வசந்தா கோவிந்தராஜன்/கடவுளின் தண்டனை

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி வசந்தா கோவிந்தராஜன் எழுதிய “கடவுளின் தண்டனை ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

“அம்மா, ஆட்டோ வந்தாச்சு, கிளம்பறேன்!” ஆரவ்யா சத்தமாகக் குரல் கொடுத்தாள்.

“லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டயா? சாயந்திரம் வீட்டுக்கு வந்தவுடனே மறக்காமல் ஃபோன் பண்ணு! பை!” வர்ஷா புடவைக்கு மடிப்பு வைத்துக்கொண்டே சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோ கிளம்பும் சத்தம் கேட்டது.

‘கார்ல போன்னு சொன்னாக்கேக்க மாட்டேங்கறா. நெருக்கியடிச்சுட்டு ஆட்டோல தான் போவேன்னு அடம் பிடிக்கறா!’ முணுமுணுப்புடன் புடவை மடிப்பை நீவி விட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

சொல்லி வைத்தாற்போல் செல்வி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். மேசையில் முறுகல் தோசையைக்கொண்டு வைத்து சாம்பார், சட்னியை நகர்த்தினாள். செல்வி இவள் பரபரப்புக்கு சளைக்காமல் ஈடுகொடுப்பாள். அவள் இங்கே வந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இவள் வருவதற்கு முன் இருந்தவர்கள் யாரிடமும் இத்தனை அனுசரணை இருந்ததில்லை.

“தேங்ஸ் செல்வி, எனக்கு தோசை ஊத்தி முடிச்சவுடன் நீயும் சாப்பிடு. அப்புறம் அந்த வேலை, இந்த வேலைன்னு சாப்பிடவே மறந்துடுவ!”

“இப்படி யாரும்மா சொல்லப்போறாங்க? சாப்பிடறேன்! சாம்பார் சரியா இருக்கா? பாப்பா இன்னிக்கு இரண்டு தோசை தான் சாப்பிட்டா. படிக்கற புள்ள; அதுவும் இப்ப தான் வயசுக்கு வந்திருக்கா, நல்லாச் சாப்பிட வேண்டாமா? எங்க ஊர்லல்லாம் நாட்டு முட்டையப்பச்சையா உடைச்சு வாயில ஊத்துவாங்க. இந்தப்புள்ளை முட்டைன்னு சொன்னாலே மூக்கப்பொத்துது!”

பெரிய மனுஷிபோல் சொல்லும் அவளைப் பார்த்து வர்ஷா புன்னகைத்தாள்.

‘பாவம், இவள் அம்மா திடீரென்று கொரோனாவில் இறந்து போனதால் இந்தப்பெண் அனாதையாகிப் போனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை!’

“சாம்பார் சூப்பரா இருக்கு. ஐயாவுக்குப்பிடிச்ச மாதிரிச் சின்ன வெங்காய வாசனை தூக்கலா இருக்கு! நைட்டெல்லாம் வேலை பார்த்துட்டு லேட்டாத்தான் தூங்கினார். எனக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன்!”

“ஆமாம், இன்னிக்கு ஏதோ ஸ்கூலுக்குப்போகணும்னு சொன்னீங்கல்ல!”

“ஆமாம், கவர்ன்மென்ட் கேர்ள்ஸ் ஹைஸ்கூல்ல இலவச மருத்துவ முகாம் இன்னிக்கு. மதியச் சாப்பாட்டுக்கு வர மாட்டேன்!”

வர்ஷா ஈரோடு அரசு மருத்துவமனையில் சீனியர்மருத்துவராக வேலை பார்க்கிறாள். இதுமாதிரி மருத்துவ முகாம்களுக்குப் போகும் ஒவ்வொரு முறையும் மனசெல்லாம் கனத்துப் போகும். ஏழைகளுக்குச்சோற்றுப் பிரச்சனை மட்டுமல்ல, ஏகப்பட்ட பிரச்சனைகள். அதையெல்லாம் கேட்டு நொந்து போயிருக்கிறாள்.

படித்த குடும்பங்களில் தெரிந்தே தவறுகள் நடக்கும் என்றால், படிக்காத குடும்பங்களில், அதுவும் வறிய குடும்பங்களில் தவறு என்ற பிரக்ஞையே இல்லாமல் சர்வ சாதாரணமாகக் குற்றங்கள் செய்து கொண்டிருப்பார்கள். இன்று என்னென்ன அனுபவங்கள் கிடைக்கப்போகிறதோ!

இளம் மருத்துவர்களைக்குழுக்களாகப் பிரித்து ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவிகளைப் பரிசோதனை செய்யச் சொல்லியிருந்தாள். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவிகளை வர்ஷாவும், செவிலியர் ஷியாமளாவும் பரிசோதித்தார்கள். பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு சத்துக் குறைவாக இருந்தது. சத்து மாத்திரைகள் கொடுத்துக்கொண்டே, மலிவாகக் கிடைக்கும் சத்துள்ள உணவு வகைகளைச் சொல்லி அவற்றைச் சாப்பிட வற்புறுத்தினாள்.

அந்த வயதில் தொண்ணூறு சதப் பெண்கள் வயதுக்கு வந்து விட்டிருந்தாலும், பெரும்பாலான பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய்ப் பிரச்சனை இருந்தது. அவர்களது உணவுப் பழக்க வழக்கம் குறித்துக் கேட்டு ஆலோசனைகள் சொல்லிக் கொண்டே வந்தவள் குயிலி என்ற பெண்ணைப்பரிசோதிக்கும்போது அதிர்ந்து போனாள்.

அந்தப்பெண் சோர்வாய், சோகையாய்த்தெரிந்தாள். பரிசோதிக்கும்போது அவள் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது. இங்கே வைத்து இவளிடம் அதிகம் கேள்வி கேட்க முடியாது.

அந்தப் பெண்ணிடம், “உங்கப்பா என்ன வேலை செய்யறாங்க?” அந்தப் பெண்ணின் கண் கலங்கியது.

“எனக்கு அப்பா கிடையாது மேடம், எனக்கு அஞ்சு வயசாகும்போதே அவர் செத்துப்போயிட்டார்!”

“அம்மா என்ன செய்யறாங்க?”

“அம்மா விவசாயக் கூலி. நூறு நாள் திட்டத்துல வேலை பாக்கறாங்க!”

“நீ இன்னிக்கு சாயங்காலம் உங்கம்மாவைக்கூட்டிட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பத்தரிக்கு வந்து என்னைப்பாரு!” அடையாள அட்டையைக்கொடுத்தாள்.

அந்தப்பெண் அழுகையை விழுங்குவது தெரிந்தது.

“உன்னோட அட்ரஸ் சொல்லு!”

குயிலி தயங்கிக் கொண்டே சொன்னாள். “இன்னிக்கு 5 மணிக்கு நீ ஆஸ்பத்திரிக்கு என்னைப் பார்க்க வரலைன்னா நான் உங்க வீட்டுக்கு வந்துடுவேன்!” மிரட்டும் தொனியில் சொன்னாள்.

“கண்டிப்பாவரேன் மேடம்!” குரல் தழுதழுத்தது.

வர்ஷா மருத்துவ முகாம் முடிக்கும்போது நொந்து போயிருந்தாள். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவி கர்ப்பம் என்பது தெரிந்ததிலிருந்து ஆரவ்யா பற்றிய கவலையும் சேர்ந்து கொண்டது. மணி நாலு. ஆரவ்யா வீட்டுக்கு வந்திருக்க வேண்டுமே! செல்வியை அழைத்தாள்.

“ஆரு வந்துட்டாளா?” குரலில் லேசான படபடப்பு.

“இப்பதாம்மா உள்ள நுழையுது. பாப்பா கிட்டக்குடுக்கவா?”

“ஆரு, வீட்டுக்கு வந்தவுடனே போன் பண்ணுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், நான்தான் கேக்கணுமா?” குரலில் அவளறியாமல் ஒரு கடுமை.

“இப்பதாம்மா உள்ள வரேன்; இன்னும் ஷூவைக்கூடக்கழட்டலை; வர வர உன்னோடதொல்லை தாங்க முடியலை,” அவள் குரலில் எரிச்சல்.

பாவம், அலுத்துவரும் பெண்ணைக் கடுப்பேத்திட்டேன்.

“சாரிம்மா, அம்மாவுக்கு இன்னிக்கு ரொம்ப வேலை, அந்த எரிச்சலை உன்கிட்டக்காட்டிட்டேன். சரி, ஏதாவது சாப்பிடு தங்கம்,” குரலில் இனிமையை வரவழைத்துக்கொண்டாள்.

உதவியாளரின் துணையுடன் மளமளவென்று இன்றைய மருத்துவ முகாம் அறிக்கையைத் தயார் செய்து முடித்தாள். ஷியாமளா எட்டிப் பார்த்தாள்.

“அந்தப்பெண் வந்திருக்கா! கூட ஒரு பையன் வந்திருக்கான்!”

வர்ஷா இரண்டாவது முறையாக அதிர்ந்தாள். பூனை போலிருக்கும் இந்தப்பெண் காதலிக்கும் பையனைக்கூட்டிட்டு வந்திருக்காளா? இரண்டுபேரும் என் காலில் விழுந்து உதவி கேட்கப்போறாங்களா?

“முதல்ல அந்தப் பெண்ணை மட்டும் வரச்சொல்லு.” மனசுக்குள் ‘காலம் எத்தனை மாறினாலும்அசிங்கப்பட்டுநிக்கறது பெண் தானே.’

குயிலி மெதுவாக உள்ளே நுழைந்தாள். அவள் கண்களில் மருட்சி. பொம்மையைப்பறிகொடுத்த குழந்தை மாதிரி விழித்தாள். அவளைப் பார்த்ததும் ஆத்திரம் வடிந்து சட்டென்று ஒரு அனுதாபம் பிறந்தது. உதவியாளரைப் பார்த்தாள். அவள் புரிந்துகொண்டு வெளியேறினாள்.

“ஏன் உங்கம்மாவைக்கூட்டிட்டு வரலை? அந்தப் பையன் யாரு, இவனைத்தான் லவ் பண்றயா?” தலையசைத்தாள்.

வர்ஷாவின் கோபம் தலைக்கேறியது. பள்ளியில் படிக்கும் போதே தினவெடுத்து அலையும் இவர்களுக்காக உழைக்கும் இவர்கள் குடும்பம்.

“உங்கம்மாவை இப்பவே வரச்சொல்லு. உங்க ஹெச்.எம். கிட்டயே சொல்லியிருக்கணும். ஒரு சின்னப்பெண் வாழ்க்கை பாழாகக்கூடாதேன்னு நினைச்சால் வீட்டுல சொல்லாமல் அந்தப் பையனைக்கூட்டிட்டு வந்திருக்க.”

ஓவென்று கதற ஆரம்பித்தாள். “அம்மா சித்தி பிரசவத்துக்கு உதவிக்குப்போயிருக்காங்க, வீட்டுல இல்லை.”

“உங்கம்மா உன்னை நம்பி விட்டுட்டுப்போனா, நீ வெட்கமில்லாம ஊரைச்சுத்தியிருக்க. உன்னை எதுக்கு வரச்சொல்லியிருக்கேன்னு தெரியுமா?”

குயிலி நடுங்கினாள். “எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. எங்கம்மாவுக்குத்தெரிஞ்சால் என்னைக்கொன்னுடுவாங்க,” அவள் கதறல் வர்ஷாவை உலுக்கியது.

“இப்ப இவ்வளவு வருத்தப்படறியே, அந்தப் பையன் கூடச் சேர்ந்து தப்பு பண்ணும்போது இதெல்லாம் நினைவுக்கே வராதா?”

“நாங்க எதுவும் தப்பு பண்ணலை, சுதிரும் நானும் லவ் பண்றோம், ஆனால் அவன் என்னைத்தொட்டது கூட இல்லை.”

வர்ஷாவுக்கு எரிச்சல் வந்தது. தொட்டதில்லையாம், ஆனால் கர்ப்பமாக இருக்காளாம். இந்தப்பெண்ணுக்குப் பாவம் பார்த்தது என் தப்பு. ஸ்கூல்ல சொல்லிட்டு எப்படியோ போன்னு விட்டிருக்கணும்.

“அவன் தொடாமலே உன் வயத்துல புள்ளை எப்படி வந்தது?”

அவள் அழுகை இன்னும் அதிகமானது.

“அதைச்சொன்னா எங்க சித்தி செத்துப்போயிடுவாங்க. அவங்க என் மேல உயிரையே வைச்சிருக்காங்க, எனக்கும் அம்மாவை விட அவங்களை அதிகம் பிடிக்கும்,” அவள் குரலில் நடுக்கம்! உடலும் நடுங்கியது.

“என்ன நடந்ததுன்னு உண்மையச்சொல்லு, அப்பதான் என்னால உனக்கு உதவ முடியும், நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்,” குரலில் கடுப்பேறியது.

குயிலி நிமிர்ந்து பார்த்தாள். “சத்தியமாச்சொல்லமாட்டீங்களா?”

அவள் கண்களின்பரிதவிப்பைப் பார்த்து இரக்கம் சுரந்தது. ‘இவள் விஷயம் தெரிந்தால் சித்தி செத்துப்போய் விடுவாளா? என்ன உளறல் இது’ எனத்தோன்றினாலும் “சொல்ல மாட்டேன், இப்ப சொல்லு.”

“எங்க சித்தி மாசமா இருக்கறதால அதுக்கு உடம்புக்கு முடடியலைன்னு அம்மா உதவிக்குப்போயிருந்தாங்க. பரீட்சைக்குப்படிக்கணும்கறதால நான் அம்மாகூடப்போகலை. எங்க பக்கத்து வீட்டு ஆயா ராவுல வந்து துணைக்குப்படுத்துக்கும். அன்னைக்கு மதியம் சித்தப்பா எங்க வீட்டுக்கு வந்தார். சித்தி வீட்டுக்குப்போனால் இரண்டு பேரும் என்னை மகள் மாதிரி நல்லாப்பாத்துப்பாங்க; சித்தப்பா எனக்கு எல்லாம் வாங்கிக் குடுக்கும். அதுனால அவரைப் பார்த்து சந்தோஷமா “அம்மா உங்க வீட்டுக்குப்போயிருக்காங்க, நீங்க இங்க வந்திருக்கீங்க! சித்தி நல்லா இருக்காங்களா?”ன்னு கேட்டேன்.

“உங்க சித்தி நல்லா இருக்கா! சித்தியைப்பாக்க வரவங்கல்லாம் தின்பண்டம் வாங்கிட்டு வந்துட்டே இருக்காங்க, அதுனால உனக்கும் கொஞ்சம் எடுத்துட்டு வந்தேன்! உனக்கு டிரஸ் கூட வாங்கிட்டு வந்திருக்கேன்னு குடுத்தார்.”

வர்ஷா இடைமறித்தாள். “இந்தக்கதையெல்லாம் வேண்டாம், உன் கதையைக் கேட்டால் சித்தி, சித்தப்பா கதையச்சொல்லிக்கிட்டிருக்கயே” வர்ஷாவுக்கு இன்னும் முடிக்க வேண்டிய வேலை தலைக்கு மேலிருந்தது.

“அப்பா பாசம் தெரியாத நான் சித்தப்பாவைத் தான் அப்பாவா நினைச்சிருந்தேன்! அவர் தொட்டுப் பேசும்போது எனக்குத்தப்பாவே தோன்றியதில்லை. அவர் வாங்கிட்டு வந்த ஐஸ்கிரீமை ரசித்துச் சாப்பிட்டேன்! அப்புறம் தான் அவர் தப்புத்தப்பாய்த் தொட ஆரம்பித்தார். “சித்தப்பா, என்ன பண்றீங்க?” என்று அதிர்ந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக மயங்க ஆரம்பித்தேன்.”

“சித்தப்பா வெறியோடு என்னை என்னென்னவோ செய்ய ஆரம்பித்தார். என்னால போராட முடியலை. துவண்டு போனேன். அப்புறம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை. மயங்கிட்டேன்! கண் முழிச்சுப்பார்க்கும்போது சித்தப்பா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். “சாப்பிடு!” என்று பிரியாணிப் பொட்டலத்தை என் கையில் குடுத்தார். நான் ஆத்திரத்தில் விசிறியடித்தேன்.”

“உங்களை என் அப்பாவா நினைச்சேனே,” என்று கதறினேன். அவர் வில்லத்தனமாய்ச் சிரித்தார். “நீ அப்படி நினைச்சா நானா பொறுப்பு? நான் உன்னை என் பெண்ணா நினைக்கலையே!”

“தூ, உங்களைப் பத்தி இப்பவே சித்தி கிட்டச்சொல்லப்போறேன்!” மொபைலை எடுத்தேன்.

“நீ அந்தப் பையன லவ் பண்றேன்னு எனக்குத் தெரியும். நான் அவளைக்கண்டிச்சேன், அவ என்னையே திருப்பறான்னு சொல்லிடுவேன்”னு மிரட்டினார்.

மேலும் தொடர்ந்தார் “இதைப்பத்தியார்கிட்டயாவது சொன்னா உங்க சித்தி உயிரோட இருக்க மாட்டா. உனக்கு ஐஸ்கிரீம்ல கலந்தது போல உங்க சித்தி சாப்பாட்டுல எதையாவது கலந்து குடுத்துடுவேன்!”

“சித்தி வெகுளி. என்னை வளர்த்ததெல்லாம் அவங்க தான். அவங்களை இந்த மிருகம் கொன்னுடுமோன்னு பயம் வந்தது. சுதிர் கிட்ட இதுபத்திச் சொன்னால் அவன் அவரைக்கொல்லக்கூடத்தயங்க மாட்டான். அவன் கிட்ட எனக்கு மாதவிடாய்ப் பிரச்சனை, அதுனால வரச்சொல்லி இருக்கீங்கன்னு சொல்லியிருக்கேன்!”

“எங்கம்மா கண்டிப்பானவங்க. ஆம்பிளை இல்லாத வீடு, உஷாரா இருக்கணும்னு சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தாங்க. அதுனால நான் சுதிரைத் தொடக்கூட அனுமதிச்சதில்லை. சித்தப்பா கிட்ட தான் ஏமாந்துட்டேன்!” முகத்தில் அறைந்துகொண்டு அழுதாள்.

வர்ஷாவுக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதாநாயகி நினைவுக்கு வந்தாள்.

இந்தப்பெண்ணின் கர்ப்பத்துக்குக் காரணம் சித்தப்பா தான் என்று மருத்துவ ரீதியாக நிரூபித்து விடலாம். ஆனால் இந்தப் பெண்ணின் வாழ்க்கை நாசமாகி விடும். இன்னும் அதிக நாள் ஆகாததால் மாத்திரை சாப்பிட்டால் போதும்.

“படிக்கும் வயதில் வருவதெல்லாம் காதல் இல்லை. அதுக்குப் பேர் இனக்கவர்ச்சி! கொஞ்ச நாள் பார்க்காமலிருந்தால் அது காணாமல் போயிடும். இனிமேல் இரண்டு பேரும் சேர்ந்து சுத்தாதே! ஒழுங்காப்படிக்கற வழியைப் பாரு! இரண்டு வாரம் இந்த மாத்திரையைச் சாப்பிடு. அப்புறம் என்னை வந்து பாரு! உங்க அம்மா நம்பர் குடு. நான் பக்குவமாப் பேசிப் புரிய வைக்கிறேன்!”

குயிலியின் அம்மாவிடம் மெதுவாக எடுத்துச் சொன்னாள். வயதுக்கு வந்த பெண்ணை யாரையும் நம்பித் தனியே விடக்கூடாதென்று பக்குவமாய்ப் பேசினாள். இதற்குமேல் அவர்கள் பாடு என்று விட்டு விட்டாள்.

பத்தே நாட்களில் குயிலி வந்தாள். அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது. “மேடம், எனக்குப்பீரியட்ஸ் வந்துடுச்சி. என் உயிருள்ள வரை உங்களை மறக்க மாட்டேன்!” வர்ஷா காலில் விழுந்தாள். “எங்கசித்திக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு!”

“அப்படியா? ரொம்ப சந்தோஷம். இனிமேல் உன் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கட்டும்!”

நாலைந்து மாதங்கள் கழித்து கிட்டத்தட்ட அவள் முகம் மறந்த நிலையில் மீண்டும் குயிலி வந்தாள். முகமெல்லாம் மலர்ச்சி.

“என்னம்மா, எப்படி இருக்க? நல்லாப்படிக்கறயா?”

“நல்லாப்படிக்கறேன் மேடம்! ஒரு விஷயம், எங்க சித்தப்பா ஹார்ட்அட்டாக்குல இறந்துட்டார்!”

மூன்றாவது முறையாக வர்ஷா அதிர்ந்தாள்.

“என்ன ஆச்சு?”

“தெரியலை! கடைசியா மீன்குழம்பு சாப்பிட்டாராம். மீன் முள் தொண்டையில் சிக்கி இருக்கலாம்னு சொல்றாங்க! கடவுள் தண்டனை குடுத்துட்டாரு மேடம்!”

‘கடவுள் குடுத்த தண்டனை தானோ?’ ஏனோ ‘கொலையும் செய்வாள் பத்தினி!’ நினைவுக்கு வந்தது.

வசந்தா கோவிந்தராஜன்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குனேரியை சேர்ந்த திருமதி வசந்தா கோவிந்தராஜன் சென்னையில் வசிக்கிறார். தமிழ்நாடு அரசின் வேளாண் துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து விருப்பார்ந்த ஓய்வு பெற்றபின் 2020ல் இவரது எழுத்துப் பயணம் துவங்கியது. 2021ல் வானவில் சிறுகதைப்போட்டியில் இவரது “யார் கடவுள்?” என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானது. குமுதத்தில் நான்கு ஒரு பக்கக் கதைகள் வெளி வந்துள்ளன. குவிகம் குறும்பு தினம், இலக்கியபீடம், துகள் அமைப்பு போன்றவை நடத்திய போட்டிகளில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக இவரது கதைகள் தேர்வாகியுள்ளன.
இது தவிர கேலக்ஸி குழுமம், கானல் அமீரகம், உரத்தசிந்தனை, அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதைப்போட்டி, வல்லினச்சிறகுகள், ஆனந்தசந்திரிகை உட்பட இருபதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் இதுவரை இவருக்கு வெற்றிகள் கிடைத்துள்ளது. “யார் கடவுள்”, “வேர்களும், விழுதுகளும்” மற்றும் “வாழ்வெனும் நதி” ஆகிய 3 சிறுகதைத் தொகுப்புகளும் “சினேகாவின் காதல்” மற்றும் “முரண்படும் திருமணங்கள்” ஆகிய இரண்டு நாவல்களும் என மொத்தம் 5 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். லேடிஸ் ஸ்பெஷல், உரத்த சிந்தனை, குமுதம் பக்தி ஸ்பெஷல், தினமலர் அயலக இதழ் போன்றவற்றில் இவருடைய கட்டுரைகள் பிரசுரம் ஆகியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன