
ஏழுமலை,வள்ளி இருவருக்கும் திருமணம் ஆகி 6 வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை கீதா. உடனே அடுத்த வருஷம் பையன் பழனி.
பாச்சான் பாளையம் கிராம பஞ்சாயத்தில் குமாஸ்தா பதவி பூர்வீக நிலத்தில் வரும் கொஞ்சம் வருமானம்.சின்ன வீடானாலும் சொந்த வீடு.வாழ்க்கை நன்றாகத்தான் போனது.ஆனால் விதி யாரையும் விட்டு வைக்குமா என்ன.
கீதா நன்கு படித்தாள், பழனியும்தான்.பாச்சான் பாளையம் ஆரம்பக் கல்வி முடிந்து மேல் படிப்புக்கு மேட்டுப்பாளையம்.
கீதா 11 வது படிக்கும் போதே காதல் வயப் பட்டாள்.அவசரமாய் பஸ் டிரைவரை மணம் புரிந்து நகரத்துக்குப் போய் விட்டாள்.ஏழுமலையின் செல்லப் பெண், சொல்லாமல் போய் விட்டாள்,பெற்றோரிடம் தொடர்பை இழந்தாள்.
பழனி பூர்வீக நிலத்தைப் பணமாக்கி கல்லூரிப் படிப்பு முடித்தான்.உடனே ஏழுமலை தம்பதிகள் அவனுக்குச் சொந்தத்தில் பெண் பார்த்து மணமுடித்தனர்.ஆரம்பத்தில் அந்தப் பெண் நன்றாகத்தான் இருந்தாள்.வள்ளி மேலுலகம் போனவுடன் அவளும் மாறி விட்டாள்.வயதான கிழவனை யார் பராமரிப்பார்கள்.கணவனை நச்சரித்தாள் முதியோர் இல்லத்தில் சேர்க்க. மனம் வெறுத்த ஏழுமலை தன் சொற்ப உடைமைகளை மூட்டையாக்கி தலையிலும் கையிலும் சுமந்து புறப்பட்டு விட்டார். மனித வாழ்க்கை இவ்வளவுதான்.
எங்கே போவது கீதா ஏற்றுக் கொள்வாளா தெரியலை,போய் பாத்தாதான் தெரியும்.
123
