
‘இன்றைக்கு எப்படியாவது மாமியாரிடம் பேசி அனுமதி வாங்கிட வேண்டியதுதான்’ என்று வினிதா தீர்மானித்துக்கொண்டாள்.
வினிதாவுக்கு நீண்ட காலமாகச் சொந்தமாகப் புது வீடு கட்ட ஆசை. ஆனால் அதற்குக் கணவனின் சம்பளம் மட்டும் போதாது.
“அம்மா, வீட்டு ஓனர் அடுத்த மாசத்திலிருந்து மறுபடியும் வாடகையை ரெண்டாயிரம் கூட்டப்போறாராம்.”
“சொந்த வீடு இல்லாதவங்க, வாடகை எவ்வளவு ஏறினாலும் கொடுத்துத்தானே ஆகணும், வினிதா?”
“அது சரிதான். ஆனா நாம சொந்தமா ஒரு வீடு கட்ட முயற்சி செய்யலாமே?”
“அதுக்கு நிறைய பணம் வேணுமே?”
“கல்யாணத்துக்கு முன்னாடி நான் வேலைக்குப் போய்க்கிட்டுத்தானே இருந்தேன்? மறுபடியும் ஏதாவது வேலைக்கு முயற்சி செஞ்சு பார்க்கிறேன்.”
எப்படியோ தன் எண்ணத்தைச் சொல்லி முடித்துவிட்டாள் வினிதா.
“இதப் பாரு வினிதா, நீ வேலைக்குப் போகக்கூடாதுன்னு நான் சொன்னது, நீ சிரமப்படக்கூடாதுன்னுதான்.”
“குடும்பம் முன்னேறணும்னா கூடுதலா உழைச்சுத்தானே ஆகணும்?”
வினிதா சொல்ல, தனம் யோசித்தார்.
அவரது கையில் அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சிகூட, ‘கூட்டுப்புழு நிலையிலிருந்து இந்த நிலைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்!’ என்று சொல்வதுபோலச் சிறகுகளை அசைத்தது.
