நாகேந்திர பாரதி/இது நல்லா இருக்கா?

மகளையும் மனைவியையும் கொரோனா கொண்டு போனபின், ஜவுளிக்கடையை மூடிவிட்டு வீட்டில் முடங்கிக் கிடந்தவரிடம் பெருமாள் சொன்னார்:

“ஒண்ணு சொல்லுதேன். மனசுக்கு ஆறுதல் கிடைக்கும். சாமிகுத்தம்னு ‘கச்சனூறு’ பொண்ணுகளை டவுனுக்கெல்லாம் வர வேண்டாம்னுட்டு, ஆம்பிளைங்க தானே உங்க கடைக்கு வந்து வாங்கிட்டுப் போனாங்க. உங்க நியாயமான விலையும் துணிகளும் ஊருப் பொண்ணுங்களுக்குப் பிடிச்சுப் போயிடுச்சுன்னு தெரியும்தானே? பூட்டிப் போட்டா எப்படிய்யா?”

மாரிசாமி சொன்னார்:

“கடையைத் திறக்க முடியாது பெருமாள். திறந்தா, ஏதாவதொரு தாவணியைப் போர்த்திக்கிட்டு, ‘இது நல்லா இருக்காப்பா?’ன்னு கேட்ட என் பொண்ணு முகம்தான் தெரியும். ஒண்ணு செய்றேன். மூணு கல்லு தூரம்தானே? வாரம் ஒருதடவை ரெண்டு பையிலே எடுத்துக்கிட்டுப் போயிட்டு வரேன்.”

திண்ணையில் பரப்பிய துணிகளை எடுத்துத் தங்கள் மேல் போர்த்திக்கொண்டு, “இது நல்லா இருக்கா?”ன்னு ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் பொண்ணுங்க எல்லாம் அவரது மகளாகவே தெரிகிறார்கள். தோளிலும் கையிலும் துணிப்பைகளைச் சுமந்துகொண்டு அந்தச் சந்தோஷத்துக்காகவே போய்க்கொண்டிருக்கிறார்.

One Comment on “நாகேந்திர பாரதி/இது நல்லா இருக்கா?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன