
ஆலய வாயிலில்
வேப்பிலையாடையுடுத்திய
மண் கலயங்கள்
கோட்டை அடுப்புச் சூட்டில்
கூழ் நிறைக்கத் ததும்பும்.
வீட்டிலிருந்து கோவில் வரும்
வேப்பிலைக்கொத்து
தூக்குகளில் கூழ் கனத்துக்கிடக்கும்-
பக்தி சொல்லி.
ஒலிபெருக்கமுறும் அம்மன் பாட்டு
அர்ச்சகரின் மந்திரங்கள்
தோல்கருவி எக்காள
முழக்கங்கள்
பட்டாசுச் சரவெடிகள்
கூடவே குலவையொலி..
ஆரத்தி முடிந்த பின்னர்
அனைவர்க்கும் விநியோகமாகும்
நிவேதனக் கூழ்-பிரசாதமென.
தூக்குச்சட்டி, நெகிழிக்குவளை
சிறுகிண்ணி பெருஞ்சட்டியென
எது நீட்டப்பெற்றாலும்
பிரியமாய் நிரப்புதல் பெறும்-
கூடுதலாய் சுண்டல் தொன்னையுடன்.
இளங்காலை தொடங்கி
உச்சிவேளை வரைகூட
தெருவெங்கும் பரிமாறப்படும்
கூழை சிறுதயக்கக் கூச்சமாய்
வாகனமெதுவில் கடந்ததுண்டு-
பலமுறை..!
பசிமுற்றிய ஒருபொழுதில்
வாகனம் விட்டிறங்கி
வெட்கம்
விட்டு
தயக்கம் விலக்கி கை நீட்டினேன்-
கூழ் வார்த்த பெண்ணிடம்.
கனிவாய் குவளை நிரப்பி
வெங்காயத் தூவலிட்டு
மோரிட்டு நீர்க்கச்செய்து
பணிவாய் நீட்டினாள்-
“வயிறு குளிர சாப்பிடுய்யா..!”
என்று சொல்லி…

பசியடங்கி நிமிர்ந்தவளைப்
பார்த்தேன்..
மஞ்சள் உடை,
பெருவட்ட நெற்றிக் குங்குமம்-
வலக்கையில் துணிக் காப்பு
வேப்பிலையின் வாசமென
என் முன்னே நின்றவள்
அம்மனின் பக்தையல்ல–
என் அம்மாவின் பிரதிநிதி..!

ஒருவருக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தால் அது மாதிரி ஒரஂ நிம்மதி எதுவும் இல்லை
சிறப்பு!