உமா ஸ்வாமிநாதன்/”ஈன்றவள் ஏக்கம் “

(WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி உமா ஸ்வாமிநாதன் எழுதிய “ஈன்றவள் ஏக்கம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு)

ராகவன் மாமா ரொம்ப சோகமா இருந்தார். சாப்பிடவே பிடிக்கவில்லை.

அவர் மனைவி, லட்சுமி மாமி, “ஏன்னா? தட்டுல அன்னம் பரிமாறி, இவ்ளோ நேரமாச்சு. என்ன யோசிக்கறேள்?” என்று கேட்டாள்.

“ஒண்ணுமில்லை; யார் மேல் குறை சொல்வது?”

“இப்போ நம்ம பிள்ளைகள் வந்து போனதும், கீழாத்து மாமா வாத்தில்
நடந்ததும் ஒப்பிட்டு பார்க்காதீங்க,” என்றாள்.

இவர்கள் வீடு கொஞ்சம் பெரியது. கீழே நான்கு குடுத்தனங்கள்; மாடியில் ராகவன் மாமாவும், மாமியும் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரு பிள்ளை, ஒரு பொண்ணு. கல்யாணமாகி வெளி நாட்டில் இருக்கிறார்கள். வருடா வருடம் கண்டிப்பா வந்து விடுவாங்க. வந்தா வீடே கலகலப்பாயிடும்.

இரண்டு சம்பந்திகளுக்கும் முன்பே சொல்லி, இங்கே வரவழைத்து விடுவாள் லஷ்மி மாமி.

குழந்தைகள் இருப்பது வருடத்திற்கு இந்த ஒரு மாதம் தான். நாம் எல்லாரும் ஒண்ணா ஒரே இடத்தில் இருந்தா எல்லாரும் குழந்தைகளோடு ஒருமாதம் இருக்கலாம்.

“இங்கே வந்து விடுங்கோ. சம்பந்தியா சொல்லல. ஒரு தோழியா சொல்றேன்,” என்று சொல்லி இரண்டு சம்பந்திகளையும் பிள்ளை, பொண்ணு வருவதற்கு முதல் நாளே வர வழைத்து விடுவாள்.

அவர்களும் தனியா இருப்பதால் இப்படி சேர்ந்து இருப்பது பிடித்தது.

அந்த நாட்கள் பூரா தினம் ஒரு பண்டிகை போல் எல்லாம் பண்ணி அசத்துவாள் லஷ்மி மாமி.

அதோடு உறவினர்கள் வீடுகள் அனைத்திற்கும் போய் வர சொல்லி இவர்கள் வருவது பற்றி முன்பே சொல்லிவிடுவாள். அதோடு, குலதெய்வம், இஷ்ட தெய்வம்னு கோவில்கள் ப்ரோக்ராம் இருக்கும்.

கீழ குடுத்தனக்கார மாமியிடம் ( அவர்கள் கேட்டரிங் நடத்துபவர்கள்) ஒரு மாதத்துக்கான லஞ்ச் மெனுவும், ராத்திரி சப்பாத்தி சைடிஷ்ம் முன்பே சொல்லி முன் பணமும் கொடுத்து விடுவாள். கூடவே ஸ்பெஷல் ஐட்டம் அவர்கள் கேட்டரிங்ல போட்டதும் சேர்ந்து வரும்.

இல்லாவிட்டால் லஷ்மி மாமி சமையலறையிலேயே இருக்க வேண்டி இருக்கும். பொண்ணு, பேரக்குழந்தை களோடு இருக்க முடியாது.

வீட்டில் பெரிய மொட்டை மாடி இருப்பதால், இன்னொரு குடுத்தனம் இருப்பவர்களுக்கு சலுகை வடாம் போட்டு அவர்கள் வடாம் வியாபாரமும் நடக்கும்.

அவர்களிடம் சொல்லி, குழந்தைகள் ஊருக்கு எடுத்து செல்ல போட்டு தர முன்பே சொல்லி விடுவாள்.

அடுத்து ஊருக்கு போகும் முன், ஒருவாரம் எல்லா ப்ரோக்ராமும் முடித்து ஷாப்பிங் போவது நடக்கும்.

குழந்தைகளுக்கு வெயில் காலத்திற்கு தகுந்தவாறு பழம், ஜூஸ், நீர் மோர், பானகம், எலுமிச்சை ஜூஸ் எல்லாம் பிரிட்ஜ்ல் இருக்கும். பெப்சி, கோக்லாம் கிடையாது.

பேத்தியை விட்டு தினம் சாமி விளக்கேத்தி சுலோகம் சொல்லி தினம் ஒரு பாட்டு அம்பாளுக்கு பாட சொல்லுவாள். பேரனுக்கு பூணுல் போடணும், அதற்கு அடுத்த வருடம் ஏழாவது வயதில் போடணும்.
ஏசி டீலக்ஸ் வேன் ஒரு மாதத்திற்கு புக் பண்ணியாச்சு. ராகவன் நண்பரின் ட்ராவல்ஸ் அது.

ராகவன் மாமா, மாமி, இரண்டு சம்பந்திகள், மாமா, மாமி, பிள்ளை, மாட்டு பெண், பொண்ணு, மாப்பிள்ளை, பொண்ணுக்கு இரண்டும் பிள்ளை, பிள்ளைக்கு ஒரு பெண், ஒரு பிள்ளை அவர்கள் எல்லாம் சேர்ந்து போக அந்த வண்டி சௌகர்யமாக இருந்தது. வண்டியில் பாட்டு, சுலோகம், வேணும்னா படமும் பார்க்க நல்ல வசதி; குழந்தைகள் ஒன்றாக சிரித்து பேசி மகிழ்வது இந்த விடுமுறையில் மட்டும் தான்.

பேத்தி, ஒவ்வொரு நாளும் தான் போன இடம் போட்டோ, வீடியோ எல்லாம் அழகாக தன்னுடைய மடிக்கணினியில் சேமித்தாள்.

லஷ்மி மாமி, இரண்டு மாதத்துக்கு முன்பே அழகாக ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் செய்திருந்தாள்.

ராகவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். எப்படி இப்படினு? எவ்ளோ யோசித்து செய்துருக்கா! துளி கூட டென்ஷன் இல்லாமல்.

“லஷ்மி, எவ்வளவு செலவு ஆகுது தெரியுமா?” என்பார்.

விடுங்கோ – எப்படி இருந்தாலும் நம்முடைய சொத்து நம்ம குழந்தைகளுக்கு தான். “அதை நாம் இருக்கும்போதே செலவழிச்சா நாமும் சந்தோஷமா இருக்கலாம்.”

“போகும்போது எதை எடுத்து செல்லப்போறோம். அவர்கள் சின்ன குழந்தையாக இருக்கும்போது எதுக்காவது கணக்கு பார்த்தோமா? அப்புறம் குடும்பம்னா ஒரு ஒட்டுறவே இருக்காது.”

“அதில்லை லஷ்மி, ரெண்டு பேரையும் ஒரே மாதிரி படிக்க வச்சு, செலவு பண்ணி கல்யாணம் பண்ணோம், அவாளும் நல்ல வேலையில் இருக்கா.
ஒரு மாதம் வேன்க்கே ஒன்றரை லட்சம் ஆச்சு, அப்புறம் கேட்டரிங் சாப்பாடு செலவு.”

“கொஞ்சம் சும்மா இருங்கோ! இப்படி எல்லாம் கணக்கு பார்க்கக் கூடாது. அவா சாப்பாடுக்குனு கொடுத்தா வாங்குவீங்களா? உங்களுக்கு கோவம் வராதா?”

“பிள்ளை, பொண்ணு ரெண்டு பேரும் பணம் கொடுக்க தயாரா இருந்தா. நான்தான் இந்த சந்தோஷத்தை கெடுக்காதீங்க. ஒரு தேவை வரும்போது நானே கேக்கறேன் என்று சொல்லிட்டேன்.”

ராகவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது! “எப்படி இவளுக்கு மட்டும் எல்லாவற்றிலும் நல்லதே கண்ணில் படுது? அதே சமயம் எந்த ஆசை, சபலம் எதுவுமில்லாமல் தன்னை சுற்றி எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறாள். தனக்கென எதுவும் யோசிச்சதே இல்லை!”

கோலாகலமாக கொண்டாட்டமாக விடுமுறை முடிந்து, பேக்கிங் ஆகி கிளம்பற நேரம் லஷ்மி மாமிக்கு கண்ணு கலங்கிடும். மறுபடியும் எப்போ பார்ப்போம்னு?

அன்று பூஜை அறைக்கு போய் கண் கலங்கி குழந்தைகள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்னு வேண்டி எல்லார்க்கும் குங்குமம் வீபூதி இட்டு விட்டாள்.

எல்லாரும், அப்பா அம்மாக்களுக்கு நமஸ்காரம் பண்ணி கிளம்பினார்கள். அன்றே அப்படியே இரண்டு சம்பந்திகளும் கிளம்பினார்கள். ஏர்போர்ட் போய் அப்படியே கிளம்பியாச்சு.

சம்பந்தி மாமிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. முன்பு இருந்த வீடு பராமரிக்க முடியலனு வித்துட்டு பிளாட் வாங்கிண்டா. அந்த வீடு பெரிய வீடு.

அந்த வீடு இருந்தா இதே மாதிரி நாமும் பிள்ளைகளை சம்பந்திகளை இங்கு வரவழைச்சு கொண்டாடி இருக்கலாம் என்று தோன்றியது.

ஒரு மாதம் வீட்டில் குழந்தைகளின் சத்தம், சிரிப்பு, பாட்டு, ராத்திரியில் டிவி சத்தம். மொட்டை மாடியில் அட்டகாசம், இதெல்லாம் அடுக்கு மாடியில் முடியாது. கம்பளைண்ட் வரும்.

எல்லாரையும் அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்ததும் வீடு வெறிச்சென்றிருந்தது. தினம் போன் வீடியோ கால் பேசினாலும் மனம் ஏங்கியது பேரக் குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க.

மறுநாள்,

கீழே இன்னொரு குடுத்தனம் இருக்கறவா – ஒரு குடும்பம் – வயதான தம்பதிகள்; ஒரு பிள்ளையும், ஒரு பொண்ணும்,

அவா பொண்ணு கல்யாணமாகி வேற எங்கேயோ இருக்கிறாள். அவா பிள்ளை வாசு; ஏதோ பிசினஸ் பன்றான். வீட்டுக்கு எப்போ வருவான் எப்போ போவானு தெரியாது. அவர்களுக்கு ஏதாவது தேவைனா அவா பொண்ணு வந்து பார்த்து விட்டு போவாள். இங்கு குடுத்தனம் இருப்பது, அவர்களுக்கு ரொம்ப பாதுகாப்பாக இருந்தது.

அன்று காலையிலிருந்து இருவரும் ரொம்ப கவலையாக இருந்தார்கள். என்னனு கேட்டா ஒன்றுமில்லைனு சொல்லி விட்டார்கள்.

ராகவன் – “லட்சுமி மாமியிடம் கீழ் வீட்ல அவா சாப்பிட்டாளானு தெரில என்னமோ அவா முகமும் சரி இல்ல? கேட்டா சொல்லல; நீ போய் ஏதாவது சாப்பிட கொடுத்து போய்ப் பார்த்துட்டு வா. நானே போட்டுண்டு சாப்பிட்டு விட்டு நானும் கீழே வரேன்,” என்றார்.

லட்சுமியும் சூடா சாதம், ரசம் கொஞ்சம் காய் எடுத்துண்டு போனா. லட்சுமி பண்ற ரசம் ரொம்ப பிடிக்கும் அவாளுக்கு.

ஏதோ முடியல ரெண்டு பேருக்கும். அதை விட ரொம்ப கவலையா இருந்தா! .அவாளை சரி பண்ணி நீங்க சாப்பிடுங்கோ; மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் னு சொல்லி சாப்பிட வைத்தாள்.

பிறகு என்ன விஷயம்னு பார்த்தா பிள்ளை இரண்டு நாளாக வீட்டுக்கு வரல!

பிஸினஸ் க்கு வாங்கின கடன் கொடுக்க முடியாம கடன் கொடுத்தவன் கெடுபிடியில் வயதானவர்களை விட்டுட்டு இவன் எங்கேயோ தலைமறைவா போயிருக்கான்.

போன் பண்ணா எடுக்கல. கடன் கொடுத்தவர்கள் இவர்களை வந்து ரொம்ப மிரட்டி தொந்தரவு செய்கிறார்கள். பிள்ளையை என்ன பண்ணுவார்களோனு பெற்றவர்களுக்கு பயம் வேறு.

அதற்குள் ராகவனும் சாப்பிட்டு விட்டு கீழே வந்தார். விவரம் அறிந்து அவா பொண்ணுக்கு போன் பண்ணார். அவா மாமியார் தான் போன் எடுத்தா; “அவ வேலையா இருக்கா; இப்போ பேசமுடியாது,”னு சொல்லிட்டா.

இவர்கள் இரண்டு பேரையும் பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது. கொஞ்சம் நேரம் இருந்து விட்டு பக்கத்து போர்ஷன்ல இருக்கறவங்க கிட்டே கொஞ்சம் பாத்துக்க சொல்லி விட்டு, ஏதாவது வேணும்னா கூப்பிடுங்கனு மாடிக்கு வந்தா.

ராத்திரி ஒரு பத்து மணி இருக்கும். பக்கத்து வீட்ல இருக்கறவா மாடிக்கு வந்து, “ராகவன் மாமா, மாமா – சீக்கிரம் வாங்கோனு கூப்டா!”

போய் பார்த்தா – அந்த அம்மா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. அந்த மாமா பரிதாபமா உட்கார்ந்து அழுதுண்டுருந்தார்.

எதிர் வீட்டில் இருக்கும் ஒரு டாக்டர் கூப்பிட்டு வந்து பார்க்க சொன்னால், மாரடைப்பின்னால் இறந்திருக்காங்க. ரொம்ப மன அழுத்தம் இருந்திருக்குனு சொன்னார்.

பிள்ளைக்கு போன் பண்ணா, எடுக்கல? பொண்ணுக்கு போன் பண்ணா, எடுக்கல; மறுபடியும் இரண்டு, மூன்று தடவை பண்ணிய பிறகு எடுத்ததும் தகவல் சொன்னார்.

ராகவன் மாமா, போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருக்கிற தன் நண்பன் ரத்தினம் கிட்டே விவரம் சொல்லி அவா பிள்ளையை தேடச் சொன்னார்.

ராத்திரி பூரா யாரும் தூங்கலை. மற்ற அக்கம் பக்க குடுத்தனக்காரர்கள் எல்லாரும் ராத்திரி பூரா உட்கார்ந்து இருந்தார்கள்.

காலையில் ஆறு மணிக்கு பொண்ணு வந்தா. வந்து அழுது கொண்டிருந்தா. நேரமானதால் சாஸ்திரிகளுக்கு சொல்லி மற்ற வேலை களை செய்ய ஏற்பாடு ஆனது.

கொஞ்ச நேரத்தில் போலீஸ் ஜீப் வந்தது. ராகவன் மாமாவின் நண்பர் ரத்தினம் வாசுவை அழைத்துக் கொண்டு வந்தார். ஏதோ ஒரு லாட்ஜ்ல் தங்கி இருந்தான் என்றார் போலீஸ் நண்பர்.

வாசுவின் அக்கா, அவனை அடி அடினு பின்னிட்டா; உன்னால தாண்டா அம்மா போய்ட்டானு.

சாஸ்திரி வந்து ஒன்பது மணிக்கு எல்லாம் முடிந்தது. ராகவன் மாமாவும் கூடவே போய் எல்லா உதவியும் பண்ணிணார்.

வீட்டுக்கு வந்து ஸ்நானம் பண்ணிட்டு சாப்பிட உட்கார்ந்தா மனம் ரொம்ப பாரமா இருந்தது. பிள்ளை கூடவே இருந்தும் பெத்தவங்களை சரியா பார்த்துக்காம அவங்க இறந்ததுக்கும் அவனே காரணமானது ரொம்ப மனசு வலித்தது.

இப்போ லட்சுமிக்கும் ஒரு பயம் வந்து இருந்த நிம்மதியும் போச்சு. போய் பூஜைரூம்ல உட்கார்ந்து வேண்டிண்டுருந்தா.

ராத்திரி தூக்கத்தில் முழித்து, தண்ணி குடிக்க எழுந்த ராகவன் மாமா, பக்கத்தில் லஷ்மி இல்லாதது பார்த்து தேடிக் கொண்டு வந்தார். பூஜை அறையில் கண்ணில் நீரோடு அமர்ந்திருந்தாள்.

“என்ன லஷ்மி? என்ன ஆச்சு?”

“மனசு வலிக்குது கொஞ்சம் பயமாவும் இருக்கு. அந்த மாமா மாமி ரெண்டு பேரும் நிறைய சொல்லிருக்கா – பசங்கள வளர்த்தது எல்லாம்.”

“வாசு, காலேஜ் படிக்கும் போது சேரக்கூடாத நண்பர்களோடு சேர்ந்து படிப்பு, ஆரோக்கியம் கோட்டை விட்டுட்டு பிசினஸ் பண்றேனு மாமி நகை மாமா சேமிப்பு எல்லாம் தொலைத்திருக்கான். வாசு, என்ன பண்ணானு தெரியல. இதெல்லாம் அவா பொண்ணு கிட்ட கூட சொல்லல.”

“இங்க பார் லஷ்மி, நாம் பொண்ணு, பிள்ளை இருவரையும் ஒரே மாதிரி வளர்த்தோம் . ஒரே மாதிரி படிக்க வச்சோம்; எந்த நேரத்தில் சலுகை கொடுக்கணுமோ கொடுத்து, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும் இருக்கோம்.”

“ஆம்பிளை பிள்ளைனு தூக்கி வைத்து கொண்டாடினால் இப்படி பெத்தவங்களே கஷ்டப்படற நிலைமை தான். எழுந்துவா எதுவும் யோசிக்க வேண்டாம். வேணும்னா சொல்லு நாம் போய் குழந்தைகளோடு ஒரு மூணு மாசம் இருந்துட்டு வரலாம்.”

“நிறைய செலவாகுமே?”

“நீ தானே சொன்னே! நாம் சேர்த்து வைத்தது நாமும் சந்தோஷமா இருக்கத்தான்னு. சரி, வந்து படு; எதுவானாலும் நாளைக்கு பேசிக்கலாம்.”

அடுத்த நாள் கீழ இருந்த அந்த பெரியவரின் பெண் வந்தாள்.

“மாமா, அப்பாவை நான் அழைச்சிண்டு போறேன். வீட்டை காலி பண்ணிடறோம்.”

“வாசு எங்கே?”
“அவன் எங்கேயாவது ரூம் எடுத்து தங்கிக்கறேன் என்று சொல்லிட்டான்.”

“அப்பாவை பார்த்துக்கோமா.”

அம்மாவை நினைச்சு எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.

லஷ்மி கையால வாங்கி சாப்பிட்டா. “உன்னோட ரசம் ரொம்ப நன்னா இருக்குன்னு சொன்னா.”

“உங்களுக்கு புண்ணியம். அம்மா சாகும் முன் உங்க கையால சாப்பிட்டது. எனக்கு அம்மாவை பார்த்து பேச செய்து கொடுக்க கொடுப்பினை இல்லை,“ என்று அழுதாள்.

கீழ அந்த வீடு வெள்ளை அடித்து வாடகைக்கு வந்தாச்சு. இந்த தடவை வந்ததும் ஒரு அறுபது வயதில் கணவன், மனைவி – ஒரே பிள்ளை வெளிநாட்டில். இங்கே பக்கத்தில் பெரிய கோவில்கள் இருப்பதால் இங்கு வந்திருக்கிறார்.

இப்போ லஷ்மியும் சுதாரித்து அவர்களோடு பழகி சகஜமானாள்.
“முதுமையின் தனிமைக்கு சிநேகிதம் அவசியம்!”

பண்பாலும் அறிவாலும் நிறைந்த மனைவி கற்றறிந்தவள்; யாருக்கும் தீங்கு நினைக்காத குணம் அமைந்தமையால், முதுமை எய்தியும், நரை விழவில்லை.

இன்றைய காலகட்டத்தில், முதியோர் நிலை கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில்,மருத்துவ வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் இருந்தும் வியாதிகளும் அதிகரித்துள்ளது.

இணையம்,கணினி வலைத்தளங்கள் நிறைய தெரிந்து கொள்ளவும் கற்று கொள்ளவும் முடிகிறது. குழந்தைகள் தங்கள் பெற்றோரின் அன்பையும் தியாகத்தையும், “பெற்றோரின் அன்பு ஒரு விலைமதிப்பற்ற பரிசு” என்பதையும் புரிந்து கொள்வதில்லை.

பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளின் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பும், பாசமும், தியாகமும் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. இளமையோ, முதுமையோ சரியான திட்டமிடல் பல குழப்பதிலிருந்து வெளி வரமுடியும்.

ராகவனும் அந்த கீழ் வீட்டு அம்மா தவறிய நினைப்பிலிருந்து வெளி வந்தார். எல்லாம் மாயை எல்லாம் அவன் நடத்தும் நாடகம். எதுவும் நிரந்தரமில்லை.

“சர்வம் கிருஷ்ணார்ப்பணம்”.

[13:55, 11/10/2026] Gowrishankar: உமா ஸ்வாமிநாதன்

தற்சமயம் பெங்களூருவாசியான திருமதி உமா ஸ்வாமிநாதன் தீவிரமான வாசிப்பாளர். இவர் “நந்தவன பூக்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். “உலக மாநாடு ” நடத்தி வெளியிட்ட புத்தகத்தில் இவருடைய கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதுவரை 1000 க்கும் மேல் சிறுகதைகளும் 300 க்கு மேல் கவிதைகளும் எழுதி இருக்கிறார்.

சில மாத பத்திரிகையிலும், மின்னிதழகளிலும் இவருடைய சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. 20க்கும் அதிகமான தொகுப்பு புத்தகங்களில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

“அனாமிகாவின் மந்திர தந்திரக் கதைகள்” என்ற புத்தகம் குழந்தை களுக்காக வெளியிட்டு இருக்கிறார். Book of recordsக்காக மற்ற தோழிகளுடன் இணைந்து 17 புத்தகங்கள் வெளியிட்டு விருது வாங்கியுள்ளார்.

பிரபலமான எழுத்தாளர்கள் பாலகுமாரன், சாண்டில்யன் பெயர்களில் விருதுகள் வாங்கியது இவருக்கு பெருமைகள் சேர்ப்பதாகச்சொல்லுகிறார்.

“பாரம்பரிய கலைகளும், கதைகளும் ” என்ற புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். “அனாமிகாவின் மந்திர தந்திரக் கதைகள்” என்ற இவருடைய புத்தகத்திற்கு தமிழ்நாடு முத்தமிழ் சங்கம் வழங்கும் எழுத்தாணி விருது கிடைத்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன