
அழகிய சிங்கரின் என்பா💥
(அழகாய் வீற்றிருக்கின்றன கொலுபொம்மைகள்)
💥
(1)
ஏழு படிகளிலும் அழகான பொம்மைகள்;
ஏழு ஏழாய் ஆடாமல் அசையாமல்,
ஒழுங்கான வரிசையில் சிறிதும் பெரிதுமாக,
அழகாய் வீற்றிருக்கின்றன கொலுபொம்மைகள்!
💥
(2)
முதல் படியில் நடுவில் கலசம்;
இரண்டாம் படியில் அம்மன் பொம்மைகள்;
இப்படியாகத்தான் வரிசையில் வண்ண பொம்மைகள்;
அழகாய் வீற்றிருக்கும் கொலுபொம்மைகள்!
💥
(3)
கண்ணன் பொம்மையில் குழல் இல்லை
நடராசர் பொம்மைக்கு இல்லாத காலை
மறைத்து அருள்கிறார்; ரங்கநாதரின் ஆதிசேஷன்
அழகாய் வீற்றிருக்கும் கொலு பொம்மைகள்!
💥
(4)
ஏசுவின் அருகே ஈசன் இருக்கிறார்;
மேரியின் பக்கத்தில் மாரியம்மன் அமர;
பிணக்கு ஒன்றும் இல்லை, அவர்களுக்குள்
அழகாய் வீற்றிருக்கும் கொலுபொம்மைகள்!
💥
(5)
மிடுக்குடன் வீற்றிருக்கும் புதிய பொம்மைகள்;
வழிவழியாக வந்த பழைய பொம்மைகள்;
பழைய பொம்மைகளுக்கு
புதிய வண்ணங்கள்;
அழகாய் வீற்றிருக்கும்
கொலு பொம்மைகள்!
