
வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறு இருந்தான் செங்கோட்டையன்.
“இந் நேரம் தான் பெத்ததைக் கொஞ்சிட்டு கிடப்பாதானே?” திடீரென்று கேட்டான்.
“யாரு?”
“க்கும், நாம பெத்ததுதான்”
“அவ எங்க கொஞ்சறது? புள்ள பெத்து இரண்டு நாளு கூட ஆவலியே! வலியில தான் இருப்பா” வலியை தன்னில் உணர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
ஒரே பெண் சீதா, தான் விரும்பியவனுடன் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்து கொண்டு விட்டாள். செங்கோட்டையன் அத்துடன் அவள் உறவு கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.
போன் செய்தால் எடுக்க மாட்டார்களென்று, தனக்குக் குழந்தை பிறந்த செய்தியைச் சீதா சொல்லி விட்டிருந்தாள்.
செய்தி கேட்டதிலிருந்தே தாய் மனசு பரபரத்தது. கணவன் என்ன சொல்லப் போகிறான் என்று காத்துக் கிடக்கிறாள்.
செல்வியின் முகத்தைப் பார்த்துவிட்டு, மடமடவென்று உள்ளே போன செங்கோட்டையன் கையில் ஒன்றும், தோளில் ஒன்றுமாய் பைகளுடன் வந்தான். “இப்படித்தான் உன்னையும் பாத்தோம்” னு சொல்லிட்டு வரேன்.”
“பையில என்ன?”
“தோட்டத்துக் காய்களும், சீம்பாலும், மாப்பிள்ளைக்குத் துணியும்” என்றான்.
“எனக்கும் அவகிட்ட கேக்க வேண்டியது இருக்கு” என்று உள்ளே போன செல்வி திரும்பி வந்தபோது அவள் கைகளில் புடவையும், குழந்தைக்குப் போடும் வெள்ளிக்கொலுசும், தண்டையும் இருந்தன.
129
