
குமாரசாமியும் குமுதாவும் பயணித்த விமானம் தரையிறங்கப் பத்து நிமிடங்களுக்கு முன், எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. வானில் அலைபாய்ந்து, ஊஞ்சலாடி, இரண்டு குன்றுகளையும் ஊரின் உயரமான கட்டடத்தையும் சாமர்த்தியமாகத் தவிர்த்து, மூக்கு ரன்வேயில் லேசாய்த் தேய்ந்து, பெரிய சத்தத்துடன் கோணலாக நின்றது அந்த போயிங் விமானம். முன்னூறு பயணிகளின் அலறல் குரல்களும் உலகின் அனைத்து தெய்வங்களையும் அழைக்க, புகை மண்டலத்தில் ‘புஸ்’ஸென்று பெருமூச்சு விட்டது விமானம்.
ஆம்புலன்ஸ், ஃபயர் எஞ்சின், உதவிக் குழு என அனைத்தும் விரைவாகச் செயல்பட்டு, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர். குமாரசாமியும் குமுதாவும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, இருமியவாறு விமானத்திலிருந்து இறங்கினர்.
“என்ன தைரியம், துணிச்சல், திறமை இருந்தால் இப்படி விமானத்தை இறக்கிப் பயணிகளைக் காப்பாற்றியிருக்க முடியும்!” என்று அனைவரும் விமான ஓட்டியைப் பாராட்டிப் புகழ்ந்தனர்.
உயர் அதிகாரிகளையும் பத்திரிகை நிருபர்களையும் சந்தித்துவிட்டு வந்த விமான ஓட்டியை, குமாரசாமியும் குமுதாவும் எழுந்து நின்று வரவேற்றனர்.
பைலட் கவிதா குமாரசாமி, பெற்றோரை வணங்கி, மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொண்டாள்.
குமாரசாமி, கவிதாவுக்குச் சின்ன வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தபோது, “பொட்டப் புள்ளைக்கு எதுக்குங்க சைக்கிளும் மோட்டாரும்? விழுந்து அடிபட்டுக்கிட்டா, நாளைக்குக் கல்யாணம் கார்த்தின்னு எப்படிச் செய்யறதாம்?” என்று தடை போட்டாள் குமுதா.
அம்மாவையும் மீறி, அப்பாவின் எதிர்பார்ப்பையும் தாண்டி, தானே குரங்குப் பெடல் அடித்துப் பின்னர் சீட்டில் உட்கார்ந்து சைக்கிள் ஓட்டினாள் இன்றைய பைலட் கவிதா!
குமாரசாமி பெருமைப்படுவது நியாயம்தானே?
152
