சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/செல்லப் பெயர்களும் நாமும்

ஒரு உடை பிடிக்கவில்லையா? மாற்றிக்கொள்ளலாம். படிக்கும் படிப்பு பிடிக்கவில்லையா? படிப்பை மாற்றிக்கொள்ளலாம். வசிக்கும் வீடு பிடிக்கவில்லையா? வீட்டைக்கூட மாற்றிக்கொள்ளலாம். இந்த உலகத்தில் அப்பா, அம்மாவைத் தவிர, பிடிக்காத பலவற்றையும் மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால், ஒன்று மட்டும் இருக்கிறது… அதை மட்டும் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் மாற்றவே முடியாது!
அது என்ன தெரியுமா?
நம் அப்பா, அம்மா வைத்த பெயர்!
நம் பெயரை நாமே நிர்ணயிக்க முடியாது. அதனால், பெற்றோர் வைத்த பெயரையே வைத்துக்கொள்வதுதான் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை என்று நான் நினைப்பேன். ஆனாலும், பெயர் பிடிக்கவில்லை என்று சிலர் எண்ணியல் கணிதப்படி எழுத்துகளை மாற்றுவார்கள்; சிலர் பெயரையே மாற்றிக்கொள்வார்கள்.
அதிகாரப்பூர்வமான பெயரைக்கூட அரசு ஆவணங்களில் சட்டப்படி மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், இந்தச் செல்லப் பெயர், குட்டிப் பெயர் என்று ஒன்று இருக்கிறதே… அதைத்தான் மாற்றவே முடியாது!
நமக்கு விவரம் புரியாத வயதில், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நமக்குச் செல்லப் பெயர் வைத்துவிடுவார்கள். அந்தப் பெயரை எல்லோரும் சேர்ந்து கூப்பிட ஆரம்பித்துவிட்டால் போதும்… ஜென்மத்துக்கும் அது நம்மை விட்டுப் போகாது!
“இந்தப் பெயரில் என்னைக் கூப்பிடாதீங்க!” என்று நாம் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தாலும், யாரும் காதில் போட்டுக்கொள்வதில்லை.
“அம்மா மட்டும் இந்தப் பெயரில் கூப்பிடட்டும்” என்று நினைத்தால்கூட, எப்படியோ மற்றவர்கள் அதைக் கண்டுபிடித்து, அதே பெயரில் நம்மை அழைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்!
சாதாரணமாக நம் பெயரைச் சுருக்கி வைத்த செல்லப் பெயர் என்றால்கூடப் பரவாயில்லை. ஆனால், எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக அமைந்துவிட்டால்… கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும்!
விசுவின் ஒரு நாடகத்தில், ஒரு மாப்பிள்ளை தன் மனைவியை அழைத்து,
“உமி… கொஞ்சம் காபி கொண்டுவாம்மா!” என்பார்.
உடனே மாமனார்,
“உமியா? என்ன மாப்பிள்ளை, யாரைக் கூப்பிடறீங்க?” என்பார்.
“உங்க பொண்ணு… என் மனைவியைத்தான்! உமாவைச் சுருக்கி ‘உமி’ன்னு கூப்பிடறேன்” என்பார் மாப்பிள்ளை.
உடனே மாமனாரும் விடாமல்,
“மங்கி… அந்தப் பூ, பழத்தை உமிக்கிட்ட கொடு!” என்பார்.
“மங்கியா?” என்று மாப்பிள்ளை அதிர்ச்சியுடன் கேட்க,
“ஆமாம் மாப்பிள்ளை! என் மனைவி பெயர் மங்களம். அதைச் சுருக்கி நான் ‘மங்கி’ன்னு கூப்பிடுவேன்!” என்பார்.
அவ்வளவுதான்… ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியதுதான்!
எங்கள் குடும்பத்திலும் இப்படிப்பட்ட செல்லப் பெயர்களுக்குப் பஞ்சமே இல்லை.
ஒரு உறவுக்காரப் பெண்ணின் செல்லப் பெயர் ‘ஜில்லா’. குழந்தையாக இருந்தபோது நல்ல நிறமாகவும் அழகாகவும் இருந்ததால் அந்தப் பெயர் வந்ததாம்.
புதிதாக அந்தப் பெயரைக் கேட்பவர்கள்,
“என்னது? ஜில்லாவா? மாவட்டமா?” என்று கேட்பார்கள்.
ஆனால், எங்களுக்கு இன்றளவும் அவள் ஜில்லாதான்!
அதேபோல, கிருஷ்ணசாமி, கிருஷ்ணன் போன்ற பெயர்களைச் சுருக்கி ‘கிட்டா’, ‘கிச்சா’ என்று அழைப்பது நமக்குத் தெரியும். ஆனால், ஒருவரை ‘கிச்சா’ என்பதற்குப் பதிலாக, சிறு வயதில் யாரோ ‘கிச்சன்’ என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அது அப்படியே பழகிவிட்டது.
இன்றுவரை அவருடைய செல்லப் பெயர் ‘கிச்சன்’தான்!
சிறு வயதில் அதன் பொருளெல்லாம் புரியாமல் கிண்டல் செய்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம்.
எங்கள் மாமியார் குடும்பத்திலும் இதேபோல் ஒரு சுவாரஸ்யமான பெயர் இருக்கிறது.
நாராயணன் என்ற ஒருவர். அவர் தங்கை சின்னக் குழந்தையாக இருந்தபோது, ‘நாராயணன்’ என்ற பெயர் அவள் வாயில் நுழையவில்லை.
அதனால்… ‘நாயா’ என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறாள்!
அந்தப் பெயரை யாரும் மாற்ற முயற்சிக்கவில்லை. அதனால், இன்றுவரை பேரன், பேத்தி வரை அவர் **‘நாயா தாத்தா’**தான்!
இதைக் கேட்டு நாங்கள் மறைந்து மறைந்து சிரித்த காலமும் உண்டு!
இதேபோல், ஆனந்தராமன் என்ற ஒருவரின் பெயரும் அவருடைய வாயிலேயே சரியாக வராமல், ‘ஆச்சா’ என்று ஏதோ ஒரு சுருக்கப் பெயராக மாறிவிட்டது. இன்று அவருடைய பல உறவினர்களுக்கே அவருடைய உண்மையான பெயர் தெரியாது!
திருநெல்வேலிப் பக்கங்களில் இன்னொரு சுவாரஸ்யமான வழக்கமும் உண்டு.
குடும்பத்தில் பெரியவர்களின் பெயரை அடுத்த தலைமுறையில் வரும் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். ஒரே குடும்பத்தில் நான்கு, ஐந்து சங்கரன்களும், நான்கு, ஐந்து கோமதிகளும் இருப்பார்கள்!
அப்போது பெயருடன் ஏதாவது ஒரு அடைமொழி ஒட்டிக்கொள்ளும்.
பெரிய சங்கரன்… சின்ன சங்கரன்… குட்டி சங்கரன்…
ஒரே வீட்டில் நான்கு ‘அம்பி’கள் இருந்தால் கேட்கவே வேண்டாம்!
‘தம்பி’ என்பதுதான் ‘அம்பி’யாகிவிடும். அதற்குப் பிறகு,
பெரிய அம்பி… சின்ன அம்பி… நடு அம்பி… குட்டி அம்பி…என்று வசதிக்கேற்ப பெயர்கள் உருவாகிவிடும்!
அவர்களுக்கு வயது வந்து, தாத்தா ஸ்தானத்துக்கே வந்தாலும், அந்தச் செல்லப் பெயர் மட்டும் அவர்களை விட்டுப் போகாது!
லட்சுமி என்ற லட்சுமிகரமான பெயரும்கூட வீட்டுக்குள் வந்தவுடன்,
லக்கி… லச்சி… எச்சுமி… ஏன், ‘அச்சி’ என்று கூட மாறிவிடும்!
(‘ஆச்சி’ இல்லை… ‘அச்சி’!)
அதேபோல், கிச்சு, பச்சு என்று ஜோடிப் பெயர்களும் உண்டு. அதாவது, கிருஷ்ணன்–பத்மநாபன், அலமேலு–சுமதி போன்ற பெயர்கள் ‘அம்மி’, ‘சும்மி’ என்று மாறிவிடும். பெயர்கள் அவர்களுக்கென்று ஒரு புதிய அடையாளத்தையே உருவாக்கிவிடும்.
இவை எல்லாம் நான் சிறு வயதில் பார்த்த பெயர்கள். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், இன்றளவும் அந்தப் பெயர்கள்தான் அவர்களோடு இருக்கின்றன!
இதில் என் நண்பர்களும் உண்டு.
சிறு வயதில் இந்தச் செல்லப் பெயர்களைப் பற்றி அவர்கள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆனால், பதின்ம வயதுக்கு வந்ததும், நண்பர்களும் உறவினர்களும் தொடர்ந்து அதே பெயரில் அழைப்பது அவர்களுக்குப் பிடிக்காமல் போவதைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்ததும், குறிப்பாக வயதான பிறகு, அந்த எண்ணமும் மாறிவிடுகிறது.
ஒருகாலத்தில் பிடிக்காத அந்தப் பெயரே, பின்னாளில் ஓர் இனிய நினைவாக மாறிவிடுகிறது.
வட இந்தியப் பக்கங்களில் பார்த்தால், செல்லப் பெயர்களுக்கே ஒரு தனி உலகம்!
சிண்ட்டு, மிண்ட்டு, பிண்ட்டு, பப்லி, ஜிட்டு, மிட்டூ, ஜின்னு, மின்னு…என்று பெயர்கள் நீண்டுகொண்டே போகும்!
இன்றைய காலத்தில், சில குழந்தைகளுக்குச் செல்லப் பெயர் என்று தனியாக எதுவுமே தேவையில்லை. அவர்கள் வைத்திருக்கும் உண்மையான பெயரையே அவர்களால் சரியாக உச்சரிக்க முடியாத அளவுக்கு நீளமாக வைத்துவிடுகிறார்கள்!
இப்போது இன்னொரு புதிய போக்கும் வந்துவிட்டது.
‘A’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு!
அனன்யா, ஆன்யா, ஆரா, ஆத்மீயா, ஆத்யா, ஆரவ், ஆஹான், அக்‌ஷன்… என்று ‘A’ வரிசை நீண்டுகொண்டே செல்கிறது.
“ஏன் இந்த ‘A’ மோகம்?” என்று வியந்தபோது, சிலர் சொன்ன காரணம் சுவாரஸ்யமாக இருந்தது.
தங்கள் குழந்தை வாழ்க்கையில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு காரணமாம். அதைவிட, பள்ளியில் வருகைப் பதிவு எடுக்கும்போது பெயர் முதலில் வந்துவிடும் என்ற ஒரு சிறிய சந்தோஷமும் காரணமாம்!
ஒரே ‘A’ போதாதோ என்னவோ… இப்போது இரண்டு ‘A’களும் வந்துவிட்டன!
Arya → Aarya!
இப்படியே போனால், எதிர்காலத்தில் குழந்தைகளின் பெயர்கள் வெறும் AAA என்று கூட மாறிவிடலாம்!
இன்னும் கொஞ்சம் காலம் போனால், நம் வீட்டு முகவரியே குறியீட்டு முறையில் மாறப்போகிறது என்ற தகவலும் வருகிறது.
எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளில் படித்த பல விஷயங்கள் நிஜமாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம் அல்லவா?
அதுபோல, ஒருநாள் நம் பெயர்களும் குறியீடுகளாக மாறிவிட்டால் என்ன செய்வது?
அப்போது இந்தச் செல்லப் பெயர்களையெல்லாம் மறந்துவிட்டு,
“3435… கொஞ்சம் இங்கே வா!”
“7408… சாப்பிட வா!”
“5968… எங்கே போறே?”
என்று ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக்கொண்டிருப்போமோ என்னவோ!
பார்க்கப்போனால், செல்லப் பெயர்களுக்குப் பின்னால் எத்தனை கதைகள்!
சில பெயர்கள் கிண்டலைத் தரும். சில பெயர்கள் சங்கடத்தைத் தரும். சில பெயர்கள் சிரிப்பை வரவழைக்கும்.
ஆனால், காலம் கடந்து போகும்போது, அந்தப் பெயர்களுக்குள் ஒளிந்திருப்பது ஒரு விஷயம் மட்டும்தான்…
அன்பு!
அதனால்தான், பிடிக்காத பெயராக இருந்தாலும், எவ்வளவு வயதானாலும், எத்தனை தலைமுறைகள் கடந்தாலும்…
சில செல்லப் பெயர்கள் சிரிப்பு மூட்டினாலும், நம்மை விடாமல் பிடித்துக்கொண்டு வாழ்கின்றன!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன