சசிகலா விஸ்வநாதன்/இக்கரைக்கு அக்கரைப் பச்சை

“அண்ணி! இந்த பட்டாம்பூச்சி போல் பறக்கணும் போல் இருக்கு. தினம் ஒரே மாதிரி வேலை! சமைத்து வீட்டு வேலைகள் செய்து, வீட்டுப் பொறுப்புகளைப் பார்த்து, நாளைய தினத்துக்கு நாளும் கவலைப் பட்டு, அடுக்கடுக்காக வேலைகள்; அலையலையாக சவால்கள்; அலுப்பாக இருக்கிறது! அலுவலக வேலையை விட்டு விடலாமான்னு யோசிக்கிறேன். ஆணாக பிறந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள்” என்று சௌமியா, பாரதி அண்ணியிடம் புலம்பினாள்.
பாரதி,” சௌமி! ஏன் இப்படி அவலப்படுகிறாய்! இந்த பட்டாம்பூச்சியைப் பார்! இதன் சுதந்திரம் மட்டும்தான் உன் கண்ணுக்குத் தெரிகிறது. சில நாட்களே அதன் வாழ்வு. அதற்கு ஒரு வீடு என்பதே இல்லை. அதற்கு தனக்கு ஒரு உறைவிடம் இல்லையே; என்ற அறிவோ, ஏக்கமோ இல்லை. ஆண்களும் அலுவலக வேலையோடு குடும்ப பொறுப்புகளைச் சமன் செய்து கொள்ளவே, செய்கிறார்கள். உன் கணவன் வாழ்விலும் சவால்கள் உண்டு உனக்கு எல்லா விதத்திலும் எவ்வளவு துணையாக இருக்கிறான்! ஒரு நாளும் உன்னிடம் கடுத்த முகம் காட்டி, கசப்பு வார்த்தைகள் பேசி நான் பார்த்ததேயில்லை. எல்லோருக்கும் சுமைகள் உண்டு. அதைச் சுளுவாக தாங்கப் பயில வேண்டும். இக்கரைக்கு அக்கரைப் பச்சை!” என்று பாரதி நயமாக எடுத்துச் சொல்லவும், சௌமி மனம் தெளிந்தாள்.

130

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன