
எங்கள் வீட்டில்
மனைவியின் உழைப்பால்
கொலுபொம்மைகள்
படிகளில் அமர்த்தப் பட்டிருக்கின்றன
பார்க்க பார்க்க
கண்களுக்குக் குளிர்ச்சி
அழகாய் வீற்றிருக்கும் கொலுபொம்மைகள்
ஆரம்பித்த நாளில்
மனைவி கேட்டாள்
சங்கராச்சாரியர் பொம்மை இல்லை என்று
அரியாகவுடர் சாலையில்
கடையில் வாங்கினேன்
அழகாய் வீற்றிருக்கும்
கொலுபொம்மைகள்
நான் பொம்மைகளைப்
பார்ப்பதில்லை தினமும்.
ஆனால் பொம்மைகள் என்னைப் பார்க்கின்றன.
நான் என்ன
செய்து கொண்டிருக்கிறேன்
அழகாய் வீற்றிருக்கும் கொலுபொம்மைகள்
ஒவ்வொரு இடமாய்
ஏறி இறங்குகிறாள்
வாருங்கள் வாருங்கள்
என்று கூப்பிடுகிறாள்
யாரும் உடனே உடனே
வருவதில்லை
அழகாய் வீற்றிருக்கும்
கொலுபொம்மைகள்
தினமும் சுண்டல்
கிடைக்கிறது எனக்கு
சின்ன வயதில்
ஒவ்வொரு வீடாய்
ஏறி இறங்குவேன்
தெருவிலுள்ள வீடுகளில்
அழகாய் வீற்றிருக்கும்
கொலுபொம்மைகள்
