
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மணியாச்சி சந்திப்பில் நின்றது. கதிரேசன், இரு பைகளில் போளிகளோடு 'கடம்பூர் போளீய்' என கத்திக்கொண்டு விறுவிறென விற்க ஆரம்பித்தார். வாங்கிச் சுவைத்த பயணி குமார் அசந்து விட்டார். இவ்வளவு குறைந்த விலையில் இப்பேர்ப்பட்ட தரமா. குடும்பத்தினர்க்காக மேலும் எட்டு போளி வாங்கிக்கொண்டு இருநூறு ரூபாயை நீட்டினார். கதிரேசனுக்கு மகிழ்ச்சி.
போளி இவர்களது வீட்டிலேயே செய்து விற்பதால் ஓரளவு லாபம் தருகிறது. வீட்டில் இவரும் இவர் மனைவியும் மட்டுமே. இரவில் வெல்லம் மைதா வாங்க கடைக்குச் சென்ற போது கடைக்காரர், ‘இதிலே ரெண்டு நோட்டு ஒட்டிட்டிருக்கு ‘ என ஒன்றைத் திருப்பிக் கொடுத்தார். கதிரேசனுக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. தினமும் அந்த பத்து போளி வாங்கியவர் வருகிறாரா என கோச்சுகளில் தேட ஆரம்பித்து விட்டார். ஐந்தாம் நாள்தான் கன்னியாகுமரி வண்டியில் குமாரைப் பார்க்க முடிந்தது.
‘ ஐயா, நீங்க கொடுத்த இருநூறு ரூபாய் நோட்டோடு இன்னொன்றும் ஒட்டி வந்துவிட்டது. நானும் கவனிக்கவில்லை; மன்னியுங்கள்’ என திருப்பிக் கொடுத்தார். ‘எப்படி என்னைக் கண்டு பிடித்தீர்கள்’ என ஆச்சரியப்பட்டார் குமார்.
‘ பத்து போளி பொதுவாக யாரும் வாங்குவதில்லை. அது தவிர புது இருநூறு ரூபாய் நோட்டும் அபூர்வமே.’
(123 வார்த்தைகள்)
