ஆர். வெங்கடேஷ்/பூந்தமல்லி அரை மணி நேரம்

இன்று பிரதமர் மோடி, பூந்தமல்லி டு வடபழனி மெட்ரோ சேவையைத் தொடங்கிவைத்த காட்சிகளைப் பார்த்தபோது, மனித முயற்சிக்கு எல்லையே இல்லை என்பது நிரூபணமானது. 1980களில், அவ்வளவு ஏன் 1990களில் கூட, பூந்தமல்லி, சுங்குவார்சத்திரம், இந்தப் பக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு எல்லாம் வேறு பிரதேசங்கள். அங்கேயெல்லாம் யாரேனும் உறவினர்கள் இருந்துவிட்டால், அவர்களைப் பார்க்கப் போவது என்பது ஒரு சுற்றுலா. அவ்வளவு ஏன், இந்தப் பக்கம் கொரட்டூர், வில்லிவாக்கம், ஆவடி எல்லாமே ரொம்ப தூரம்.

நான் சென்னையில் மையமான வள்ளலார் நகர், தங்க சாலையை ஒட்டிய கொண்டியம்பதி பகுதியில் வளர்ந்ததால், பாரீஸ் பஸ் ஸ்டேண்ட் தான் மையப் புள்ளி. அங்கே இருந்து எங்கே போவது என்றாலும் ஒரு பயணம் தான். அந்தக் காலத்தில், திருவேற்காடு, மாங்காடு எல்லாம் எங்கோ தொலைதூரத்தில் இருந்தன. 59 என்ற எண் கொண்ட பேருந்து, தங்கசாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவேற்காடு போகும். விடிகாலையில் சின்னப் பையனான என் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு என் அம்மா, அந்தப் பேருந்தைப் பிடிக்க ஓடுவார். எனக்கு இன்னும் அந்தச் சாலை ஞாபகம் இருக்கிறது. கோணலாக வளையும். பெரிய பெரிய நிழல் மரங்கள் நிறைந்திருக்கும். அதன் பிறகு வலது பக்கம் திரும்பும். வளைந்து வளைந்து போனால், திருவேற்காடு கோயில் வரும்.

கொஞ்சம் வளர்ந்தபோது, என் நண்பர் ஒருவர் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணியாற்றினார். ஒவ்வொரு முறையும் அவரது லாரி, பூந்தமல்லி செக்போஸ்டில் மாட்டிக்கொள்ளும். அவர் தி.நகரில் இருந்து அவரது பிரமாதமான புல்லட்டில், பூந்தமல்லி போவார். அந்தப் பயணக் கதையைச் சொல்வார். அது எங்கோ தூரதேசத்தில் இருப்பதாக கற்பனை செய்துகொள்வேன்.

ஆரணி, வேலூர் போகும் போதெல்லாம், சுங்குவார்சத்திரம் என்றொரு மையமான பேருந்து நிறுத்தம் இருக்கும். அங்கே தான், பயணியர் காபி, டீ அருந்த பேருந்துகள் நிற்கும். அந்த இடத்திலும் நிறைய மரங்கள் இருக்கும். சமீபத்தில் அந்தப் பக்கம் போனேன். சுங்குவார்சத்திரம் தாண்டியாச்சு என்று வாகன ஓட்டுநர் சொன்னார். திரும்பித் திரும்பிப் பார்த்தேன். நான் மனத்தில் தீட்டிய சித்திரம் அங்கே இல்லவே இல்லை.

எங்கோ வெளியூர் போய்விட்டு, பூந்தமல்லி வழியாக வந்தேன். புதிய மெட்ரோ ஸ்டேஷன் தலைக்கு மேல் பிரமாண்டமாக விரிந்திருந்தது. என்ன பிரமாதமான வளர்ச்சி! இனிமேல், சென்னை நோக்கி வருவது மிக மிகச் சுலபமாகிவிடப் போகிறது. பெரிய மக்கள் திரள் போரூர் வருவதற்கும் வடபழனி வருவதற்கும் இந்த ரயிலைத் தொடர்ந்து பயன்படுத்தப் போகிறார்கள். பூந்தமல்லி டு வடபழனி ஸ்டேஷன்களுக்கு இடையே உள்ள பயண தூரம் 15 கி.மீ., பயண நேரம் அரை மணி ஆகும் என்கிறார்கள். சட்டென தூரம் சுருங்கிவிட்டது. இடங்கள் நெருங்கிவிட்டன. ஒரு காலத்தில் ரியல் எஸ்டேட் காரர்கள் இதோ இருக்கிறது பெருங்களத்தூர், இதோ இருக்கிறது ஆவடி என்பார்கள். இப்போது உண்மையில் இதோ இங்கே அரைமணி தொலைவில் இருக்கிறது பூந்தமல்லி! சே! என்ன பிரமாதம்.

இன்னும் பத்தாண்டுகளில் கிளாம்பாக்கம் வரைக்கும் மெட்ரோ ரயில் போகலாம். மேலே ரெட்ஹில்ஸ், ரெட்டேரி, தேர்வாய்கண்டிகை வரை கூட மெட்ரோ ஓடத் தொடங்கலாம்.

பிரதமர் முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த பல கோரிக்கைகளில் என்னை மிகவும் கவர்ந்தது, ஓசூர் டு பொம்மசந்திரா வரையான மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ சேவை. இப்போதே, நல்ல திறமையான காரோட்டி, சென்னை டு பெங்களூர் தூரத்தை 6 மணிநேரத்தில் கடந்துவிடுகிறார். நாளைக்கு இதுபோன்ற மெட்ரோ, அதிவேக ரயில்கள், எட்டுவழிச் சாலைகள் வந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு காலையில் வேலைக்குப் போய் மாலையில் திரும்பி வரும் காலம் கூட உருவாகிவிடலாம்.

பூனாவில் வேலை பார்த்தபோது, என் சீனியர் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். அவர் மும்பையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ‘இனிமேல் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தை தூரத்தை வைத்து அளவிடக் கூடாது, நேரத்தை வைத்து அளக்க வேண்டும் என்றார். அதாவது, மும்பையின் நாரிமன் பாயின்டில் இரண்டு மணி நேர ரேடியஸில் எங்கே வாழ்ந்தாலும் போதும். அதுவும் மும்பை தான்’ என்றார்.

அன்று அது அவ்வளவாக புரியவில்லை. இப்போது பூந்தமல்லி அரை மணி எனும் போது பளிச்சென்று புரிகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், மேலே திருவள்ளூர் எல்லாம் இரண்டு மணிநேர ரேடியஸுக்குள் வருபவை. அது சாலையின் அளவு அல்ல. மெட்ரோவின் நேர அளவு.

இன்றைய நவீன நகரமைப்பியலில் கூட ’15-நிமிட நகரம்’ (15-Minute City) என்றொரு கோட்பாட்டைப் பேசுகிறார்கள். ஒரு மனிதனுக்குத் தேவையான பள்ளி, மருத்துவமனை, வேலைவாய்ப்பு என அனைத்துமே அவன் இருக்கும் இடத்தில் இருந்து 15 நிமிடப் பயணத் தொலைவுக்குள் வந்துவிட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். பூந்தமல்லி மெட்ரோ போன்ற திட்டங்கள் இந்த இலக்கை நோக்கித்தான் நம்மைக் கூட்டிச் செல்கின்றன.

கோவையில் ஒரு பள்ளியின் நிர்வாகியோடு பேசிக்கொண்டு இருந்தேன். கோவை நெரிசல் பற்றியும், மாணவர்கள் கோவையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் உள்ள பள்ளிக்கு வருவதற்கு படக்கூடிய சிரமத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டு இருந்தார். பின்னர் அவரே ஒரு வழிமுறை சொன்னார், ‘ஏன் ஹெலிகாப்டர் சர்வீஸ் ஆரம்பிக்கக் கூடாது. பள்ளிக்குள்ளே ஒரு ஹெலிபேடும், கோவையை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் வேறு வேறு இடங்களில் ஹெலிபேட்களும் வைத்துவிட்டால், அடுத்த பத்து, பதினைந்து நிமிடங்களில் பள்ளிக்கு வந்துவிடலாம்’ என்றார். அவர் சொன்னது மிகவும் அதீதமான கற்பனையாக அப்போது தோன்றியது.

பூந்தமல்லி மெட்ரோ ஸ்டேஷன் வளர்ச்சியைப் பார்த்தவுடன், பள்ளி நிர்வாகி சொல்வது வருங்காலத்தில் சாத்தியமே என்ற எண்ணம் உருவானது. ட்ரோன்கள் மூலம் மருந்து சப்ளை செய்யும் முயற்சி வட மாநிலங்களில் ஒன்றிரண்டு இடங்களில் பரிசோதனை முறையில் நடைபெறுவதாக படித்தேன். வெற்றியும் பெற்றுள்ளதாம்.

அவ்வளவு ஏன், எதிர்காலத்தில் சென்னை-பெங்களூரு இடையே அதிவேகக் குழாய் வழிப் பயணமான ‘ஹைப்பர்லூப்’ (Hyperloop) தொழில்நட்பமும், நகரங்களுக்குள் பறக்கும் மின்சார டாக்சிகளும் (eVTOL / Flying Taxis) கூட வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வருங்காலத்தில் தூரம் முக்கியமில்லை. நேரம் முக்கியம். நேரத்தைக் குறைப்பதற்கு ஏற்ற வாகனங்கள் முக்கியம். நாம் ‘பருந்துப் பாய்ச்சலில்’ காலத்தைக் கடந்துகொண்டிருக்கிறோம்.

—————-

(c) ஆர். வெங்கடேஷ்

என் கட்டுரைகளைப் பற்றி உங்கள் எண்ணங்களை rvrv30@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்புங்கள். மற்றவர்களோடு கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, இந்த வாட்ஸ் ஆப் சேனல் சுட்டியையும் சேர்த்து அனுப்புங்கள்: https://whatsapp.com/channel/0029Vb8QUULAjPXT0Bvig803

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன