கரந்தை இந்து/கடவுள் மாமா

வாசலில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்த வருணுக்கு ஆச்சரியம். “டேய், எத்தனை வருஷமாச்சு பார்த்து!” என்றபடி கல்லூரி நண்பன் ஜெகனைக் கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தான்.

கல்லூரியில் அறையைப் பகிர்ந்துகொண்ட நண்பனை, வேலை, திருமணம் என இருபது வருடங்களுக்குப் பிறகு சந்திப்பதில் இருவருக்கும் சந்தோஷம். பழங்கதைகள் பேசியபடி வீட்டைப் பார்த்த ஜெகன், சுவாமி அறையின் நடுவில் இரண்டு மஞ்சள் பைகளுடன் நிற்கும் வயதான, மெலிந்த பெரியவரின் புகைப்படத்தைக் காட்டி, “இவர் யாருடா?” என்றான்.

“என் கடவுள் அவர்தான் டா. எனக்கு ஐந்து வயதிருக்கும் போது, எங்க அம்மா, அப்பா இருவரும் அதிகக் கடன் வாங்கித் திருப்பிக் கட்ட முடியாமல், அவமானத்திற்குப் பயந்து, நான் தூங்கும்போது தூக்கிட்டுக்கொண்டார்கள்.

“இந்த மாமாவும் மாமியும் எங்க வீட்டின் கீழ்ப் போர்ஷனில் வாடகைக்கு இருந்தார்கள். மாமி பட்சணங்கள் செய்வார். மாமா அவற்றை எடுத்துக்கொண்டு போய் விற்று வருவார். அதில் கிடைக்கும் வருமானத்தில் கஷ்ட ஜீவனம்தான்.

“ஆனாலும், அழுதவாறு அனாதையாக நின்ற என்னைத் தங்கள் மகனாக ஏற்று வளர்த்துப் படிக்க வைத்தார்கள். கடைசி வரை என் சந்தோஷத்தை மட்டுமே நினைத்து வாழ்ந்தவர்கள்டா.

“இப்போ சொல்லு, அவர் கடவுள்தானே?” என்ற வருணிடம் ஜெகன் பேச்சற்றுப் போய் நின்றான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன