(ஆங்கிலப் பெருங்கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வேர்த்தின்
‘Daffodils’ என்ற பிரபல கவிதையின் தழுவல்)
ககனமென்னும் பொய்கையிலே நீந்துகின்ற
கலைவண்ண மேகம்போல் தனிமையாக
அகம்போன போக்கெல்லாம் அலைந்த வேளை
அப்படியே நின்றுவிட்டேன் வியப்பில் சிக்கி!
தகதகக்கும் தங்கமலர்த் திரள்கள் வாவித்
தண்கரையில் தருக்களின்கீழ் ஒளிரக் கண்டேன்!
பகரரிய பரவசத்தில் செருகக் கண்கள்
பளிங்குருவாய்ச் சமைந்தேன்! தொல்எழிலில் தோய்ந்தேன்!
தொடைதொடையாய்த் தொங்குகின்ற தாரகைகள்
தூயபசும் பால்வெளியில் துலங்குதல்போல்
முடியாத நூல்ஒழுங்கில் நின்ற வண்ணம்
முறுவலிக்கும் கனகமலர்க் கூட்டம் கண்டேன்!
கிடையாது எண்ணிக்கை! தோற்றேன் எண்ணி!
கிசுகிசுத்த மென்காற்றில் தலை அசைத்து
நடமிட்ட நளின மோகனங்கள் காண
நயனங்கள் இரண்டெனக்குப் போதவில்லை!
பக்கத்தில் பரந்த குளத்திரைகள் ஆடிப்
பார்த்தாலும் மலர்களுக்கு நிகராய் இல்லை!
முக்கனிநேர் கவிஇன்பம் ஊட்டும் வண்ண
முடங்கும், மூளும் வளிமாயம் நிலத்தில் நீரில்
சொக்கப்பொன் மலர்களுக்கும் அலைகளுக்கும்
தோற்றுவிக்கும் தீராத நடனப் போட்டி!
துக்கமோடு அவ்வெளிஅரங்கை விட்டெழுந்து
தூரத்தில் இல்லத்தை நோக்கி வந்தேன்!
நெஞ்சத்தில் நெடுநாட்கள் கடந்த பின்பும்
நீங்காமல் நடம்புரியும் தங்கப் பூக்கள்!
மஞ்சத்தில் நான்புரளும் மையல் போதில்
மழைத்தாரை இடைமின்னல் வீச்சாய்த் தோன்றும்!
சஞ்சலம்கொள் வேளைகளில் அமைதி கொண்டேன்!
சலிப்படையும் வேளைகளில் ஊக்கம் பெற்றேன்!
விஞ்சைமாதர் விஞ்சும் மலர்நடனம் வாழி!
விழிவாழி! நினைவு வாழி! வாழி நெஞ்சே!
(2017)
