
கவுசல்யாவுக்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணம்.
ராம் மோகன் -சீதளாவின் ஒரே செல்லப்பெண் கவுசல்யா. சீதளா சில வருடங்களுக்கு முன், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி இறந்து போனாள்.
அவள் மறைவுக்குப் பின்னர் இவர்களை விட வசதியில் குறைவாக இருந்த சீதளாவின் அண்ணன் குடும்பத்துடன் போக்குவரத்தையே தவிர்த்தார் ராம் மோகன்.
தந்தைக்குத் தெரியாமல் கவுசல்யா தன் தாய்மாமன் சடகோபன் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தாள்.
அவளுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்டவுடன் சடகோபன் குடும்பம் மனதார வாழ்த்தியது.
ராம் மோகன் திருமணப் பத்திரிகையை வேண்டா வெறுப்பாக சடகோபனுக்கு அனுப்பி வைத்தார்.
” ஆமா, இவன் வந்து தங்கமும், பட்டுப்புடவையும் ,சீர் செய்யப்போகிறானாக்கும்”, தன் உறவினர் ஒருவரிடம் கிண்டலாகக் கூறிக் கொண்டிருந்தார்.
திருமண நாள்.
சடகோபன் தன் சக்திக்கு இயன்ற தாய்மாமன் சீர் தாங்கிய இரண்டு மஞ்சள் பைகளுடன் வியர்க்க விறுவிறுக்க, முன்னே செல்லும் மனைவியைப் பின்தொடர்ந்தார்
” எங்க வழக்கப்படி, பொண்ணோட தாய்மாமன் சீர் வாங்கிட்டு, அதுல இருக்குற புடவை உடுத்தித்தான், தாலி கட்டுற சடங்கு. கவுசல்யாவோட தாய்மாமனை மேடைக்குக் கூப்பிடுங்க சம்பந்தி”.
ராம் மோகனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
தாய்மாமன் கொடுத்த சின்னாளப் பட்டுடுத்தி, மாப்பிள்ளை தாலி கட்ட, விழிகளால் தன் மாமனாருக்கு நன்றி பகிர்ந்தாள் கவுசல்யா.
