சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/அப்பாவின் ஒருநாள்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “அப்பாவின் ஒருநாள் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

“அர்ஜுன், அர்ஜுன்; “

சுபா இரண்டு தடவைகள் உலுக்கி எழுப்பினாள்.

“இப்பவே ஏன் எழுந்துக்கணும்! இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடேன்.”

“தூங்கவா!! நேற்றைக்கு சொன்னது மறந்து போச்சா!”

“என்ன சொன்ன சுபா?”

குளிருக்கு போர்வைக்குள் மறுபடியும் புகுந்து கொண்டான் அர்ஜுன்.

“இன்னிக்கு எனக்கு ஒரு ப்ராஜெக்ட் வேலைக்கு பூனாவரை போகணும். நாளைக்கு மாலை திரும்பி வருவேன்னு சொன்னேனே, மறந்து போச்சா?”

“அட! ஆமா.”
ஆறுமாத கைகுழந்தை ரகுவை ஒன்றரை நாள் கவனித்துக்கொள்வதாக அவன் நள்ளிரவு வரை சவடால் விட்டது நினைவுக்கு வர, துள்ளி எழுந்துகொண்டான்.

“நாளைக்கு மாலை வந்துடுவேன். உதவி பெண் சோபியா இன்னிக்கு வர மாட்டா. நினைவு இருக்கு இல்ல?”

“அவ இல்லாட்டி என் கண்ணுக்குட்டிய நான் பார்த்துக்க மாட்டேனா!”

நேற்று குழந்தையை தனியாகவே பார்த்துக்கொள்வதாக சொன்னது அர்ஜுனுக்கு நினைவுக்கு வந்தது. ஆபீசுக்கு லீவும் சொல்லியாச்சு.
காதல் கல்யாணம். இரண்டு பக்கமும் எதிர்ப்பு. அம்மாக்கள் மட்டுமே கூப்பிட்டால் வருவார்கள். ஆனால் ஈகோ பிரச்சனை. தனியாகவே குழந்தையையும் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை.

“பால் ஃப்ரிட்ஜ்ல இருக்கு. காலைல டாக்டர் சொன்ன மருந்து டைம்ல கொடுக்கணும். குழந்தை அழுதா, எதுக்கு அழுகைன்னு முதல்ல பார்க்கணும்.”
“முக்கியமா செல் அடிச்சா யாருன்னு பேர் பார்த்துட்டு எடுக்கணும். ரொம்ப முக்கியம்னா எடுத்து பேசினால் போதும். அரட்டைக்கெல்லாம் எடுக்கவே எடுக்காதீங்க.”சுபா சொல்லிக்கொண்டே போனாள்.
ஆனால் அவன் உள்மனம் மட்டும்,
“குழந்தையை பார்த்துக்க பிடிக்கும் தான். ஆனால் சவடால் பேச்சு பேசிட்டோம். முடியுமா தெரியலையே? சமாளிப்போம்,” என்று சொல்ல,

“அதெல்லாம் தெரியும். நீ கிளம்பு. ஏதாவது சந்தேகம் வந்தா கால் பண்றேன். அநேகமா எதுவுமே வராது நினைக்கிறேன்,” என்று எதற்கும் சொல்லி வைத்தான். உள்ளுக்குள் கொஞ்சம் பயம் தான். ஆனால் வாய் மட்டும் வழக்கமான சவடால் பேச்சு பேசியது. அவள் கதவுக்கருகே வந்தபோது,

“அவன் ரஜாய்க்குள்ள தூங்குறான். எழுந்தா கொஞ்ச நேரம் சமாளிக்கணும். பத்திரமா பார்த்துக்கணும்,” என்று சொல்லி சுபா கிளம்பினாள்.

வாசல் கதவை மூடிக்கொண்டான் அர்ஜுன். செல் ரிங் அடிக்க, இது கண்டிப்பாக சுபா இல்லை. அவள் கிளம்பி பத்து நிமிடம் தான் ஆகிறது. எடுக்க வேண்டாம் என்று உஷாராக இருக்கத் தொடங்கினான்.
“அர்ஜுன், பகல் நேரம் தூக்கம் போடாதே. செல் எடுக்காதே,” என்று தனக்குத்தானே ரூல் போட்டுக்கொண்டான்.
குழந்தைக்கு ஸ்வெட்டர், குல்லா போட்டிருக்கிறதா என்று பார்க்க ரூமுக்குள் போனான். குழந்தை எங்கே? பதறிப்போய் ரஜாய்க்குள் கையை விட்டுத் தேட, கட்டில் மூலையில் உருண்டுபோய், ஓரத்தில் விரல் சூப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தது.
கிடுகிடுவென்று நாலு தலையணைகளைச் சுற்றிலும் போட்டு, ஸ்வெட்டர் போட்டு, நடுவில் குழந்தையை படுக்க வைத்து ரஜாயை போர்த்தி விட்டான். அப்பாடா என்றாகி விட்டது.

இன்னும் இரண்டு மணி நேரம் தூங்குவானென்று, சுபா சொல்லி விட்டுப் போயிருக்கிறாள். “வேறு ஏதாவது செய்யலாமா? வேண்டாம். குழந்தை எழுந்தா அப்புறம் வம்புதான்.” அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டான். ரகு எழுந்து கொள்ளுவதற்குள் பாலை தயாராக வைத்து விடலாம் என்று கிச்சனில் நுழைந்தான்.
பாலைக்காய்ச்சி தயார் செய்தான். சுபா மேடையிலேயே பாட்டில், ரப்பர் எல்லாவற்றையும் சுடுநீரில் போட்டு வைத்திருந்தாள்.

“நல்ல வேளை, இல்லன்னா இதையும் செய்யணும்,” என்று எண்ணிக்கொண்டே, பாலை ஆறச் செய்து, பாட்டிலில் ஊற்றி தயாராக வைத்தான்.
ரகு எழுந்தால் கொடுக்க வேண்டியதுதான் வேலை.
“சபாஷ்டா, அர்ஜுன்! நீ பாஸ்தான், டிஸ்டிங்கஷனே கிடைச்சிடுச்சு,” என்று தனக்குத்தானே ஒரு பாராட்டு சொல்லி முடித்தபோது, “ங்கே… ங்கே… “ சத்தம் கேட்க “ஆஹா…ரகு எழுந்துட்டான்டா எழுந்திட்டான்.”
வேகமாக ரூமுக்குள் ஓடிப்போய் ரகுவைத் தூக்கிக்கொண்டு, மறுகையால் பால் பாட்டிலை எடுக்கப் போகும் நேரம்,
“தூங்கி எழுந்தா பாம்பரை மாற்றணும்,” என்று சுபா சொன்னது நினைவுக்கு வர, பாட்டிலை அவசரமாக கீழே வைத்து, பாம்பரை மாற்ற புது பாம்பரை எடுத்து கால்களில் மாட்டிவிட்டான்.
இனிமே பால் கொடுக்கலாம் என்று பாட்டிலை எடுத்து வாயில் வைக்க,. குழந்தை ரகு ரப்பரை சப்பத் தொடங்கியது. ஒரு நிமிடம் சப்பி முடித்துவிட்டு, குழந்தை முகம் கோணி, அழுகை ஆரம்பமானது.

அர்ஜுனுக்கு குழப்பம். நாம சந்தோஷப்பட்டது வீண் தானா!!

“பால் சூடோ? பாட்டிலைத் திறந்து வாயில் விட்டு பார்த்தான். சூடு சரியாத்தான் இருக்கு. சர்க்கரையும் போட்டிருக்கே. அப்புறம் என்ன பிரச்சனை?”
மீண்டும் ரப்பரை குழந்தை வாயில் வைக்க மீண்டும் அழுகை. கைகால் பதறத் தொடங்கியது. பாட்டிலை கவிழ்த்துப் பார்த்தான். பால் வரவில்லை. அம்மா மாதிரி பாலாடை எடுத்து முயற்சி செய்வோமா!

‘வேண்டாம் அர்ஜுன் ஓவர் சீன் வேண்டாம். சுபாவிற்கு போனை போடு, ‘ காதிற்குள் ஒரு குரல் கேட்டது.
கிடுகிடுவென்று சுபாவிற்கு போன் போட்டான்.
சுபாவிடமிருந்து தீர்வுடன், டோஸும் போனாசாக கிடைத்தது. சுபா சொன்னபடி ரப்பருக்கு அடியில் இருந்த மூடியை நீக்கவே, குழந்தை பால் குடித்து வயிறு நிரம்பி, குஷியுடன் சிரிக்கத்தொடங்கினான்.
இனிமேல் விளையாட்டுதான், அர்ஜுனுக்கும் சந்தோஷம். கீழே தரையில் கார்பெட்டுக்கு மேல் ரஜாயை போட்டு, ரகுவை அதில் விட்டான். கீழே விட்டால் அழகாக தவழுவான். குழந்தை தவழ, கால் முட்டை ஊன்ற, “தொப்… தொப்…” என்று கீழே விழுந்தது.

“அட கடவுளே! என்னாச்சு ரகுவிற்கு!”

மீண்டும் டென்ஷன் தொற்றிக்கொண்டது அர்ஜுனுக்கு. குழந்தையை பிடித்து நிற்க வைத்து பார்த்தால், ஒன்றும் தெரியவில்லை.
“இந்த முறை சுபாவை கேட்க வேண்டாம். கேட்டால் டபுள் டோஸ் விழும். நாமே பார்ப்போம்.”

“கடவுளே… இது கூட எனக்கு தெரியலையே! அர்ஜுன், நோ டென்ஷன், நிதானம்… நிதானம்…” மனதின் எச்சரிக்கை மீண்டும் காதில் கேட்டது.

மெதுவாய் குழந்தையின் கால்களை பார்த்த போது, குழந்தையின் இரண்டு காலையும் சேர்த்து, பாம்பரின் ஒரே காலில் நுழைத்திருந்தான். அதைச் சரி செய்து போடவே, ரகு உற்சாகம் பொங்க தவழ ஆரம்பித்தான்.

“இவ்ளோ மண்டு ஆகிட்டேனா!“ அர்ஜுனுக்கு கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. பேசத்தெரிந்த குழந்தையாக இருந்தால், குழந்தையே கண்டு பிடித்து சொல்லி இருக்கும்.

“அடுத்து என்ன கோளாறு வருமோ? இதுவே போதும்டா சாமி,” என்று நினைத்த சமயத்தில், நேற்று சுபாவுடன் போட்ட சண்டை நினைவுக்கு வர, இன்னிக்கு இப்படி விட்டு விட்டு போய், வேண்டுமென்றே பழி வாங்கிட்டாளோ, என்ற நினைப்பும் கூடவே வந்து போனது. எந்த உதவியும் செய்யாமல், ஆபீஸ் வேலையே கதி என்று இருந்த வேளையில் வெடித்த பிரச்சனைதான் அது.
“ஒரு நாள் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியுமா?” என்று சுபா கேட்க, ஆரம்பமான விவாதம் முற்றி பின்னர் சமாதானமாகி, ஒரு முடிவுக்கு வந்து, இன்றைய பொறுப்பை ஏற்றான். அந்த நினைப்பை உதறித் தள்ள முயன்றான் அர்ஜுன்.
குழந்தை ரகு மீண்டும் கார்பெட்டில் தவழ ஆரம்பித்தான். சுவரைப் பிடித்து எழ முயற்சி செய்யும் போது, ஆறு மாதக்குழந்தையின், அந்த சின்ன கை, சுவரைத் தேடி தடுமாறியது. கால் சரியாக நிலைக்கவில்லை. உடல் சற்று சாய, ஓடி வந்து பிடித்தான் அர்ஜுன். தானாக நடை வரும் வரை குழந்தையை இப்படி பாதுகாக்கணும். இதை சுபா தான் செய்கிறாள் என்ற நினைப்பும் மனதின் மூலையில் தோன்றாமலில்லை.

அப்போதுதான் காலிங் பெல் சத்தம் கேட்டது.
ஆன்லைனில் ஆர்டர் கொடுத்திருந்த பொருளை கொடுக்க ஒருவர் வந்திருந்தார். வந்த பொருளை வாங்கி, கதவை மூடிவிட்டு திரும்பினால்….
குழந்தையை காணவில்லை. அர்ஜுனுக்கு திக்கென்றது.
“ரகு… ரகு?” என்ற குரலுக்கு சத்தமே இல்லை. கார்பெட்டும் காலி. சுவர் ஓரமும் காலி. ஹாலில் ரகு கண்ணில் தென்படவேயில்லை. இதயம் பட படவேன்று அடித்துக்கொண்டது .
“அடப்பாவி, ஒரு நிமிஷம் நான் உன்னை விட்டுட்டேனா! இனி பொறுப்பதில்லை. சுபாவை கூப்பிடுவோம். திட்டு போட்டாலும் பரவாயில்லை,” என்று சொல்லிக்கொண்டே செல் எடுத்தான். அடுத்த நொடியில் தன் ரூல் ஞாபகம் வந்தது.
“செல்லை எடுக்காதே, பகல் தூக்கம் போடாதே, இந்த ரூல் எல்லாம் யாருக்காக போட்டேனோ!” என்று புலம்பிக்கொண்டே,
“ரகு, கண்ணா, டேய், எங்கடா போன!” “ங்கா… ங்கே… சஷுய்… ஷோவ்…” ரகு எழுப்பும் அவன் பாஷையிலேயே எல்லா சத்தத்தையும் கிளப்பினான்.
பதில் இல்லை. கிச்சனுக்கு ஓடினான். அங்கே இல்லை. பாத்ரூமைத் திறந்து பார்த்தான். அங்கேயும் இல்லை. படுக்கையறை கதவின் பின்னால் பார்த்தான். இல்லை. கட்டிலுக்கடியில்; சோபாவின் பின்னால்;
இப்போது நெஞ்சு முழுக்க டென்ஷன் ஓட ஆரம்பித்தது. கதவைத் திறந்து பொருளை வாங்கிக்கொண்டிருக்கும் போது, அந்த இடைவெளியில் தவழ்ந்து போயிருப்பானோ!
வேகமாக ஓடி அந்த தளத்தின் வராண்டாவில் தேடினான். அங்கும் குழந்தையை காணவில்லை.
“ஒரு வேளை திறந்த லிப்டுக்குள் தவழ்ந்து போயிருக்குமோ!”, தட தட வென்று படிகளில் இறங்கி ஓடினான்.
“இங்கே எப்படி சார், பாப்பா தவழ்ந்து இவ்வளவு தொலைவுக்கு வரும்? நான் இங்கன தான் உட்கார்ந்துகிட்டு இருக்கேன். மேல் வீட்லயே போய் பாருங்க. அங்கேயே தான் உக்காந்துக்கிட்டு இருக்கும். நானும் இதோ வர்றேன்,”
வாட்ச்மேன் சொல்ல, திரும்ப வீட்டிற்கு படிகள் வழியே ஓடினான். திரும்பி வந்தால், தானியங்கி பூட்டு கொண்ட வாசல் கதவு மூடி இருந்தது. காற்றுக்கு தானே மூடிக்கொண்டது. சாவியும் கையில் இல்லை. உச்சக்கட்ட பதற்றம் தொற்றிக்கொண்டது. பக்கத்து வீட்டில் சாவி இருக்குமே என்று நினைவுக்கு வர, ஓடிப்போய் அவர்கள் வீட்டு கதவைத் தட்டி, சாவியை வாங்கினான். பாய்ந்து போய் கதவைத் திறந்தான்.
“அட கடவுளே, ஒரு குழந்தையை ஒரு மணி நேரம் பார்த்துக்க கூட தெரியாதா!”
“குழந்தை கிடைக்கணுமே! சுபா என்ன திட்டுவாளோ!”
பெரிய அளவில் பயம் மனதில் பரவியது. நடந்த குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களை சுபாவிடம் சொல்லாமல் இருக்கலாம். ஆனால், முதல் முறையாக முழுமையான பதற்றம் பிடித்துக்கொண்டது. எல்லா கடவுள்களுக்கும் விண்ணப்பம் வைத்தான்.
“பிள்ளையாரப்பா, உனக்கு சிதறு தேங்காய்; முருகா, உனக்கு காவடி; ஆஞ்சநேயா, உனக்கு நூற்று எட்டு வடை மாலை. குழந்தையை மட்டும் பத்திரமா என் கிட்ட கொண்டு சேர்த்திடு.”
அந்த நேரம் தான், “டக்… டக்…” ஒரு சின்ன சத்தம்,
டிவி ஸ்டாண்ட் பக்கத்திலிருந்து கேட்டது. அர்ஜுன் மெதுவாக அருகே சென்று பார்த்தான். அங்கே – டிவி ஸ்டாண்டின் கீழே, அவன் நேற்றே அலட்சியமாக தள்ளி வைத்திருந்த கார்ட்போர்டு பெட்டிக்குள் – ரகு! பாதி உடம்பு பெட்டிக்குள்ளே,
கால்கள் வெளியே. ஒரு கை உள்ளே. வாயில் – ரிமோட். அதை கடிக்க முயற்சி. அர்ஜுன் நிம்மதியோடு மூச்சு விட்டான்.
“அடேய்… ரகு! பூனைக் குட்டி மாதிரி இங்கே போய் ஒளிஞ்சிருக்கேயேடா கண்ணா?”
ஓடிப்போய் குழந்தையை வாரி அணைத்துத் தூக்கினான். புது உலகம் கண்ட விஞ்ஞானி மாதிரி.
“கெக்கே… புக்கே…” என்று ரகு சிரிக்க அர்ஜுன் தலையைப் பிடித்துக்கொண்டான்.
“சுபா இல்லேன்னா, நீ என்னை முழுக்கவே ஃபெயில் பண்ணிடுவ போலிருக்கே குட்டி பையா?”
அதே நேரம் செல் ரிங். ஸ்கிரீனில் ஒளிர்ந்த பெயர் சுபா. ஒரு நொடி சிந்தனை. எடுக்கலாமா; வேண்டாமா; அடுத்த நொடி எடுத்தான்.
“ஹலோ?”
அந்தப் பக்கம் சுபாவின் குரல் —
“போன ஏன் எடுக்கல? என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ரகு என்ன பண்ணுறான்?பால் சாப்பிட்டானா? தூங்கினானா?” சர சர சர வெடி மாதிரி கேள்விகள்.
என்னத்தைச் சொல்ல…

“கார்ட்போர்டு பெட்டிக்குள்ள உலகத்தை கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்கான்.”
“என்னது?”
“ஒன்னுமில்லை. ரெண்டு பேரும் சமர்த்தாதான் இருக்கோம்.”
“நான் கிளம்பும் போதே தெரியும்; நீங்க பூரா நாளும் அவனை வச்சு அட்வென்ச்சர் பண்ணுவீங்கன்னு.”
அர்ஜுன் மெதுவாக சொன்னான். “சுபா, நான் இப்போ புரிஞ்சுக்கிட்டேன். நேர்ல எல்லாம் விவரமா சொல்றேன்.”
“என்ன நேர்ல சொல்றீங்க?”
“ஆபீஸ்ல வேலை கையாள்வது சுலபம். ஆனால் இந்த குட்டி கண்ணனை சமாளிப்பது; அதுதான் உண்மை சவால். நான் பாஸா ஃபெயிலான்னு ரகு முடிவை சொல்லிட்டான். அதை சொல்றேன்.”
அந்தப் பக்கம் சிறிது நேர அமைதி. சிரித்தாள் சுபா.
“சரி; நான் நாளைக்கு வந்துடுவேன். இன்னிக்கு மட்டும்தான் ரகுவை சமாளிச்சுக்கணும்.”
“இல்ல; நாளைக்கு மட்டும் இல்ல. இனிமே ‘ஒரு நாள் பார்த்துக்க முடியுமா?’ ன்னு நீ கேட்டா நான் சண்டை போடுவேன்.”
“என்னது? மறுபடியும் சண்டையா?”
“ஒரு நாள் மட்டும் இல்ல.எப்போதும். இனிமே நானும், உன்னோடு சேர்ந்து, இவனை கவனிச்சுக்கணும்ன்னு முடிவு செஞ்சுட்டேன். ”
அந்த நேரம் ரகு – “ங்கே… ங்கா…” என்று சத்தத்துடன் ரிமோட்டை கீழே போட்டான். அர்ஜுன் சிரித்தான்.
“இவன்தான் இனிமேல் என் பாஸ். இன்னிக்கு எனக்கு பதவி உயர்வு கொடுத்துட்டான். நீ கவலைப்படாம வா. நான் அதுவரை அவனை ஜோரா கவனிச்சுப்பேன் ”
அந்தப் பக்கம் சுபா சிரித்தாள். போன் கால் முடிந்தது. அர்ஜுன், ரகுவை மடியில் போட்டுக்கொண்டு கார்பெட்டில் அமர்ந்தான் அர்ஜுன்.

இன்னும் இதுபோல கோளாறுகள் வரும், குழப்பங்கள் வரும், ஆனால் “ஒரு நாள் குழந்தையை பார்த்துக்க முடியுமா?” என்ற கேள்வி, இனிமேல் விவாதமாக மாறப்போவதில்லை. அது பொறுப்பு. அர்ஜுன், முதன்முறையாக தன்னை முழுமையான அப்பாவாக உணர்ந்த நாள் அது.

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி

திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆசிரியராக பணி புரிந்தவர். படிப்பதிலும், கதைகள் எழுதுவதிலும் சிறு வயதிலிருந்தே மிகுந்த ஆர்வம் கொண்ட இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவை ஆனந்த விகடன், கல்கி, அமுதசுரபி, குமுதம், கலைமகள் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.

இவரது சிறுகதைகள் ‘மல்லிகைப்பந்தல் ‘என்ற பெயரில் சிறுகதை தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. ஒரு துப்பறியும் நாவல் எழுத வேண்டும் என்பது இவரது நீண்ட கால கனவு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன