கஸ்தூரிகுருசாமி/தீபாவளிப் பரிசு

புடவை,சட்டைத் துணி போன்றவற்றை தலையில் சுமந்து தெருத்தெருவாக விற்று வருபவர் கோவிந்தன்.மகள் உமாவை பள்ளி இறுதி வரை படிக்க வைத்து, ஒரு பள்ளி ஆசிரியருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணச் செலவுக்கு தெரிந்தவர்களிடம் கடனாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி இருந்தார்.சிரமப்பட்டு திருமணம் செய்து வைத்தாலும் மகளும் மருமகனும் நன்றாக வாழ்கிறார்கள்.        தீபாவளிக்கு சீர் செய்ய வேண்டுமே என கடுமையாக உழைத்தார்.  இருவருக்கும் துணிமணி, பல காரங்கள்,வெடிகள் எல்லாம் கொடுக்க வேண்டும்.கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து இதோ மகள் வீடு நோக்கி போகிறார்.மருமகன் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரவும், மாமனார் வருவதை பார்த்து ஓடிச் சென்று தலையில் சுமந்து வரும் பொருட்களை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தார். “அப்பா” என அழைத்தபடி உமா வந்து தந்தையை கட்டி பிடித்தாள்.சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து இருக்கும் மாமனாரை பார்த்து “மாமா நீங்க தனியாக ஊரில் இருப்பதை விட இங்கே வந்து விடுங்களேன் ” மாப்பிள்ளை கேட்டார். “ஏன் மாப்பிள்ளை எனக்கு ஊரில் நிறைய வாடிக்கையாளர்கள். தொழில் நன்றாக போகிறது.அதை விட்டு இங்கு வந்து என்ன செய்ய?” “இல்லை மாமா. இதோ முன்பக்கம் உள்ள அறையில் அப்பா காய்கறி கடை வைத்திருந்தார். அப்பாவும் அம்மாவும் இறந்த பின்பு அந்த இடம் அப்படியே இருக்கிறது. நீங்கள் தொழில் நடத்துவதானால் இங்குள்ள மக்கள் வாங்குவார்கள். மேலும் வெயிலிலும் மழையிலும் அலைய வேண்டாம். உமாவுக்கும் மகிழ்ச்சியா இருக்கும்”.

” இல்லை மாப்பிள்ளை. திருமணத்திற்கு வாங்கிய கடன் இருக்கு. அதை கொடுத்த பின்பு வருகிறேன் “.

“அதற்கு நான் வழி செய்கிறேன்” என்று கூறிவிட்டு, மறுநாள் மாமனாரோடு ஊருக்கே போய் அவர் வீட்டை தெரிந்த உறவினருக்கு ஒரு லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டுவிட்டு, கடனை தீர்த்து விட்டு மாமனாரை அழைத்துக் கொண்டு தன் வீட்டில் வந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார்கள். மருமகன் மகனாக மாறியது கோவிந்தனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.  தீபாவளிக்கு நல்ல ஒரு பரிசு கிடைத்தது போல் மகிழ்ந்தார்.

206

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன