
ஆக்டிவாவைக் கிளப்பும்போது, எதிர் பிளாக்கைச் சேர்ந்த ஆறு வயதான சௌம்யா, பக்கவாட்டில் சக்கரங்கள் இணைத்த சைக்கிளை ஓட்டிக்கொண்டு எதிரே வந்தாள். தான் ஆறாம் வகுப்பில்தான் சைக்கிளில் குரங்குப் பெடல் போடவே ஆரம்பித்த ஞாபகம் வந்தது. கூடவே, சைக்கிள் வாங்குவதற்காகக் காத்திருந்த ஒரு வருட ஏக்கங்களும் கனவுகளும் கண்களில் இப்போதும் ஈரக்கசிவை உருவாக்கின.
அப்பா ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடையில் விற்பனையாளர். சொற்ப சம்பளம். அந்தச் சம்பளத்தில் ரேஷன் அரிசியையும் கோதுமையையும் வாங்கிச் சாப்பிட்ட காலம் அது. “தோழிகள் எல்லாம் சைக்கிளில் பள்ளிக்கூடம் போறாங்க, எனக்கும் வாங்கித் தாங்க” என்று ஆண்டாள் அடம் பிடித்தபோது, “அப்பாவிடம் காசு இல்லையம்மா, தீபாவளி போனஸ் வரும்போது வாங்கிடலாம்” என்று அப்பா கன்னத்தில் முத்தமிட்டுச் சமாளித்தார். ஆனால், தீபாவளி நேரத்தில் தம்பிக்குப் பயங்கரக் காய்ச்சல். காசெல்லாம் செலவாகிவிட்டது. தொடர்ந்த ஏக்கங்கள் அவளை மெலியச் செய்தன. பெற்றோருக்கோ கவலை.
பழைய சைக்கிள் ஒன்று விலைக்கு வந்தபோது, அதை வாங்கிவந்து மகளுக்குக் குரங்குப் பெடல் போடக் கற்றுக்கொடுத்தார் அப்பா. ஹேண்டில்பாரில் அப்பாவின் விரல்களைத் தற்செயலாகப் பார்த்தபோது, அவரது கல்யாண மோதிரத்தைக் காணவில்லை.
இவளது முதல் சம்பளத்தில் அப்பாவுக்கு மோதிரம்தான் பரிசளித்தாள். அன்று அவர் முகத்தைப் பார்க்கணுமே; ஏதோ அமிர்தம் உண்டதுபோல. கண்களுமே வைரங்களாய் மின்னின.
134 words
