மதி சித்தித்திருக்கிறது. அது போதாதா?

—————–

(c) ஆர். வெங்கடேஷ்

என் கட்டுரைகளைப் பற்றி உங்கள் எண்ணங்களை rvrv30@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்புங்கள். மற்றவர்களோடு கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, இந்த வாட்ஸ் ஆப் சேனல் சுட்டியையும் சேர்த்து அனுப்புங்கள்: https://whatsapp.com/channel/0029Vb8QUULAjPXT0Bvig803

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன