
எங்கள் வீட்டில் பணிபுரிபவர் பிரேமா. அவருடைய ஐந்தாவது மகள்தான் வள்ளி. துறுதுறுவென்று இருப்பாள். அம்மாவுக்கு உதவியாக அவளும் வருவாள்.
முக்கியமாக, ‘மேட் இன் இங்கிலாந்து’ சைக்கிளை ஓட்டுவதற்காக. சமீபத்தில் வள்ளி சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறாள்.
ஏதாவது வாங்கிக்கொண்டு வர வேண்டுமானாலும் சைக்கிளில் போய் வாங்கிக்கொண்டு வந்துவிடுவாள். சைக்கிள் ஓட்ட எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள்.
அவள் அப்படிப் பொருள்களை வாங்கிக்கொண்டு வருவது எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. என் அப்பா பயன்படுத்தியதுதான் ‘மேட் இன் இங்கிலாந்து’ சைக்கிள். அப்பாவுக்கு 90 வயது. நானும் அந்தச் சைக்கிளைப் பயன்படுத்துகிறேன். இப்போது சைக்கிளை அடிக்கடி எடுத்துக்கொண்டு போகிறாள் வள்ளி.
ஒருமுறை என் மனைவி காய்கறிகளை வாங்குவதற்காக வள்ளியைக் குமார் கடைக்கு அனுப்பினாள். அங்கே ஒரே கூட்டம். சைக்கிளை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, காய்கறிகளை வாங்கிக்கொண்டு திரும்பி வருவதற்குள் யாரோ சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
வள்ளி பதறிவிட்டாள். ஒரே அழுகை. தேடித் தேடிப் பார்த்தாள். காய்கறிகளுடன் அன்று என் வீட்டுக்கே திரும்பி வரவில்லை.
107
