கஸ்தூரி குருசாமி / உயர்ந்த உள்ளம்

கௌரியும் வாணியும் இணை பிரியா தோழிகள். இருவருக்கும் திருமணம் ஆகி கௌரிக்கு ஒரு பெண்ணும் வாணிக்கு ஒரு ஆணும் இருக்கின்றனர். மனது விட்டுப் பேச நட்பு போல் சிறந்த உறவில்லை தானே! கௌரியின் பெண் லயாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவளுக்கு ஏற்றார் போலப் படிப்பு,வேலை அனைத்திலும் வாணியின் மகன் கௌசிக் இருந்தான். ஆனால் லயா மாப்பிள்ளையிடம் பேசிய பின்பு தான் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வேன் என்றாள். மாப்பிள்ளை வீட்டில் எந்த வரதட்சணையும் கேட்கவில்லை. நல்ல பண்பான குடும்பம் என்பதால் லயாவின் பெற்றோர் ஒப்புக் கொண்டனர். கௌரிக்கும் வாணிக்கும் மிகுந்த கவலையாக இருந்தது. லயா என்ன கேட்பாளோ தெரியவில்லை. இந்த திருமணம் எப்படியாவது நடக்க வேண்டும்.அந்த நாளும் வந்தது. மாப்பிள்ளை
கௌசிக் பெண் பிடித்து விட்டது என்று கூறவும்,இருவரும் பேசிக்கொள்ளட்டும் எனப் பெற்றோர் சம்ம தம் தெரிவித்தனர். மொட்டை மாடியில் போய் அரை மணி நேரம் பேசினர். திரும்பி வரும்போது கை கோர்த்துக்கொண்டு இறங்கி வந்தனர். ஆனால் இரு பெற்றோருக்கும் ஆர்வம் தாளவில்லை. என்ன பேசினீர்கள்? என வாணி கேட்க. “அம்மா லயா வாங்கும் ஊதியத்தில் கால் பங்கு அம்மா அப்பா பெயரில் வங்கியில் போடுவாள்.அவள் அம்மா அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதிலிருந்து அனைத்தும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.அதுபோல் அவர்களால் தனித்து இயங்க முடியாது போனால் எங்களோடு இருப்பார்கள்.இதே நானும் உங்களுக்காக செய்ய வேண்டும் எனச் சத்தியம் வாங்கிக் கொண்டாள்” என்றான். இரு பெற்றோர் களையும் ஒரே போல் நினைக்கும் பிள்ளைகள் கிடைத்ததில் தோழிகளின் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.

166

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன