பாலசாண்டில்யன் /அன்பின் எடை

பண்ருட்டியிலிருந்து முந்திரியும் மஞ்சளும் சுமந்து மாம்பலம் வீதிகளில் வியாபாரம் செய்வது வேலுச்சாமியின் பல வருட வழக்கம். பேரம் பேசாத அவரது பிரத்யேக வாடிக்கையாளர்கள், இன்முகத்தோடு உபசரித்து வாங்கிக்கொள்வர். ஆனால் அன்று, தாள முடியாத உடற்சோர்வு அவரை முடக்கியது.
கடைசி மூட்டையையும் விற்ற கையேடு, வழக்கமாக ரங்கநாதன் தெருவில் மகளுக்கு வாங்கும் வளையல்களையும் உடுப்பையும் வாங்க நினைத்தார். ஆனால், சுட்டெரிக்கும் காய்ச்சலில் கால்கள் பின்ன, வேறு வழியின்றி பண்ருட்டிப் பேருந்தில் ஏறி சன்னலோரம் கண்ணயர்ந்தார். ஏமாற்றமும் காய்ச்சல் அனலும் நெஞ்சை அடைத்தது.
திடீரென தோளில் ஒரு மெல்லிய தட்டல். கண் விழித்தால், மாம்பலத்தில் பல வருடங்களாக அவரிடம் முந்திரி வாங்கும் சுந்தரேசன் மாமா நின்றிருந்தார்! “விற்பனை முடிந்ததும் உன் முகம் வாடி இருந்ததைப் பார்த்தேன் வேலுச்சாமி… எப்பவும் மகளுக்கு ரங்கநாதன் தெருவுல வாங்கற பழக்கம் நினைவுக்கு வந்துச்சு. நேரா போய் வாங்கிட்டு வந்துட்டேன்,” என்றபடி புது உடுப்பும் வளையல்களும் அடங்கிய பையை வேலுச்சாமியின் மடியில் வைத்தார்.
காய்ச்சலின் நடுக்கத்தையும் மீறி, அன்பில் வேலுச்சாமியின் கண்கள் பனித்தன.

112

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன