
தூரத்தில் அப்பா வருவதைப் பார்த்தாள் செம்பருத்தி. சந்தோஷம் மனம் நிறையப் பால் பொங்குவதைப் போலப் பொங்கினாலும், சட்டென்று பொங்கும் பாலில் தெளித்த நீராய் ஒரு கணத்தில் அது காணாமல் போனது.
‘பட்டணத்தில் வாழும் மகளைப் பார்க்க இப்படியா அப்பா தலையிலும், கையிலும், பையைச் சுமந்து கொண்டு வந்து நிற்பார்.
புகுந்த வீட்டு ஆட்கள் மதிக்க வேண்டாமா?’ ஒரு கணம் செம்பருத்தியின் மனம் வருந்தியது.
பாஸ்தா, நூடுல்ஸ் என்று நாகரீக உணவு சாப்பிடும் வீட்டில் இவர் கிராமத்துச் சாமான்களைக் கொண்டு வந்து கேவலப்படுத்துகிறார்.
“அட வாங்க சம்பந்தி” வெள்ளந்தியாய் வந்த மனிதரை வாய் நிறைய வரவேற்றார் செம்பருத்தியின் மாமனார்.
மாமியார் அவர் கொடுத்த பொருள்களை வாங்கியவர், “பச்சை வேர்க்கடலை ,சோளம், மொச்சை, இந்த சாமானெல்லாம் பட்டணத்தில் இவ்வளவு அருமையா, இயற்கையா, விளைவித்தது கிடைக்காது சம்பந்தி.”
“இந்தக் குழந்தைகள் இதைச் சாப்பிட்டாலே ஆரோக்கியமா வளருவாங்க. இத விட்டுட்டு பாஸ்தா, கீஸ்தான்னு என்னத்தையோ சாப்பிட்டுட்டு உடம்பை கெடுத்துக்குறாங்க” என் அங்கலாய்த்தார், செம்பருத்தியின் மாமியார்.
மாமியார் பாராட்ட, அப்பாவின் முகமலர்ச்சியைப் பார்த்து செம்பருத்தியின் மனதில் சந்தோஷம் பாலாய் பொங்கியது.
