"ஏண்டி சரண்யா, வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கறே, நான் ஒண்ணும் உன்னைத் தவறா நினைக்க மாட்டேன். மாப்பிள்ளை பார்க்க நல்லா இருக்கார், படிப்பு, வேலை, குடும்பம் எல்லாம் ஓகேன்னு அம்மா, அப்பா சொல்றாங்க. நம்மில் ஒருவருக்கு மணமானால் ஒரு பொறுப்பு நம் பெற்றோருக்குக் குறையும் தானே ." "இங்கே பாரு சங்கீதா, உனக்கும் எனக்கும் அக்கா, தங்கையானாலும் ஒன்றரை வயது வித்தியாசம் மட்டுமே. நாம் சேர்ந்தே இரட்டையர்கள் போல வளர்ந்தவர்கள் என்பதால் உன் மனநிலை எனக்கும் புரியும். நீ இந்த பட்டாம்பூச்சி மாதிரி மென்மையானவள். " "அவர் உன்னை பார்க்க வந்து என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லும் குணம் சரியில்லை. உன்னை நோகடித்த மனிதர் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் எனக்கு வேண்டாம். அவர் நம் வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தா உனக்கு அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனசு கஷ்டப்படும்." " இதே நான் அவரை விட அவர் தம்பியைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா அவர் மனசு எவ்வளவு காயப்படும் . அதனால் எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் " என்ற சரண்யாவின் பதிலில் இருந்த உண்மை சங்கீதாவின் வாயை அடைத்தது.