சாரதா ஸ்ரீனிவாசன்/”அம்மாவின் குரல் “

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சாரதா ஸ்ரீனிவாசன் எழுதிய “அம்மாவின் குரல் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு –

இதோ ராகவ் தன் வீட்டு வாசலில் அமர்ந்தவன் எதிரே இருந்த அந்த பெரிய மருத்துவமனையைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த அம்மாவிற்கு அதிக பட்சம் அறுபத்தி எட்டிலிருந்து எழுபது வயதுக்குள் இருக்கும். அவள் உடுத்தி இருந்த சேலை சிவப்பு நிறம். அது வெளிரிப் போய் கொஞ்சம் இளந் தாமரை நிறத்தில் இருந்தது. வெளிறிப் போய் என்பதை அவன் கண்கள் அழகாக படம் பிடித்து விட்டது. அதிகமாக தொடுதல் உள்ள பக்கமான முந்தானையும் மாராப்பு பகுதியும் வெளிர் நிறமாகவும், அவள் தலைப்பு மற்றும் கீழ் பகுதிகள் பளிச் என்று சிவப்பு நிறத்தையும், பிரதிபலித்தது.
இத்துடன் ஒரு இருபது முறையாவது முந்தானையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டிருப்பாள் அந்த அம்மா, வயது முதிர்வு, அருகில் எந்த துணையும் இல்லாத தனிமை, எதையோ யாரையோ எதிர்பார்த்து அலையும் கண்கள், அந்த பார்வை ஒருநூறு முறையாவது வெளிக் கதவை பார்த்து இருக்கும் – இதையெல்லாம் பார்க்கும் போது ராகவுக்கு மனசு கனத்தது.
ஏலே ராகவா இட்டிலி எடுத்து வெச்சருக்கேன்; ராசாஆறிடப் போறது. சீக்கிரம் சாப்புடு என்ற அம்மாவின் குரல் காதில் விழ தொங்க விட்டிருந்த கால்களை திண்ணையிலிருந்து கீழே வைத்தவன் முட்டை மடக்கி எழுந்த போது தான் அவனுக்கு புரிந்தது அந்த குரல் வெறும் பிரமை என்று. அம்மா இறந்து இன்றுடன் ஐந்து நாளாகிறது. அவனை அறியாமல் அவன் முதுகு குலுங்கியது. கண்கள் கண்ணீரில் மிதந்தது.
உன்னை தனியே தவிக்க விட்டுட்டு, நான் எங்கேயும் போக மாட்டேன்னு அடிக்கடி சொல்லும் தன்னைப் பெற்ற தாய் எப்படிப் பட்டவள் என்பதை அவன் நன்கு அறிவான். அன்பை அள்ளிக் குடுப்பதில் வள்ளல் அவள். அவனுக்கு குடுப்பதில் மட்டும் அல்ல; அவர்களின் உறவுகள் அனைவரும் அவள் மேல் அத்துணை பிரியம் வைத்து இருந்தனர். பிள்ளையை அவன் குடும்பத்துடன் பார்க்க ஆசைப் பட்டவள் தேடி தேடி ஒரு பெண்ணைக் கட்டி வைத்தாள். அவள் பெயரை உச்சரிப்பது கூட அவன் தாய்க்கு அவன் செய்யும் துரோகம் என்று நினைக்கும் அளவிற்கு அவனைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாள் அவள்.
கட்டியவள் வந்தாள். அவளையும் பெற்ற பெண்ணுக்கு மேல் பார்த்துக் கொண்டாள். ஆனால் வந்தவளுக்கு கணவனின் அன்பு துண்டாடப்படுவது பிடிக்கவில்லை. அத்துணை அன்பும் விள்ளாமல் விரியாமல் அவளுக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள். அதனால் ஏற்பட்ட சின்ன சின்ன மனஸ்தாபங்கள் பெரிதாக அவனையும் அவனைப் பெற்ற தாயின் மனதையும் அவளது வார்த்தைகள் துளையிட ஆரம்பித்தது. துப்பாக்கி தோட்டா உடலை மட்டும்தான் துளையிடும். ஆனால் மருமகள் ஏவிய வார்த்தை தோட்டாக்கள் அம்மாவை ஆட்டம் காண வைத்தது. அவனாவது பகலில் வெளியே போய் தோட்டாக்களிலிருந்து தப்பித்தான்.
ஆனால் தாயையோ முழு நேரமும் அந்த தோட்டாக்கள் சல்லி சல்லியாக்கியது. அம்மா வீட்டை விட்டு போக முடிவு செய்தாள். ஆனால் ராகவோ அதற்கு உடன்படவில்லை. மூன்று வயதில் தந்தையை இழந்த அவனை தாயாக தந்தையாக இருந்து வளர்த்தவள். அவனின் இப்போதைய வசதி வாய்ப்பு எல்லாம் அவள் போட்ட பிச்சை. அவன் மனைவியிடமிருந்து விலக ஆரம்பித்தான்.

கோபித்துக் கொண்டு பிறந்த வீடு சென்றவளின் விவாகரத்து வேண்டி வந்த கடிதம் தான் ராகவுக்கு விடுதலை கடிதம் போல தோன்றியது. வழக்காடு மன்றத்தில் இந்த பிரிவை சட்ட பூர்வமாக அறிவித்த போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அம்மா தான் ரொம்ப வருத்தப்பட்டாள். ஆனால் ராகவுக்கோ துளி கூட வருத்தம் இல்லை. ஆனால் அவனுக்கு திருமணம், தாம்பத்யம், வாரிசு இதெல்லாம் இனிவரும் காலங்களில் ஆசீர்வதிக்கப் பட்ட சிலருக்கு மட்டும் தான் அழகாக அமைகிறது. மற்றவர்கள் கிடைத்த வாழ்க்கையை நிறைய முரண்களுடன் தான் நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர் என்பதை தெள்ள தெளிவாக புரிய வைத்தது. அம்மா கூட அதற்குப் பிறகும் இரண்டு முறை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தாள். கண்ணைத் திறந்து கொண்டே யாராவது பாழும் கினற்றில் குதிப்பார்களா ஏற்கனவே சுட்டு விட்ட கை இனி நீட்டக் கூடாது என்று முடிவு செய்தவன் தன் முடிவில் ஸ்திரமாக இருந்தான்.
அதனால் தானோ என்னவோ பெற்ற தாயை அவள் சாகும் வரை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். அம்மாவுக்கு அவள் வம்சம் விருத்தி ஆகவில்லையே என்ற வருத்தம் தவிர வேறு எந்த குறையும் சாகும் வரை இல்லை. தன் தாயின் நினைவிலேயே இருந்ததனாலோ என்னவோ அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் உட்கார்ந்து இருந்த அந்த முதியவளின் மேல் இருந்த அவன் கண்கள் அங்கிருந்து நகர மறுத்தது.
பாவம் உள்ளே பார்ப்பதும் வெளியே பார்ப்பதுமாக இருந்தாள் அந்த முதியவள். பிணவறை உள்ளே அவளுக்கு வேண்டிய யாரோ பிணமாக இருக்கின்றனர். ஆஸ்பத்திரி வாசலில் அவள் யாரையோ எதிர்பார்த்து பார்வையை அங்கே செலுத்திக் கொண்டிருந்தாள். ரொம்ப நேரமாக இதுவே நடந்து கொண்டு இருந்தது. ஆனால் அவள் தலையை குனிந்து கொண்டு கைகளில் முகத்தை வைத்துக் கொண்டு இருக்கும் அந்த நிலையைப் பார்த்தால் அவள் விசும்புவது தெரிந்தது. அவள் முதுகு சிறிது மேல் ஏறி கீழே இறங்குவது போல் தெரிந்தது. இதற்கு மேல் காத்திருப்பது தேவையில்லை என்று நினைத்த ராகவ் அங்கு சென்று அந்த முதியவளின் தோள்பட்டையில் மெதுவாக கை வைத்தான்.
வந்துட்டியாடா செல்லம் என்று பார்த்த அந்த முதியவளின் கண்களில் தெரிந்த ஏமாற்றம் அவனை மிகவும் கலங்கடித்தது. “என்னம்மா யாரையாவது எதிர்பார்த்து காத்து இருக்கீங்களா?” – அவன் கேட்ட அடுத்த வினாடி அவள் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். “யாருக்காக இத்தனை நாள் அருகில் இருந்து காத்து, காத்து என் நேரத்தை செலவிட்டேனோ அவர் என்னை விட்டுவிட்டு அந்தப் பிணவறையில் படுத்துக்கொண்டிருக்கிறார். “
“ஏன் அம்மா உங்கள் கணவர் இறந்து விட்டாரா?” என்று கேட்டவுடன்,
“ஆமாம்பா; நான்கைந்து நாட்களாக அவரைப் பிடித்து வைக்க போராடினேன். இப்பொழுது என் உடலில் சக்தி இல்லை. என்னை விட்டு அவர் போய் விட்டார் என்று குலுங்கிய அவளது முதுகை மெதுவாக நீவி விட்டவன், “சரி அம்மா உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள். மூன்று பையன்கள்; ஒரு பொண்ணு.”
“அவங்களுக்கெல்லாம் தகவல் சொல்லியாச்சாம்மா?”
“சொல்லியாச்சுப்பா. இந்த ஆஸ்பத்திரியில் நுழைஞ்ச உடனே அவங்களுக்கு எல்லாம் அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு தகவல் அனுப்பினேன். அஞ்சு நாளா நான் ஒத்தையில கிடந்து திண்டாடறேன் ஏன்னு கேக்க நாதி இல்லைப்பா. “
“ஏம்மா. அவங்க யாரும் இன்னும் வரலையா. அஞ்சு நாளா ஏன் ஒத்தையில கிடந்து திண்டாடறீங்க?
“எங்க வீட்டுக்காரர் பெரிய கவர்மெண்ட் ஆபீஸர். வீடு வாசல் பைசானு வாழ்ந்தோம். மூணு பசங்களையும் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம் பொண்ணையும் படிக்க வைத்து கல்யாணம் பண்ணி வச்சோம். இருந்த வீடு, வாசல், பணம் எல்லாத்தையும் பிள்ளைங்களுக்கு பங்கு வெச்சு குடுத்துட்டோம் பொண்ண கட்டினவன் ஒரு கயவன். அவளோட வாழ்க்கைய நாசமாக்கிட்டான். அவனுக்கு தெரியாம ஒரு துரும்பு கூட அவளால அசைக்க முடியாது அங்க. பெத்த பையனுக்கு வந்த மருமகங்க கில்லாடிங்க. எல்லாம் முந்தானைல முடிச்சு வச்சுட்டாங்க.”
“அதெல்லாம் சரி – இப்ப இறந்து போயாச்சும் தகவல் தெரிவிச்சிங்களா?
“போனை எடுத்தாதான்பா இறந்து போனதை சொல்ல முடியும். எவனுமே போனை எடுக்க மாட்டேங்கறானே?”
“சரி அம்மா, எனக்கு நம்பர் சொல்லுங்க. என்னோட மொபைல்ல இருந்து போட்டு பார்க்கிறேன். அவள் நம்பர் சொல்ல, சொல்ல குறித்துக் கொண்டவன் போனிலிருந்து. கூப்பிட ஹாஸ்பிடல் இருந்து பேசுறேன் என்று சொன்னவுடன் பட் என்று போன் வைக்கப்பட்டது. இந்த போன் வைத்த சத்தம் என்னவோ அந்த முதியவளுக்கு கேட்டிருக்குமோ என்னவோ? இத்தனை துக்கத்திலும் அவளின். உதட்டின் நுனியில் ஒரு விகாரச் சிரிப்பு தெரிந்தது.
மூன்று பையன்களுக்கும் போன் செய்தவன் ஒருவரிடம் இருந்தும் பதில் இல்லாது போக; “மாப்பிள்ளையோட நம்பர் குடுங்கம்மா” என்ற உடன், “வேண்டாம்பா, அவன் என் பெண்ணை கஷ்டப்படுத்துவான். அவளை வரவிட மாட்டான் இந்த விவரம் தெரிந்ததும் அவளை அழ வைப்பான். ஆனால், இங்கு வரவிட மாட்டான். அவளுக்கு தெரியாமலே போகட்டும்,” என்றாள் முதியவள்.
“சரி மா – இப்ப என்ன பண்ணனும்?” என்று ராகவ் கேட்க, கை இரண்டையும் பெரிதாக விரித்த அவள், எனக்கு யாருமே இல்ல; நீ ஏதாவது முடிஞ்சா உதவி பண்ணுப்பா,” என்று சொன்னவுடன் அவன் கண்கள் கலங்கியது. மனசு வலித்தது. அவன் அவனுக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாக இந்த மாதிரி பிணங்களை எரிக்க உதவி செய்யும் ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டான். ஏற்கனவே தாயின் அந்திம செலவுக்காக தெரிந்தவர்கள் அத்தனை பேரிடமும் கடன் வாங்கி விட்டான். அதனால் அந்த நிறுவனத்தின் தயவுடன் காரியங்களை ஆரம்பித்தான். அடுத்தடுத்த வேலைகள் கவனிக்கப்பட்டது.
எல்லாம் முடிந்தவுடன், “எனக்காக ஒரு உதவி செய்யுப்பா; நாங்கள் இருந்த வீடுவரையும் என்னுடன் வருவாயா?” என்று அந்த முதியவள் கேட்க ராகவும் உடன் போனான்.
அந்த வீட்டைப் பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருந்தது அவனுக்கு. ஒன்றுமே இல்லை அங்கு; கசங்கிய துணிகள் இரண்டு; மூன்று மஞ்சள் பைகள் தெரிந்தது. ஒட்டை உடைசலாக நாலைந்து பாத்திரங்கள். ஏழ்மையின் வாடை எங்கும் அடித்தது.
“ஐயா, பணத்தையும் சொத்தையும் பிள்ளைகளுக்கெல்லாம் கொடுத்தது போக கொஞ்சம் பணம் வச்சிருந்தார் வங்கில. அத வச்சு ஓட்டினேன்யா. இப்போ அஞ்சு நாளா ஆஸ்பத்திரி செலவுக்கு அதெல்லாம் எடுத்து செலவழிச்சிட்டேன். இனிமே வாடகை கொடுக்க கூட பணம் இல்லை. அதனால இந்த வீட்ட காலி பண்ணி சாவியை அந்த முன்னாடி வீட்டுல உரிமையாளர் இருக்காங்க அவர்கிட்ட கொடுத்திடலாம். அப்புறம் இங்கு இருக்க முடியாது.”
இனிமே காசு பணம் இல்லையே என்ற அவளைப் பார்த்த அவனுக்குத் தன் தாயே கலங்கி நிற்பது போல் தெரிந்தது.
“சரிமா, முதல்ல கிளம்புங்க எங்க போறதுன்னு அப்புறம் முடிவு செய்வோம்,” என்றவன், அங்கிருந்து முக்கியமான சாமான்களை கட்டப்பையில் போட்டு எடுத்து வெளியில் கொண்டு வைத்தான்.
“இருப்பா – வந்துர்றேன்,” என்று உள்ளே போனவள் அவசர அவசரமாக காலண்டரில் இருந்த முருகரை விழுந்து கும்பிட்டவள் அதன் கீழ் இருந்த இரண்டு 500 ரூபாய் தாள்கள் எடுத்துக் கொண்டு வந்து, “பெத்த மகனுங்க செய்ய வேண்டிய கடமை எல்லாம் நீ செய்தப்பா; நாங்க சம்பாதித்தது முழுசையும் அவங்களுக்கு அள்ளி கொடுத்துட்டோம்; என்னிடம் இருக்கிறது இவ்வளவுதான்; இதை தயவு செய்து வாங்கிக்கப்பா,” என்று நரம்பு சுருங்கி கிடந்த அந்த கைகளில் இருந்த இரண்டு 500 ரூபாய் தாளை எடுத்துக் கொண்டு வந்து இவன் கையில் திணித்தாள்.
“அம்மா, காசு எல்லாம் எனக்கு வேண்டாம்; ஏதோ என் தாயை பார்க்கிறார் போல் இருந்தது. அதனால் உங்களுக்கு எல்லாம் செய்தேன். உங்களை எங்க விடுறது. அதுதான் யோசித்து கொண்டு இருக்கிறேன்.”
“ஒண்ணும் கவலைப் படாதேப்பா; இந்த இடம் எனக்கு ரொம்ப பழக்கமான இடம். நாலைந்து வீட்டுல பத்து, பாத்திரம் தேச்சு என் வாழ்க்கையை ஒட்டிடுவேன்.” என்று சொல்லி முடிக்கும்போதுஅவள் குரல் கம்மியது.
அந்த கண்களில் தளும்பிய அந்த கண்ணீர் அவன் மனதை என்னவோ செய்தது. மனதில் தோன்றிய உணர்ச்சிகளின் போராட்டத்தில் சிக்கித் தவித்த அவன் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, “அம்மா ஐந்து நாள் முன்னாடி தான் என் அம்மாவை சாகக் குடுத்தேன். ஆனா நான் கும்பிடற முருகரே நீ அனாதை இல்லைப்பா, உனக்கு உன் அம்மாவை திருப்பி குடுத்திடறேன்னு உங்களை குடுத்து இருக்கார் போல இருக்கு. எனக்கு ஒரு தாய் வேண்டும். சம்மதமா அம்மா, உங்களுக்கு என் தாயாக என்னுடன் வர,” என்று கேட்ட ராகவை இழுத்து அணைத்த அந்த தாயின் இறுகிய அணைப்பு அவள் தாய்மை இந்த அணைப்பிற்காக எத்தனை ஏக்கத்துடன் இருந்திருக்கிறது என்பதை அவனுக்கு புரிய வைத்தது.
அந்த தாய் அவன் நெற்றியில் முத்தமிட அது கலப்படமில்லாத அன்பினால் அவனுக்கு குடுக்கப்பட்ட முத்தம் என்பதாலோ என்னவோ வளர்ந்து நின்ற அந்த குழந்தைக்கு அப்போது தான் முதன் முதலாக பிறந்தது போலிருந்தது. அவனுக்கு அந்த தாயின் முத்தம் விவரம் அறியாத சிறு பிராயத்தில் தன் தாயிடமிருந்து பெற்ற முதல் முத்தமும் இப்படித்தான் தித்திப்பாக இருந்து இருக்கும் என்று உணர வைத்தது. அணைத்து நின்ற அவளை விலக்க மனமில்லாமல் நின்றவனின் காதில்
“அய்யா ராசா நான் உன்னைத் தவிக்க விட்டு எங்கேயும் போகமாட்டேன், என்ற அம்மாவின் குரல் இப்போதும் ஒலித்தது.”


**

சாரதா ஸ்ரீனிவாசன்

திருநெல்வேலியை சார்ந்த திருமதி சாரதா ஸ்ரீனிவாசன் வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய “சிங்கிள் பேரண்ட” என்ற சிறுகதை அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டியில் (2024 -2025) இரண்டாவது பரிசு பெற்றது.

இவர் “மனதில் ஒரு மத்தாப்பு”, “என் கண்ணின் ஒளி நீங்கள் அன்றோ”, “ஒரு சத்தியவான் இரு சாவித்திரி” மற்றும் “அன்னியோன்னியம் அது தான் தாம்பத்யம்” என்ற நான்கு சிறுகதை தொகுப்புகளை பிரசுரம் செய்து இருக்கிறார்.

2024 ம் வருடம் ஐம்பது எழுத்தாளர்கள் இணைந்து 62 புத்தகங்களை வெளியிட்டதற்காக, அந்த எழுத்தாளர்களில் ஒருவராக பாராட்டு சான்றிதழை – “All India Book of Records Certificate – 2024” -பெற்றுள்ளார்.

மேலும் ஒரு பாராட்டு சான்றிதழை கீழ்க்கண்டவாறு பெற்றுள்ளார்.

  • SUENOS Excellence awards – 2025 powered by Ukiyoto.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன