
பகவான் கீரை ஆய்ந்திருக்க வாய்ப்பில்லை…
ஆயர்பாடியில் ஆவினங்களுக்கு
கீரைபறித்துகொடுத்திருக்கலாம்…
திரௌபதியின் கீரைத்துணுக்கை
சுவைத்திருக்கலாம்…
நடந்ததை யார் கண்டது…?
கர்மயோகமென்பது வில்லைப்பிடித்து…
உறவினர்களை குறிபார்ப்பது மட்டுமல்ல…
கீரைஆய்வதும்தான் என்றால் உங்களுக்கு
கோபம் வரும்.
பகவான் மேல் எனக்கு எந்தப்பகையுமில்லை.
சொல்லப்போனால்
கீதைபடித்துக்கொண்டிருக்கும்போதுதான்
எனக்கு கீரைஆயும் வாய்ப்பே வந்தது.
“வெட்டியா புத்தகத்தையே மேய்ஞ்சுக்கிட்டு கிடக்காம..
உருப்படியா கீரையாவது ஆஞ்சுகுடுங்கோ…”
மனைவியின் குரலை பகவானும் கேட்டிருக்ககூடும்…
ஒருவேலையை அலுத்துக்கொண்டேசெய்தால் அது “கர்மா”.
அதையே மகிழ்ச்சியோடு..ஈடுபாடோடு செய்தால் “
கர்மயோகம்”
என்னயோகம் பாருங்கள்…
அதனால்தான் சொன்னேன்..கீரை ஆய்வதையும்
கர்மயோகமென்று.

பகவான் என்ன சொல்லியிருக்கிறார்…
பலனை எதிர்பார்க்காதேயென்று.
இங்கேயும் அப்படித்தான்..
என்ன சிரத்தையிருந்தாலும்..
காம்புகிடக்கிறது…பழுப்பு
கிடக்கிறது…
ஒருவேலையாவது உருப்படியா இருக்கா…!
என்றுதான் சான்றிதழ் கிடைக்கும்.
அதற்காக கர்மயோகத்தை
விட்டுவிடமுடியுமா…?

அருமை. சான்றிதழை விடுங்கள். கூறியது போலவே சிரத்தையோடு பலன் கருதாமல் கீரை ஆய்ந்தாலும் கர்ம யோகம்தான்.