சுபாஷிணி ரமணன்/”விளையாட்டுப்பிள்ளை “

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுபாஷினி ரமணன் எழுதிய “விளையாட்டுப்பிள்ளை ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

“அம்மா, அது என்ன சத்தம்?”

“எதுடா கண்ணா?”

“கும்பலா போறாங்களே, அதுதான்! அது எதுக்கு?”

தெருவோரமாக உட்கார்ந்து, கிடைத்த பழைய சோற்றை குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்த லட்சுமிக்கும் அந்த சப்தம் கேட்டது தான். ஆனால் அதற்காக அவள் ஒன்றும் அதைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அதான் வருடாவருடம் வருகிறார்களே!

அதுவும் இந்த ஆடிமாதம் பிறந்துவிட்டால் போதும். வரிசையாக இரண்டு மாதங்களுக்கு ஏதோ ஒரு பண்டிகை. அதற்கு என்ன தான் வாங்குவார்களோ, தெருவில் எப்போதும் மக்கள் கூட்டம்.

எந்த பண்டிகை வந்தால் என்ன? அவர்களைப் போன்ற ஏழை மக்களுக்கு வாய்ப்பது எச்சில் சோறுதானே!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்றால் மட்டும் வேடிக்கை பார்க்க நிறைய விஷயங்கள் கிடைக்கும். அதே சமயம் சிற்றுண்டிகளும், சில நல்லவர்களால் புது சோறும் கூட கிடைக்கும்.

அதே தெருவில் சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளிகளும் ஒன்றிரண்டு இருந்தன. அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் கிருஷ்ணர் வேடமும், ராதை வேடமும் போட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் லட்சுமியின் மனசு நெகிழும்.

“என் பிள்ளைக்கும் ஒருநாளாவது இப்படிக் கண்ணன் வேடம் போட்டுப் பாக்கணும், ” என்று ஆசை வரும்.

அதைப் போட்டவுடன் அழகான குழந்தைகள், இன்னும் எவ்வளவு அழகாக மாறி விடுகின்றனர். நினைப்பினிலேயே முரளிக்கு அலங்காரம் செய்து பார்த்து மகிழ்வாள். ஆனால் உண்மையில் செய்து பார்க்க வேண்டும் என்றால், அதற்கு செலவு பிடிக்குமே! யாரிடம் போய்க் கேட்பது? கேட்டாலும் யார் குடுப்பார்கள்?

பசிக்கு சோறு குடுப்பதற்கே யோசிப்பவர்கள், ஆடம்பரத்திற்கும், ஆசைக்கும் உதவி செய்வார்களா?

ஏழைக்கு எதற்கு இந்த ஆசை? பெருமூச்சுடன் அந்த எண்ணத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டாள்.

அந்த பரபரப்பான வீதி முக்கில் தான் வாடகைக்குத் துணிகள் தரும் கடையும் இருந்தது. நாடகத்திற்கு வேஷம் கட்டுகிறவர்கள், குறிப்பாக புராண நாடகம் போடுகிறவர்கள், பள்ளி, கல்லூரிகளில் நாடகம் நடத்துபவர்கள் எல்லாம் அதற்கான பொருட்களையும், துணிகளையும், அலங்காரப் பொருட்களையும் வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அங்கேயாவது ஒரு நாள் குழந்தைக்குத் துணி எடுத்துப் போட்டுப் பார்க்க வேண்டும். இந்த ஆசை என்று நடக்குமோ தெரியாது. மனசு எதையோ நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்க, கைகள் குழந்தையின் தலையை வருடிக் கொண்டிருந்தன.

“அம்மா, சொல்லும்மா,” முரளி விடாமல் கேள்வி கேட்டு அவள் புடவையைப் பற்றி இழுத்தான்.

“கண்ணன் பொறந்த நாளு வருதில்லையா?”

“பொறந்த நாளுன்னா? “

“கண்ணன் குட்டிப் பாப்பாவா இந்த பூமியில பொறந்த நாள்.”

“சாமி குட்டிப் பாப்பாவா இருந்துச்சா?”

“ஆமாண்டா, எல்லாருமே பொறக்கும் போது குட்டியா தான் இருப்பாங்க.”

“நான் கூட அப்படித் தான் குட்டியா இருந்தேனா?”

“ம்,” தலை ஆட்டினாள் லட்சுமி.

“அப்போ ஏன்மா எனக்குப் பொறந்தநாள் கொண்டாட மாட்டேன்கற!”

குழந்தையிடம் என்ன சொல்ல முடியும்? காசு இல்லை என்று சொன்னால் புரியுமா?

“செய்யறேனே! நீ குட்டியா இருந்ததால மறந்து போச்சு,” எதையோ சொல்லி சமாளித்தாள்.

“இந்த வருசம் செய்வியா?”

“செய்யறேண்டா செல்லம்;” அவனை அணைத்துக் கொண்டு பலமாகச் சொன்னவள், கண்களைத் துடைத்துக் கொண்டே, “எப்படியாவது செய்யறேண்டா கண்ணா,” என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, “எப்படியாவது செய்ய வை கண்ணா,” என்று கடவுளிடமும் வேண்டிக் கொண்டாள்.

“அம்மா! என் கால்ல மட்டும் ஏம்மா நிறைய விரல் இருக்கு!”

“அதுவா? இந்த உலகத்துல நிறைய பேர் இருக்காங்க இல்லையா? கடவுளுக்கு ரொம்ப பிடிச்சவங்களைப் பாக்க வரும்போது அடையாளம் தெரியறதுக்காக, இந்த மாதிரி அடையாளம் வெச்சுப்பார்.”

“அப்போ அவரை நமக்கு எப்படித் தெரியும்மா? அவருக்கும் இதுமாதிரி இருக்குமா?*

“இருக்கும். இருக்கும்.அவரே உனக்கு சொல்லுவார்.”

முரளி சிரித்தான். அவனுக்குப் புரிந்தது பாதி. மீதி அவன் நம்பிக்கையில் நிரப்பிக் கொண்டான். லட்சுமி அவன் கால்களை மெதுவாகத் தொட்டாள். அந்தச் சிறு விரல்கள். ஒரு காலில் மட்டும் அதிகப்படியான இரு விரல்கள். “இருப்பதெல்லாம் போதாது என்று இது வேறு சோதனையா?”

“கண்ணன் குட்டியா இருந்தப்போ, அவருக்கும் அவங்கம்மா இப்படித்தான் சோறு குடுப்பாங்களா? அவரும் இப்படித்தான் அம்மாவின் மடியில் தலை வைத்திருப்பாரா?,” முரளியின் கேள்விகள் இவை.

லட்சுமியின் கண்கள் பழைய சோறு இருந்த பாத்திரத்தை வெறித்தன.
“கண்ணன் குழந்தையாய் இருந்தபோது எப்படி இருந்திருப்பான்?,” லட்சுமி யோசித்தாள்.

பட்டாடை உடுத்தி, பால்சோறு தின்றிருப்பான். ஆனால் அவளுடைய கண்ணன்?

கையில் சங்கோ சக்கரமோ இல்லாத கண்ணன்; ஆனால் பசிக்கும் போது அழுத கண்ணன்.

இவனுக்குக் கண்ணன் வேடம் கூட போடமுடியாமல், ஏழ்மை தடுக்கிறது. ஏக்கப் பெருமூச்சு விட்டாள் லட்சுமி. யசோதை பாலும், நெய்யுமாய்க் கண்ணனுக்கு ஊட்டியிருப்பாள். என்னைப் போல் பழைய சோறா தந்திருப்பாள்?

கண்களில் துளிர்த்த நீரை முரளி பார்க்காமல் இருப்பதற்காக, முகத்தைத் திருப்பிக் கொண்டு, கண்களைத் துடைத்துக் கொண்டாள் லட்சுமி.

“ஆனாலும் என்ன? என் அன்பில் குறையுண்டா? பால் சோறானாலும், பழைய சோறானாலும், பாசத்துடன் கொடுப்பவை தானே தாயின் கைகள்?” தனக்கே கூறி, நியாயப் படுத்திக் கொண்டாள் லட்சுமி.

முரளியின் கேள்விகள் முடியவில்லை. ஆனால் சாப்பாடு முடிந்திருந்தது. எனவே குழந்தையின் வாயைத் துடைத்து, “விளையாடு போ,” என்று அனுப்பி விட்டாள்.

அருகில் இருக்கும் மாநகராட்சி பூங்காவில் விளையாடப் போய்விட்டான் முரளி.

லட்சுமியைப் போல தெருவில் தங்கி, கிடைத்த வேலையைச் செய்து வாழ்பவர்களை நம்பி, வீட்டு வேலைக்கு யாரும் வைத்துக் கொள்வதில்லை. எனவே, பண்டிகை நாட்களில் பூங்கா, கோயில், சர்ச் என எல்லா இடங்களிலும் கூட்டும் வேலையைச் செய்வாள் லட்சுமி. எப்போதையும் விட அன்று அவளுக்கு ஆதாயம் உண்டு.

அன்று கோகுலாஷ்டமி. கிருஷ்ணன் கோயில் உள்ள வீதி என்பதால் காலையிலேயே களை காட்டிவிட்டது அந்தத் தெரு. வாசல்களில் தண்ணீர் தெளிக்கப் பட்டு, வண்ணக் கோலங்கள் பெரிது, பெரிதாய் போடப் பட்டன. சாணம் கலந்த மண்வாசனை தெருவெங்கும் காற்றில் கலந்திருந்தது.

கோவிலிலிருந்து, மணி ஓசையும், மந்திரங்களின் ஒலியும் கேட்டன.
வண்ணக் கொடிகள் காற்றில் ஆடின.

லட்சுமி எப்போதும் போலவே எழுந்தாள். பண்டிகை அவளுக்குப் புதிதல்ல. புதிதாகச் செய்ய எதுவுமில்லை. எதையும் மாற்றுவதுமில்லை.முரளி எழுந்து வந்ததும், பழைய சோற்றை நீர் ஊற்றிக் கரைத்தாள். முரளி பசியுடன் சாப்பிட்டான்.

“அம்மா, இன்னைக்குக் கண்ணன் வருவானா?” மிச்சமிருந்த கேள்விகளில் ஒன்றைக் கேட்டான் முரளி.

“வருவான், வருவான்,” என்ற பதிலை அவனுக்குத் தந்தவள், “நமக்கு வருவானா என்று தெரியவில்லை கண்ணே,”என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். முரளிக்குத் தாய் சொன்ன பதில் போதுமானதாக இருந்தது.

மாறு வேட உபகரணங்கள் விற்கும் கடையின் முன் குழந்தைகள், பெற்றோர்கள் கூட்டம். நீல முகம், மயில் இறகு, பட்டாடை. ஒரு சிறுவன் வேடம் போட்டுக் கொண்டு வெளியே வந்தபோது, அவன் அம்மாவின் முகத்தில் பெருமை ஒளிர்ந்தது.

தெருவழியாகப் போன குழந்தைகளை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் முரளி.

“அம்மா… நானும் கண்ணன் ஆகலாமா? ” கண்களில் ஆவல் தெறித்தது.

அவள் பதில் சொல்லவில்லை. அவன் கையை மட்டும் பிடித்தாள். அந்தப் பிடிப்பில் ஒரு மன்னிப்பு கேட்கும் பாவனை இருந்தது. ஆனால் அதை உணரும் பக்குவம் முரளிக்கு இல்லை. இருந்தும், அவன் பிடிவாதம் பிடிக்கவில்லை. அவனுக்குப் பொறாமை இல்லை. ஆசை மட்டும் இருந்தது.

முரளி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தான். குழந்தைகள் போய் முடிந்ததும், தெரு மீண்டும் அமைதியானது. மண்ணில் மலரிதழ்கள். ஒரு மயில் இறகு. முரளி அதை எடுத்தான்.

“அம்மா, இது கண்ணனோடதா? நான் இதை எடுத்துக்கலாமா? ”

லட்சுமி தலையசைத்து விட்டு, அவனை அணைத்துக் கொண்டாள்.

பள்ளியில் கண்ணனும், ராதைகளுமாக, விதவிதமான நிறங்களில், உடையணிந்து மாணவ மாணவிகள் குவிந்தார்கள்.

கோவில்களில் காலையிலிருந்து பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள், நைவேத்தியங்கள் என்று பிரமாதப் பட்டன.

வீதிகளிலும், தெரு மேடைகளிலும் தெய்வ உருவங்களின் வேடமிட்டவர்களின் நடனங்கள், நாடகங்கள் என களை கட்டின.

எல்லாவற்றையும் அரூபமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு கால் வலிப்பது போல இருந்தது. சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினான்.

அவன் பார்வை சுற்றிலும் விழுந்தது. அதோ! அந்தக் குழந்தை! மூடிய கடையின் முன்னால் கிடைத்த துணி மூட்டையின் மேல் தலையை வைத்து சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறானே!

மழை பெய்து சுற்றிலும் ஈரமாக இருப்பது தெரியாது, சுற்றிலும் வெளிச்சத்தை வாரி வீசியபடி ஒலிப்பானை அலறவிட்டபடி விரையும் வாகனங்களைப் பொருட்படுத்தாது, சுற்றிலும் ஓட்டை உடைசல் சாமான்கள், ஒற்றைக் காலணி. இருந்தும் என்ன! ஆனந்தமாய், முகத்தில் விகசிக்கும் புன்னகைக் கீற்றுடன் கண்களில் கனவுடன் நிறைந்த மனத்தினனாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறானே! பார்க்கும் போதே கண்ணனுக்கு ஆனந்தத்தை அளித்து மனநிறைவைத் தந்தது.

சோர்வுற்றிருந்த மனதுக்கு இன்றைய விளையாட்டு இவனுடன் என்று தோன்றிவிட்டது.

கண்ணன் குழந்தையிடம் வந்தான். அருகில் இருந்த துணிமூட்டையை எடுத்து தலைக்கு வைத்துக் கொண்டான். பார்வை குழந்தையின் கால் விரல்கள் மேல் விழுந்தது. அவன் தாயிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.

இன்னொரு விரல் அவனுக்கு முளைத்தது. கால்மேல் காலைப் போட்டுக் கொண்டான். பாற்கடல் மேல் சுகசயனம் செய்பவன் போல் கண்களை மூடிக் கொண்டு அறிதுயில் கொண்டான்.

தூங்கிக் கொண்டிருந்த முரளியின் கனவுக்குள் கண்ணன் வந்தான். அவன் தானா? என்று அறிவதற்காக கால் விரல்களைப் பார்த்தான். “அம்மா! கண்ணன் வந்துட்டாரும்மா!” பிதற்றியபடி மறுபடி கண்களை மூடிக் கொண்டான்.

தூரத்தில் லட்சுமி வந்து கொண்டிருந்தாள். கையில் துணிச் சுருள் ஒன்று. முகத்திலோ ஆனந்தம்.

எப்போதும் போல் பள்ளி குழந்தைகள் கண்ணனும், ராதையுமாய் வேடமிட்டு ஆடுவதும், பாடுவதுமாய் அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

குழந்தைகள் ஆடி முடித்தவுடன் அவர்களைப் பொறுப்பாய்க் கழிவறைக்குக் கூட்டிப் போய் சுத்தம் செய்து கூட்டிவரும் வேலைக்கு லட்சுமியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கு மறுபடி உடையை அணிவிக்கும் போதும், அந்த உடையை ஏக்கத்துடன் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி.

குழந்தை முரளியின் முகம் தோன்றி அவளை இம்சை செய்து கொண்டிருந்தது.

பழைய உடையை மாற்றி விட்டதும், குழந்தையை பெற்றோரிடம் கொண்டு விட்டு விட்டு, மாற்றிய உடையை அவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் லட்சுமி.

“இவனையும் ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போய் வாங்க லட்சுமிம்மா,” கேட்ட குரலாய் இருக்கவே தலையை நிமிர்த்திப் பார்த்தாள் லட்சுமி.

ரோசம்மா தன் பேரனுடன் நின்றிருந்தார். சர்ச்சுக்கு வேலைக்குப் போகும்போது பார்த்துப் பழக்கம் என்பதால், “அம்மா! நீங்க எங்க இங்க!” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

“என் பேரனக் கூட்டிட்டு வந்தேன் லட்சுமிம்மா. மாறுவேடப் போட்டில கலந்துக்கப் பேர் குடுத்திருந்தான். அவங்க அம்மா, அப்பா வேலைக்குப் போய்ட்டதால நான் வந்தேன்,”என்றார்.

“பேரன் ரொம்ப அழகா இருக்காம்மா!அப்படியே கிருஷ்ணனாட்டமே இருக்கு. வீட்டுக்குப் போய் சுத்தி போடுங்கம்மா. நீங்க திருஷ்டி சுத்துவீங்களா?” கேட்டுக் கொண்டே குழந்தையைக் கூட்டிப் போனாள் லட்சுமி.

குண்டுக் கண்களும், சுருட்டை முடியுமாய்க் கண்களில் விஷமத்துடன் சிரித்தவாறு நின்ற ராபர்ட்டின் கன்னங்களில் கைவைத்துத் தடவி திருஷ்டி எடுத்த லட்சுமி, குழந்தைக்குத் துணியை மாற்றி விட்டாள்.

நீலப் பட்டு மயில்கண் நிற வேட்டியும், நீலப் பட்டுச் சட்டையையும் மடிக்கும் போது மெத்மெத்தென்று இருந்தது. பிளாஸ்டிக் முத்துமாலைகள், கிரீடம், மயிலிறகு, புல்லாங்குழல் என அனைத்தையும் அகற்றினாள். அழகாக மடித்து கவரில் போட்டாள்.

“இது முரளிக்குப் போட்டால் எப்படி இருக்கும்?”

கற்பனையிலேயே மகிழ்ச்சி அடைந்து, நினைவுலகத்திற்கு வந்தாள். கவரை ரோசம்மாவிடம் நீட்டினாள்.

கற்பனையின் விரிவு கண்களிலும், முகத்திலும் தெரிந்திருக்க வேண்டும். ரோசம்மா அவளையே பார்த்தார்.

“நீயே எடுத்துட்டுப் போ, ஆயாம்மா.”

“நானா? ஏம்மா? எதுக்கும்மா?” கேட்டது உண்மைதானா என்று அறிவதற்காய் குளறலாய்க் கேள்விகளைக் கேட்டாள் லட்சுமி.

“உனக்கும் இந்த வயசுல ஒரு பையன் இருக்கான்னு சொல்லியிருக்கல்ல! எடுத்துட்டுப் போய் அவனுக்குக் குடு. நான் கொண்டு போய் என்ன செய்யப் போறேன்! ஒருநாள் கூத்துக்கு வாங்கினது தான். விழாவுக்காக வாங்கின துணி தானே இது!”

கொடுப்பது தெரியாமல் கொடுத்து புன்னகைத்தார் ரோசம்மா. “ இன்னும் இவனுக்கு பத்தாம போன நிறைய புதுசும் இருக்கு. அடுத்த வாரம் சர்ச்சுக்கு வரும்போது வாங்கிட்டுப் போ.”

கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிட்டவளின் கையைத் தடுத்து, தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்பினார் ரோசம்மா.

உற்சாகத்துடன் மீதி வேலைகளை அவசர அவசரமாக முடித்தாள் லட்சுமி. கிளம்பும்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் கூப்பிட்டார். வருபவர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கிய பலகாரங்கள், பூஜைக்கு வாங்கின பழங்கள் ஆகியவற்றைக் கொடுத்து, “லட்சுமி, இன்னிக்கு வந்த பெற்றோர்கள் எல்லோருமே உன்னோட பொறுப்பையும், வேலை செய்யற நேர்த்தியையும் பாராட்டினாங்க. பள்ளிக்கு எப்பவும் வேலை செய்ய உன்னால் வரமுடியுமா?” என்று கேட்கவும் என்ன சொல்வது என்று புரியாத மகிழ்ச்சியில் தலையை மட்டும் ஆட்டினாள் லட்சுமி.

மகனைக் காண ஓடோடி வந்தவள், “முரளிக் கண்ணா! ஏந்திருடா! உனக்குப் பொறந்த நாளுக்கு என்னென்ன கொண்டு வந்திருக்கேன், பாரு!” என்று அவனை எழுப்பினாள்.

கனவில் கண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்த முரளி விழித்து, “இங்க தானே இருந்தாரு! எங்க காணோம்?” என்று தேடினான்.

தூக்கத்தில் உளறுகிறான் என்று நினைத்த லட்சுமி தான் கொண்டு வந்தவைகளை அவசரமாக அவனுக்கு அணிவித்தாள்.

“கேட்டவர்கள் கேட்டபடி கண்ணன் வந்தான், கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்.
“கண்ணன் வந்தான்-மாயக் கண்ணன் வந்தான்.”

விழாவிற்காக ஏற்பாடு செய்த ஒலிபெருக்கியிலிருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அரூபன் ஆனந்தமாய்ச் சிரித்தான். இன்றைய விளையாட்டு நல்லபடியாய் முடிந்ததில் மகிழ்ச்சி அவனுக்கு.

“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.”

“எல்லாம் வல்ல இறைவனுக்கு வணக்கம் செலுத்துகிறார் கம்பர். இறைவன் இந்த உலகினைப் படைக்கிறான்; காக்கிறான்; அழிக்கிறான்.

படைத்தல், காத்தல் அழித்தல் ஆகிய இந்த மூன்று தொழில்களும் தொடர்ந்து நடக்கின்றன; நடந்து கொண்டே இருக்கின்றன. இடைவிடாது நடந்து கொண்டே இருக்கின்றன.

இது இறைவனின் திருவிளையாடல். இவ்விளையாடலுக்கு ஓர் எல்லை உண்டா? இல்லை, முடிவே இல்லை, இவ்விதம் விளையாடும் ஒருவனே நம் தலைவன், அவனே நம் இறைவன். அவனையே நாம் சரண் அடைவோம்.”

கோவிலில் யாரோ பிரசங்கம் செய்து கொண்டிருந்தது ஒலிபெருக்கியில் கேட்டது. புன்னகைத்தபடி கண்ணன் நடந்தான்.

**

சுபாஷிணி ரமணன்


திருமதி சுபாஷிணி ரமணன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெடாவூர் கிராமத்தில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தை முதுகலைப் பாடமாகப் படித்திருக்கிறார்.

முகநூலில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் என்று பயணத்தைத் தொடங்கியவர். இன்றுவரை சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு, திரைப்படங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் இரண்டு, கவிதைத் தொகுப்பு ஒன்று, குறுநாவல்கள் ஐந்து என்று தன்னுடைய படைப்புகளை மின் நூல்களாகவும், அச்சு நூல்களாகவும் வெளியிட்டிருக்கிறார்.

இரண்டு சிறுகதைகளும், இவர் நூலைப் பற்றிய விமர்சனம் ஒன்றும் பாரம்பரியமான கல்கியில் வந்ததைப் பெருமையாகக் கருதுகிறார். ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மற்றும் ‘சங்கப்பலகை’முகநூல் குழுமமும் சேர்ந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவருடைய குறுநாவல் பரிசு பெற்றிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன