விஜி.சம்பத்/பேரன்பின் சுகந்தம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி விஜி.சம்பத் எழுதிய “பேரன்பின் சுகந்தம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

ஆஃபீஸ் போகத் தயாராகி, மாடியறையிலிருந்து இறங்கி வந்த கல்பனா, டைனிங்கில் தன் கொழுந்தன் ப்ரகாஷும், மாமியார் கனகமும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு, உள்ளே போகலாமா? வேண்டாமா? என்று தயங்கி நின்றாள்.

அவள் தயக்கத்திற்குக் காரணம், முதல் நாள் இரவு முழுக்க அவள் தூங்காமல் அழுததில் முகமெல்லாம் வீங்கி, கண்கள் சிவந்து போயிருந்தது தான்.

இந்தக் கோலத்தில் தன்னைப் பார்த்தால் மாமியாரும், கொழுந்தனும் ஓராயிரம் கேள்வி கேட்டுத் துளைத்து விடுவார்களே. அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? உண்மையைச் சொன்னால் கொழுந்தன் மனசு நோகுமே? உறவு முறைக்குத்தான் பிரகாஷ் கொழுந்தன். மற்றபடி அவனைத் தன் தம்பியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

கல்பனா புது மணப்பெண்ணாகப் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்தபோது ப்ரகாஷ் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். ‘அண்ணி’ என்று ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு வீடு முழுக்கச் சுற்றி காண்பித்தவன், இன்று வரை அவள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்பான். அண்ணி சொல்லும் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாதவன். குணத்தில் தங்கம்.

மாமியார் கனகம் மட்டுமென்ன? பெயரைப் போலவே குணத்திலும் சொக்கத் தங்கம்தான்.

அழகு, படிப்பு, திறமை எதிலும் குறையில்லை என்ற போதும் கல்பனாவுக்கு வரன் அமைந்தபாடில்லை. காரணம்…! கல்பனாவுக்கு நடந்த ஒரு அறுவை சிகிச்சைதான்.

கல்பனா ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர்ந்த சமயம், திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு, லிவர் சிரோஸிஸ் முற்றிய நிலையில் உடனடியாக லிவர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் செய்தாக வேண்டிய கட்டாயம். டோனர் யாரும் கிடைக்காமல் போக, கல்பனா தன் அப்பாவின் உயிரைக் காக்க முன் வந்தாள். மகள் தான் டோனர் என்பது ஆபரேஷன் முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் வரை அவளுடைய அப்பாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

விஷயம் தெரிந்ததும்,

“என்னுடைய வரை முறையில்லாத மதுப் பழக்கம், உணவுப் பழக்கத்தால தானே உனக்கு இந்தக் கஷ்டம். விஷயம் தெரிஞ்சா உன்னை யாரு கட்டிக்குவாங்க?”

குற்றவுணர்ச்சி மேலிட அழுதவரை,

“அப்பா, என்னோட கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? மொதல்ல நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோங்க. அறிவியல் உண்மை என்னன்னா.. கல்லீரலோட ஒரு பகுதிய தாராளமா யார் வேணும்னாலும் தானம் செய்யலாம். கல்லீரல் மற்ற உறுப்புகளைப் போலில்லாமல் தன்னை மீளுருவாக்கம் செய்யும் திறனைக் கொண்டிருக்கு. கல்லீரலோட ஒரு பகுதியை தானம் செய்தால், சில வாரங்களில் அதன் அசல் அளவுக்கு மீண்டும் வளந்துடும். இதுல உங்களுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் வேண்டாம்.”

கல்பனா எடுத்துரைக்கக் கொஞ்சம் சமாதானமானாலும் அவர் மனதின் குறுகுறுப்பு அடங்கியபாடில்லை.

வருடங்கள் ஓடின. கல்பனாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். பெண் பார்க்க வந்தவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கல்பனா தனக்கு கல்லீரல் தானம் செய்த விஷயத்தை ஒளிவுமறைவின்றி சொல்லி விடுவார்.

வந்தவர்கள் பதிலே பேசாமல் கிளம்பி விடுவார்கள், நன்றாகப் படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளாமல்.

“இப்ப எதுவும் பிரச்சினை இல்லாம இருக்கலாம். ஆனா எதிர்காலத்துல ஏதாவது பிரச்சினை வந்துட்டா என்ன பண்றது?”

முகத்துக்கு நேராக சொல்லி விடுவார்கள்.

இதனால் கல்யாணம் தள்ளிக் கொண்டே போக, பெற்றவர்கள் மனம் நொந்து போனதுதான் மிச்சம்..

“கடைசி வரைக்கும் உங்க மகளாவே இருக்கணும்கிற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கு.. நீங்க எதுக்கு கவலைப்பட்டு உங்க ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கறீங்க!”

கல்பனா பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவாள். அவர்களோ இறைவனிடம் முறையிட்டுக் கெஞ்சுவார்கள்.

பெற்றவர்களின் பிரார்த்தனையோ, இல்லை கல்பனாவின் அதிரஷ்டமோ கல்பனாவைப் பெண் பார்க்க மகன் சுரேஷுடன் வந்தாள் கனகம்.

கணவர் ஆர்மியில் பணி புரிந்து அமரராகி விட்ட நிலையில், ஒற்றை மனுஷியாக மகன்கள் இருவரையும் கட்டுக்கோப்புடன் வளர்த்து வந்தாள் கனகம். சுரேஷ் பட்டப் படிப்பு முடித்து வங்கிப் பணியில் அமர்ந்து குடும்ப பாரத்தை ஏற்றுக் கொண்டான். அன்பானவன். அமைதியானவன்.

அவனுக்கேற்ற மனைவியாகத் தேடிக் கொண்டிருந்த கனகத்திற்கு கல்பனாவைப் பார்த்ததுமே பிடித்துப் போனது கல்பனாவைப் பற்றிய விவரங்கள் தெரிந்ததும் இன்னமும் பிடித்துப் போயிற்று.

அடுத்த முகூர்த்தத்திலேயே தன்னுடைய மருமகளாக்கி அழைத்து வந்து, மகளாக அரவணைத்துக் கொண்டாள். கல்பனாவுக்கும் புகுந்த வீடு இன்னொரு தாய் வீடானது.

திருமணமான இரண்டு வருடங்கள் வரை கல்பனா தாய்மை அடையாதது பற்றி கல்பனாவின் பெற்றோரோ, கனகமோ கவலைப் படவில்லை. ஆனால் வருடங்கள் இரண்டு தாண்டியும் கல்பனாவுக்கு குழந்தைப் பேறு தள்ளிப் போக, அக்கம் பக்கத்திலும் உறவு வட்டத்திலும் சாடைப் பேச்சுகள் அதிகமானது. கவலைப்பட்டுக் கண்ணீர் விட்ட சம்பந்திகளுக்கு ஆறுதல் சொன்னவளே கனகம்தான்.

கல்பனாவை மெடிகல் செக்கப் செய்து கொள்ள அழைத்துப் போக வந்த சம்பந்தி வீட்டினரைத் தடுத்தவள், “மொதல்ல எம்பையன் கிட்ட ஏதாவது குறையிருக்கான்னு தெரிஞ்சுக்குவோம்.”

மகனை செக்கப்புக்கு அனுப்பினாள். மகனிடம் ஏதும் குறையில்லை என்றானதும் கல்பனாவை செக்கப்புக்கு அனுப்ப மறுத்தாள்.

“எம்மருமக கிட்டவும் ஏதும் குறையிருக்காதுன்னு நான் முழுசா நம்பறேன். ஆண்டவனாப் பாத்து அவளுக்குக் குழந்தை பாக்கியத்தைத் தர்றப்ப தரட்டும்.”

கனகம் கண்டிப்பாக சொல்லி விட்டாள்.

மகளுக்காக கோயில் கோயிலாகப் பிரார்த்தனை செய்வதற்காக ஆன்மிக யாத்திரை கிளம்பிய கல்பனாவின் பெற்றோர், ரயில் விபத்தில்
இறந்து போக, மருமகள் மீது கனகத்தின் பிடிப்பு இன்னமும் இறுகியது.

மருமகள் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவோ, அவளை யாரும் குறை சொல்லவோ அனுமதிக்காமல் பூப்போலப் பார்த்துக் கொண்டாள். கல்பனாவும் மாமியார் மனம் கோணாமல் நடந்து கொள்வாள்.

அப்படியிருக்கையில், இப்படியொரு கோலத்தில் தன்னைப் பார்த்தால் மனமுடைந்து போவார்களே என்ன செய்யலாம்?

சுவற்றில் சாய்ந்து நின்றபடி யோசித்தாள்.

“சத்தமில்லாமல் ஆஃபீசுக்குக் கிளம்பி விடலாம், அதுதான் சரி”

வாசலை நோக்கி ஓரடி எடுத்து வைப்பதற்குள் மாமியார் கனகத்தின் குரல் சத்தமாகக் கேட்க, சட்டென்று ஹால் ஓரமாக நின்றபடி கவனித்தாள்.

“டேய் ப்ரகாஷ்..! நேத்து சாயந்திரம் மதுமிதாவப் பொண்ணு பாத்துட்டு வந்ததில் இருந்து உன்னோட முடிவைச் சொல்லுவேன்னு எதிர்பாத்துகிட்டிருக்கேன். நீயென்னவோ மௌன சாமியாராட்டம் வாயை இறுக்க மூடிகிட்டிருக்கே! இன்னைக்குப் பொண்ணு வீட்டுக்காரங்களுக்குத் தகவல் சொல்லணுமே! இப்பவாச்சும் வாயைத் திறந்து பேசேண்டா! மதுமிதாவைப் பிடிச்சிருக்குதானே?”

“இந்த சம்பந்தம் வேண்டாம்மா,” என்றான் ப்ரகாஷ் உணர்ச்சியற்ற குரலில்.
“ஏன் வேண்டாம்? ஃபோட்டோவப் பாத்து பிடிச்சதாலதானே நேர்ல போனோம். ஒரே ஒரு பொண்ணைத்தான் பாப்பேன். பாக்கற முதல் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்குவேன். நகை, சீர்,அழகுன்னு எதுவும் தேவையில்லை. நம்ம வீட்டுக்கேத்த பொண்ணா, அண்ணி மாதிரி அன்பான பொண்ணா பாருங்கன்னு கண்டிஷன் போட்டே! நாங்களும் அலசி, ஆராய்ஞ்சு மதுமிதாவைத் தேர்ந்தெடுத்தோம்.”

“நேத்து ராத்திரியே அவங்க நம்ம சம்மந்தம் புடிச்சிருக்குன்னு ஃபோன் பண்ணிட்டாங்க. நீ சரின்னு சொன்னா அடுத்த வேலைய ஆரம்பிக்கலாம்.”

“இல்லம்மா. வேண்டாம். பொண்ணு வீட்டுக்காரங்க குணம் எனக்குப் பிடிக்கலை. “

“என்னடா! அங்கிருந்த ஒரு மணி நேரத்துல பெரிசா அவங்க குணத்தைக் கண்டுட்டே – சொல்லேன் கேப்போம்.”

“நானும் மதுமிதாவும் தனியா ஒரு ரூம்ல போய் பேசிட்டிருந்தோம்ல! அப்ப எனக்கு ஆஃபீஸ்லருந்து கால் வரவும் வராண்டால போய்ப் பேசிட்ட்டிருந்தேன். அப்ப சமையல் ரூம்ல அண்ணியும், பொண்ணோட அம்மாவும் பேசிகிட்டிருந்தாங்க.

மதுமிதாவோட அம்மா, அண்ணிகிட்ட, “கல்யாணமாகிப் பத்து வருஷமா உனக்குக் குழந்தையே உண்டாகலையாமே! டாக்டருங்க கிட்ட போனீங்களா? யாருகிட்ட கொறைன்னு தெரிஞ்சுதா? நீ உங்கப்பாவுக்கு கல்லீரல் தானம் செஞ்சதா உங்க மாமியார் ரொம்பப் பெருமையா சொல்லிக்கிறாங்களே. ஒருவேளை அதனால கூட உனக்குக் குழந்தை உண்டாகலையோ என்னவோ? இனிமே குழந்தை உண்டானாலும் நார்மலா பொறக்கறது கஷ்டம்தான்! என்னவோ போ எல்லாம் உந்தலையழுத்து. “

“இப்பவே ஏதாவது குழந்தையத் தத்து எடுத்துக்கோங்க. இன்னும் வயசாயிடுச்சுன்னா வளக்கறது கஷ்டம். கடைசி காலத்துக்கு உங்களுக்கு உறவுன்னு சொல்லிக்க அந்தக் கொழந்தையாவது இருக்குமில்ல.”

“கொஞ்சங்கூட நாகரிகமோ, இங்கிதமோ இல்லாம பேசிட்டே போனாங்க. வீட்டுக்கு வந்ததுமே, நான் அண்ணிகிட்ட பேசி சமாதானப் படுத்தலாம்னு போனேன். ‘எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு ப்ரகாஷ். காலைல பேசலாமே’ ன்னு சொல்லிட்டாங்க. “

“அண்ணிக்கு முகமே சரியில்ல. கண்ணு கலங்கியிருந்துச்சு. ராத்திரி பூரா அண்ணன் ஏதோ சமாதானப்படுத்திகிட்டே இருந்தார். அவங்க ரெண்டு பேரும் தூங்கவே இல்ல. நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன். “

“மதுமிதாவக் கல்யாணம் பண்ணிகிட்டு வந்தப்புறம், அந்தம்மா இங்கே வரப் போக இருக்கும். இன்னும் உரிமையா குழந்தை இல்லங்கறதப் பத்தி அண்ணிய ஏதாவது பேசி, அவங்களைக் கண்கலங்க வெச்சா எனக்குத் தாங்காது. அந்தம்மா கிட்ட பாசிடிவான அணுகுமுறையே இல்லை. நம்ம வீட்டுல நமக்கு யாரையும் மனசு நோகற மாதிரி பேசிப் பழக்கமில்லை. ஆனா இவங்க இப்பதான் மொத மொதலா அண்ணியப் பாக்குறாங்க. அதுக்குள்ள எத்தனை நெகடிவா பேசறாங்க. மதுமிதாவும் அவங்கம்மா மாதிரியே இருந்துட்டா என்னம்மா பண்றது?”

“எனக்கு நாளைக்கு அமையப்போற வாழ்க்கைய விட, இப்ப தம்பதிகளா வாழ்ந்துகிட்டிருக்கற என் அண்ணன், அண்ணியோட சந்தோஷம்தான் ரொம்ப முக்கியம். அண்ணி அன்பானவங்க. பூப்போல மனசு படைச்சவங்க. எனக்கு அவங்க அண்ணி மட்டுமில்ல, இன்னொரு அம்மாவாத்தான் எம்மனசுல நினைச்சுகிட்டிருக்கேன்.”

இதைக் கேட்டுத் தன் மகனின் பாசத்தையும், பெருந்தன்மையையும் நினைத்துப் பெருமைப்பட்ட கனகம்,

“அதானே! எம்மருமகளைப் பத்திப் பேச இந்தம்மாவுக்கு என்ன உரிமையிருக்கு? பாவம் கல்பனா! இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மனசு தேறிட்டு வர்றா. அதுக்குள்ள இவங்க வேற!” வாய் விட்டுப் புலம்பினாள்.

மதுமிதாவின் அம்மா பேசிய குத்தல் பேச்சால் இரவு முழுதும் தூங்காமல், அழுதழுது சிவந்து போன கண்களும், நொந்து போன இதயமுமாக இருந்த கல்பனாவின் மனம், ப்ரகாஷின் அன்பு மொழிகளாலும், மாமியாரின் தாய்மை நிரம்பிய கனிவான வார்த்தைகளாலும், சகஜ நிலைக்குத் திரும்ப, டைனிங் ரூமுக்குள் நுழைந்தாள் .

ப்ரகாஷின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டவள், “ப்ரகாஷ், எங்களுக்குக் குழந்தை இல்லைனு மதுமிதாவோட அம்மா பேசினத நினைச்சு ஃபீல் பண்ணாதப்பா. அவங்களுக்குத் தெரிஞ்சுது அவ்வளவுதான்னு நான் இப்ப மனசைத் தேத்திகிட்டேன். உனக்கு மதுமிதாவைப் பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும். மதுமிதாவுக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. மதுமிதா நம்ம வீட்ல வந்து வாழப் போற பொண்ணு. அவங்கம்மா பேசினதப் பத்தி அவகிட்ட எதுவும் சொல்லாதே.”

“அப்படி இல்ல அண்ணி. எனக்கு அவங்க பேச்சு சுத்தமாப் பிடிக்கல.”

“இங்க பாரு ப்ரகாஷ். அவங்க வளர்ந்த, வாழ்ந்த சூழல் அப்படி இருக்கலாம். இல்லைன்னா அவங்க பேசறது சரியில்லைன்னு அவங்க உணராம இருக்கலாம். இப்ப என்னாயிடுச்சு?

மதுமிதா அம்மாவும் நம்மளோட பழக ஆரம்பிச்சிட்டாங்கன்னா அவங்ககிட்ட இருக்கற நெகடிவ் வைப்ரேஷன் காணாம போயிடும். நாளடைவில் அவங்களையும் நம்ம மாதிரி பாசிடிவ் வைப்ரேஷன் உள்ளவங்களா மாத்திட்டா போச்சு! என்ன சொல்றே?”

உற்சாகமாக சிரித்தாள் கல்பனா.

“உங்க நல்ல மனசுக்கு கடவுள் எதுக்குத்தான் உங்களை இப்படி சோதிக்கிறாரோ தெரியல அண்ணி?”

குழந்தை போலக் கண் கலங்கினான் ப்ரகாஷ்.

அதுக்குத்தான் சீக்கிரமா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்கிறேன். உங்களுக்குப் பொறக்கப் போற குழந்தைய நான் கொஞ்சிட்டுப் போறேன். நம்ம குடும்பத்துக்கு வாரிசு வேணும். அவ்வளவுதான்.! அத்தை நான் சொல்றது சரிதானே!”

“நீ சொன்னா சரிதாங் கண்ணு. இப்ப என்ன செய்யலாம்னு சொல்லு செஞ்சிடலாம்.”

“அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு அவங்களுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடுங்க, கல்யாண செலவுக்கு நான் ஆஃபீஸ்ல லோன் போடறேன்.”

“அண்ணி, நீங்க லோன் போடவேண்டாம். நான் பாத்துக்கறேன்.”

அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்து வந்த சுரேஷ்,

“கல்யாணச் செலவு மொத்தமும் எங்களோடது. கல்யாண வாழ்க்கையை நீ கடனோட ஆரம்பிக்கக் கூடாது. நீ புது மாப்பிள்ளையா, லட்சணமா கல்யாணத்தைப் பத்தி கனவு கண்டா போதும்டா தம்பி. இந்த வீட்டுக்கு நான்தான் தலைமகன். எல்லா வேலையும் நான் பாத்துக்கறேன்.”

செல்லமாகத் தம்பியின் தலையைக் கோதினான்.

“ஆமா! மதுமிதா அம்மா மேல இருந்த கோபத்துலதான் மதுமிதா உன் மொபைல் நம்பரைக் கேட்டப்ப தராம வந்துட்டியா? நான் கிளம்புறப்ப ரகசியமா எங்கிட்ட சொன்னா!”

“நான் உன் நம்பரை அவளுக்குக் குடுத்திருக்கேன். அவ நம்பரை உனக்கு அனுப்பியிருக்கேன். மொதல்ல அவளுக்கு வாட்ஸேப்ல பாஸிடிவா ஒரு மெஸேஜ் அனுப்பு. எந்தக் கவலையுமில்லாம லைஃபை என்ஜாய் பண்ணனும் சரியா?”

மருமகள் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனவளாய், அவளைக் கட்டியணைத்து, முன்னுச்சியில் முத்தமொன்றைப் பதித்தாள் கனகம்.

பேரன்பின் சுகந்தம் அந்த இல்லம் முழுக்கப் பரவியது.


விஜி சம்பத்


திருமதி விஜயலக்ஷ்மி, விஜி சம்பத் என்ற புனைபெயரில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவர் ஒரு முதுகலை பட்டதாரி. எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவருடைய சிறுகதைகள், மற்றும் குறுந்தொடர்கள் பல தமிழ் வார மற்றும் மாத இதழ்களில் வெளி வந்துள்ளன.

தினமணி கதிர், தினமலர் வாரமலர், மங்கையர் மலர், அவள் விகடன், ஆனந்த விகடன் போன்ற பல பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவர் பங்கு பெற்று பரிசுகள் பெற்றுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து வெளியாகும் ஆனந்த சந்திரிகை என்ற மின்னிதழ் நடத்தும் சிறுகதை போட்டிகள், கவிதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகள் பெற்று இருக்கிறார். தினத்தந்தியில் இவருடைய கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. நாவல்கள், குறுநாவல்கள் சிறுகதை தொகுப்புகள் என்று சுமார் பதினோரு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன