விஜி. ஆர். கிருஷ்ணன்/காவேரி ஓரம் கதை சொன்ன காதல்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி விஜி. ஆர். கிருஷ்ணன் எழுதிய “காவேரி ஓரம் கதை சொன்ன காதல் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

“தம்பி, ஐயா உங்களை அவசரமா கூப்பிடுறாரு; கொஞ்சம் சீக்கிரம் வாங்க தம்பி.”

“எதுக்கு இவ்வளவு அவசரம் இப்பதான் ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கு.”

“இல்ல தம்பி, அய்யாவுக்கு உடம்புக்கு கொஞ்சம் சுகமில்ல. டாக்டரய்யா வந்து பார்த்துட்டு போய் இருக்காரு, நீங்க காலையில கூட்டம் இருக்குன்னு சொல்லி வந்துட்டீங்களா, அதனால அவரு உங்களை இப்பவே கையோடு அழைச்சிட்டு வர சொன்னாரு.”

அப்பாவுக்கு பிறகு வணிகர் சங்கத் தலைவரா பொறுப்பேற்று அந்த கூட்டத்தில் பேசிட்டு இருந்த இளங்கோ, உடனே வீட்டுக்கு கிளம்ப கூட்டம் கலைந்தது.

இளங்கோ வீட்டிற்குள் நுழையவும் அம்மாவின் அலறல் சத்தம் கேட்டது. “ஐயோ! தம்பி அப்பா நம்மள எல்லாம் விட்டுட்டு போயிட்டாங்க டா.”

இளங்கோவின் ஒட்டுமொத்த அழுகையும் தொண்டைக் குழியில் அப்படியே நின்றது. விக்கித்து நின்று கொண்டிருந்தான். கடைசியாக பேச நினைத்த அப்பாவுடன், ஒரு சில வார்த்தைகளாவது பேசி இருக்கலாம் என்ற குற்ற உணர்ச்சி அவனை அழக்கூட விடாமல் தடுத்தது.

மூன்று தலைமுறைகளாக ஊர் தலைவராக இருந்த குடும்பம் என்றபடியால் ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர்.

ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் அப்பாவின் வலது கையாக இருந்த மாரி பார்த்துக் கொண்டிருந்தார. காரியங்கள் நிறைவேறியது.

பதினாறாவது நாள் காரியம் முடிந்து மதியம் உணவுக்குப் பிறகு அனைவரும் விடை பெற மாரி இளங்கோவின் கையில் ஒரு பெரிய கவரை கொண்டு வந்து கொடுத்தார்.

“தம்பி, ஐயா ஒரு வாரம் முன்னையே, இந்த கடிதத்தை என் கையில கொடுத்தாரு, அப்புறமா தம்பிகிட்ட கொடுங்க அப்படின்னு சொல்லி இருந்தாரு, அதுக்குள்ள இப்படி ஆயிடும் என்று நான் நினைக்கவே இல்ல தம்பி.”

இளங்கோ கடிதத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்று உள் தாளிட்டுக் கொண்டு கடிதத்தை மெதுவாக பிரித்து படிக்க ஆரம்பித்தான்.

கண்களில் இருந்து தண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் இளங்கோவின் வாழ்க்கை கண் முன் வந்து போனது.

இளங்கோவும், ரோகினியும் சிறு வயது முதலே ஒன்றாக விளையாடி ஒரே பள்ளியில் படித்து வந்தனர். ரோகினியின் அப்பா முத்து, இளங்கோவின் அப்பா ராமநாதன் மில்லில் கணக்கு பிள்ளையாக வேலை பார்த்து வந்தார்.

மண்ணச்சநல்லூரில் இருந்து திருச்சிக்கு இருவரும் கல்லூரிக்கு ஒன்றாகவே சென்று வந்தனர். ரோகிணி பெண்கள் கல்லூரியில் படித்தாலும் இளங்கோ ரோகிணிக்காக வெயிட் செய்து அழைத்து வருவது வழக்கமாக இருந்தது.

ஒரு காலகட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. கல்லூரியில் இருந்து வரும் வழியில் இருவரும் காவிரி கரையில் சந்திப்பது வழக்கமாக இருந்தது. அதை பார்த்த மாரி இளங்கோவின் அப்பாவிடம் சென்று முறையிட இளங்கோவின் அப்பா, கணக்க பிள்ளையை அழைத்து பயங்கரமாக சத்தம் போட ஆரம்பித்தார். இதுபோல் கணக்கப்பிள்ளையிடம் இதுபோல் நடந்து கொண்டதில்லை.

முத்து ரோகிணியின் இந்த செயலால் வருத்தப்பட்டு மனவேதனையுடன் ஏதோ சிந்தனையில் சைக்கிளில் வேகமாக வர துறையூரில் இருந்து வந்த பேருந்தின் முன் அடிபட்டு அதே இடத்தில் இறந்து விட்டார்.

ரோகிணி சிறிது காலம் கல்லூரிக்கு வரவில்லை. இளங்கோவும் ரோகிணியின் அப்பா இறந்தபடியால் தான் அவள் விடுமுறையில் இருக்கிறாள் என்ற எண்ணத்தில் ஒரு மாத காலம் அவளை தேடவில்லை,

அதற்குப் பின்னும் அவளை காணாது ஊரின் எல்லையில் உள்ள அவளுடைய வீட்டிற்கு சென்றான். அங்கு வீடு பூட்டி இருந்தது. அருகில் இருந்தவர்களை விசாரிக்கும் பொழுது, அவர்கள் அம்மாவும் பொண்ணும் இரவோடு இரவாக எங்கோ சென்று விட்டார்கள். எங்கு சென்றார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னார்கள்.

ரோகிணி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கு காரணம் தன்னுடைய அப்பா தான் என்பதை அறிந்த இளங்கோ அன்று முதல் அப்பாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டான்..ரோகிணியை எங்கு தேடியும் அவளை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த காலத்தில் தொலைபேசி வசதியும் இல்லை. முகவரியும் இல்லாமல், இரண்டு வருடம் மிகவும் அழுது புரண்டு தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து அரற்றிக் கொண்டிருந்தான்.

ராமநாதன் மிகவும் கண்டிப்பானவர், இளங்கோவின் அழுகை அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மேற்கொண்டு தன்னுடைய அரிசி மில்கள் அனைத்தையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் வேலையை இளங்கோவிற்கு அளித்தார். அவனும் ரோகிணியை மறக்க விரும்பி இந்த வேலைகளை ஏற்றுக் கொண்டான்.

மூன்று வருடங்கள் கழித்து, ராமநாதன் தன்னுடைய தங்கையின் பெண்ணையே இளங்கோவிற்கு மணமுடித்தார். இளங்கோவிற்கு ஒரு பெண் குழந்தையும், அடுத்து ஒரு பையனும் பிறக்க, தொழிலிலும் குடும்பப் பொறுப்புகளிலும் ஆழ்ந்து விட்டான். ஆனால் அவன் அப்பாவை ஒருபோதும் மன்னிக்கவே இல்லை. ரோகிணியின் தந்தை இறப்பதற்கு இவர் தான் காரணம் என்ற நினைப்பும், ரோகிணி காணாமல் போனதற்கும் இவர்தான் காரணம் என்பதும் தெரிந்ததிலிருந்து தன்னுடைய அப்பா இராமநாதன் உடன் பேசுவதை நிறுத்தி விட்டான்.

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தான்

“அன்பு மகனே, நீ என்னுடன் இத்தனை வருடங்களாக கோபமாக இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும். நம்முடைய பரம்பரையில் மூன்று தலைமுறைகளாக நாம் தான் ஊர் தலைவராக இருந்து வருகிறோம். அதுவும் உனக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்க வேறு ஜாதியில் பிறந்த, நமது மில்லில் வேலை பார்க்கும் ஒரு கணக்குப் பிள்ளையின் மகளை நீ காதலிப்பதால் நம்முடைய கௌரவம் பாதிக்கப்படும் என்பதை அறிந்து ரோகிணியையும் அவர்கள் அம்மாவையும் வேறு ஊருக்கு நான் தான் அனுப்பி வைத்தேன், ஆனால் அவர்கள் இருவருக்கும் மாதாமாதம் நம்முடைய மில்லின் கணக்கிலிருந்து ஒரு தொகை அனுப்பப்பட்டு வந்தது. மாரி அவ்வப்போது சென்று பார்த்தும் வந்தான். ரோகிணி டீச்சர் ட்ரைனிங் முடித்து தற்போது ஒரு பள்ளியின் ஆசிரியராக இருக்கிறாள்.”

“இருவரையும் கோயம்புத்தூர் அனுப்பிவிட்டதோடு அல்லாமல் அவர்களுடைய குடும்ப பொறுப்பையும் நான்தான் பார்த்துக் கொண்டேன். இது எல்லாமே நம்முடைய குடும்பத்தின் நன்மைக்கும், ஊரின் நன்மைக்கும் எடுத்த முடிவு. ஒருவேளை நீ நினைத்த பெண்ணை நான் மணமுடித்து இருந்தால் நான் ஊர் தலைவராக தலை நிமிர்ந்து அனைவரிடமும் நடக்க முடியாது. அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவும் முடியாது. தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று அவர்களும் தான் தோன்றித்தனமாக திரிய ஆரம்பித்து விடலாம் அல்லது என்னை எதிர்த்து கேள்வியும் கேட்கலாம். அதையெல்லாம் உத்தேசித்து தான் நான் அன்று அந்த முடிவை எடுத்தேன்.”

“ஆனால் நீ அன்றிலிருந்து என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டாய். நான் இறப்பதற்கு முன் உன்னிடம் அனைத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரில் சொல்ல மனமில்லாமல் இதை கடிதத்தில் எழுதி மாரியிடம் கொடுத்திருக்கிறேன். எனக்கு ஒரு மாத காலமாக உடல்நிலை சரியில்லை என்பதை நீ அறிவாய். எந்த நேரத்திலும் எனக்கு எதுவும் ஆகலாம் இறப்பதற்கு முன் உனக்கு ரோகிணியின் முகவரியை கொடுத்துவிட்டு போகிறேன். இப்படிக்கு உன் அப்பா.”

மறுநாள் காலையில் மாரியை அழைத்துக் கொண்டு காரில் கோயம்புத்தூர் சென்றான். ரோகிணி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஏற்கனவே மாரி சொல்லி அறிந்திருந்தான், ரோகிணி அம்மாவும் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. திடீரென்று இளங்கோவை பார்த்த அதிர்ச்சியில் ரோகிணி திகைத்து நின்றாள்.

“என்ன மன்னிச்சிடு ரோகிணி; உன்னோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்; உங்க அப்பா இறக்குறதுக்கும் நான்தான் காரணம்.”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல இளங்கோ; விதிப்படி என்ன நடக்கணுமோ அதுதான் நடக்கும்; அதை மாத்தி எழுதறதுக்கு நீயும் நானும் யாரு?”

“சரி நீ; உடனே நம்ம ஊருக்கு கிளம்பு.”

“என்ன இளங்கோ விளையாடுறீங்களா; நான் இங்க ஒரு ஸ்கூல்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் ஒன்றரை வருஷம் எனக்கு சர்வீஸ் இருக்கு.“

“இல்ல நான் ஒரு வேலையா தான் உன்னை கூப்பிடுறேன்; போயிட்டு உடனே வந்துரலாம் வா.”

ரோகிணிக்கும் தான் காவிரி கரையை பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை இருந்தது. அதனால ஒரு வார்த்தையும் சொல்லாம கார்ல ஏறி உட்கார்ந்தா.”

நேரா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டான் இளங்கோ. இளங்கோவோட அம்மா, ”என்னடா இது இப்படி பண்ணிட்டு இருக்க;
இப்ப எதுக்கு இவங்களை இங்க கூட்டிட்டு வந்த?”

“மாரி இவங்களை கூட்டிட்டு போய் நம்ம அவுட் ஹவுஸ்ல விட்டுட்டு வாங்க.”

“அம்மா, பவானி – ரெண்டு பேரும் இங்க வாங்க, நல்லா கேட்டுக்கோங்க. நான் ரோகிணியை கல்யாணம் பண்ணிக்க போறேன்.“

“என்னங்க இது இப்படி குண்ட தூக்கி போடுறீங்க; நம்ம ரெண்டு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு; சம்மந்திங்க மூஞ்சில எப்படி முழிக்கிறது?“

“அப்பா அப்பவே சம்மதிச்சு இருந்தா நான் உன்னை கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன்கிறது உனக்கு நல்லாவே தெரியும் பவானி. அப்பா ஊருக்கு பயந்து சொன்னாரு, நீ இப்போ உன் சம்பந்திகளுக்காக பயப்பட சொல்றே; எல்லாரும் அவங்க அவங்களுக்கு ஒரு காரணம் வச்சிருக்கீங்க. ஆனா என்ன விரும்பின ஒரே காரணத்துக்காக கல்யாணமே பண்ணிக்காம தனி மரமா இருக்க ரோகிணி பத்தி யாராச்சும் கொஞ்சமாச்சும் நெனச்சுபாத்தீங்களா?”

“ஏன்டா இந்த வயசுல இப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா ஊர்ல என்னடா பேசுவாங்க?”

“அம்மா இந்த வயசுல கல்யாணம் பண்ணிட்டு நான் என்ன குடும்பமா நடத்த போறேன்; அவளுக்கு சாகுற காலத்துல ஒரு துணை வேணும் அவளோட அப்பாவும் நம்மளால தான் இறந்தார். அதுபோக இத்தனை வருஷம் சொந்தங்கள விட்டு தனிமரமா யாருக்கும் தெரியாம ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்திருக்கா; அவ என்ன தப்பு செஞ்சுட்டான்னு இவ்வளவு வருஷம் தண்டனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்கா? நீங்களும் ஒரு பொண்ணு தானமா?”

ரோகிணி இருந்த இடத்துக்கு போனான். “ரோகிணி நாளை காலை ரெடியா இரு உனக்கும், எனக்கும் கோவில்ல வச்சு கல்யாணம்.”

“என்ன உளறீங்க இளங்கோ? நீங்க இதுக்காக தான் கூட்டிட்டு வந்தீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேன். இந்த வயசுல போய் கல்யாணம் பண்ணினீங்கன்னா இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லாம் என்ன பேசுவாங்க?“

“போதும் ரோகிணி – இந்த ஊருக்காக மக்களுக்காக, வியாபாரத்துக்காகன்னு ஓடி ஓடி ஒளிஞ்சி உன்னோட வாழ்க்கை தான் கெட்டுப் போச்சு. நானாவது பேருக்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்து இரண்டு குழந்தைகளை பெத்துட்டேன். ஆனா நீ எவ்வளவு சிரமப்பட்டு இத்தனை வருஷம் தனி மரமாக இருந்திருக்க; உனக்கு கடைசி காலத்துல ஒரு துணை வேணும்னு நினைக்கிறேன் அவ்வளவுதான்.“

“நான் எங்க தனியா இருந்தேன். நம்மளோட நினைவுகள் தான் என்னை இத்தனை நாள்ல உயிர்ப்போட வாழ வச்சிருக்கு; நாம சேர்ந்து ஒரே இடத்துல இருந்தா தான் வாழ்க்கையா? நான் எந்த இடத்தில் இருந்தாலும் எந்த ஊர்ல இருந்தாலும் எவ்வளவு தொலைதூரத்தில் இருந்தாலும் நம்முடைய காதல் என் மனசுல இருக்க வரைக்கும் என்னைக்கும் எனக்கு தனிமை இல்லை; நீ குற்ற உணர்ச்சியில இதெல்லாம் பேசிட்டு இருக்க. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. வாழ்க்கையில எது எது எப்ப நடக்கணுமோ அதெல்லாம் மேலே இருக்கிறவன் தான் நம்மள வழி நடத்துறான். அதனால இதுக்கு காரணம் உங்க அப்பாவோ, நீயோ, எங்க அப்பா இறந்ததோ; எதுவுமே இல்லை. அந்த குற்ற உணர்ச்சியெல்லாம் விட்டுட்டு எப்பவும் போல நீ உன் குழந்தைகளோட சந்தோஷமா இரு.”

ரோகிணியோட தெளிவான பேச்ச கேட்டு அவனும் கொஞ்சம் நிம்மதி ஆனான்.

“உனக்கு பாக்கணும்னு தோணும்போது நீ கோயம்புத்தூர் வா; அதே மாதிரி இந்த ஊர் திருவிழாக்கெல்லாம் நானும் வரேன். உனக்கு பொறக்க போற பேர குழந்தைகளை என் கிட்ட கொண்டு வந்து விட்டா நான் அதுங்கள வளர்த்துட்டு போறேன்; அதெல்லாம் விட்டுட்டு கல்யாணம் பண்ற ஆள பாரு,”

ரோகிணி மறுபடி கோயம்புத்தூர் போக, இளங்கோ மனசுல இருந்த காயங்கள் எல்லாம் கொஞ்சம் ஆறி, நிம்மதியா அவனோட வாழ்க்கை பாதையை தொடர்ந்தான்.

விஜி ஆர் கிருஷ்ணன்

திருமதி விஜி ஆர் கிருஷ்ணன் ஒரு கல்வியாளர், எழுத்தாளர், கவிஞர், ஓவியர். அனைத்திற்கும் மேலாக இவர் ஒரு சின்னத்திரை நடிகர். சுமார்
25 ஆண்டுகள் ஶ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார். 2015 ல் எழுத்தாளராக அறிமுகமாகி இதுவரை 250 சிறுகதைகள், சில குறுநாவல்கள் மற்றும் ஏழு நூல்கள் வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன