சுந்தர மணிவண்ணன்/ கணக்குப் புத்தகம்

“என்னடி, பில் போட்டாச்சா?” அம்மா அவசரப்படுத்தினாள்.
“இரும்மா. இன்னும் செலக்ஷன் முடியல.”
“என்னடி இது! ஒரு புடவையைத் தேர்ந்தெடுக்க இத்தனை நேரமா?”
அம்மா அலுத்துக்கொண்டாள்.
கவுண்டருக்குப் போனவள் இன்னும் திரும்பவில்லை.
“கார்டைத் தேய்க்கிறதுக்கு என்னடி கஷ்டம்?”
அம்மா முணுமுணுத்துக்கொண்டிருந்தபோதே அவளுடைய நினைவுகள் பாட்டியின் காலத்துக்குப் பறந்தன.
அந்த அக்ரஹாரத்துப் பெண்கள் எல்லோரும் ஒரே தினுசில் புடவைகள் கட்டியிருப்பார்கள். எல்லாமே கோடம்பாக்கம் டிசைன்!
கோடம்பாக்கம் புடவைக்காரர் என்ற புகழுடன் மாணிக்கம், புடவை மூட்டையைத் தலையிலும் கையிலும் சுமந்துகொண்டு அக்ரஹாரத்துக்குள் நுழைந்தால் போதும்; பெண்கள் எல்லோரும் வாசலுக்கு வந்துவிடுவார்கள்.
வீதியின் நடுவிலிருந்த வசந்தியின் வீட்டில் மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்வான் மாணிக்கம்.
பிறகு மூட்டையை அவிழ்ப்பான்.
புடவைகளை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்ப்பார்கள். விலையைப் பலமுறை பேரம் பேசி, ஆளுக்கொரு புடவையைத் தேர்ந்தெடுப்பார்கள். வாங்கியதை அவனுடைய கணக்குப் புத்தகத்தில் எழுதிவிடுவான்.
அடுத்த முறை வரும்போது, முந்தைய கணக்கில் வரவு வைத்துவிட்டு, மீதியைப் பெற்றுக்கொள்வான்.
இப்போதென்னவோ எல்லாமே குறித்த விலை.. வாங்கிய கணத்திலேயே பணமும் பட்டுவாடா!
அம்மாவின் நினைவோட்டத்தை மகளின் குரல் கலைத்தது.
“டெலிவரி எடுத்தாச்சு. போகலாம் வா!”
அம்மா எழுந்தாள்.

122

One Comment on “சுந்தர மணிவண்ணன்/ கணக்குப் புத்தகம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன