
“அம்மா, நான் ஜெயிச்சிட்டேன்!”
மகதி தன் தாய் சுஜாதாவிடம் கைப்பேசி மூலம் சொன்னாள்.
சுஜாதா, தன் மகள் வளர்ந்து வந்த விதத்தைப் பற்றி யோசித்தாள். அவளுக்குப் பத்து வயதாக இருந்தபோது, சைக்கிள் கற்றுக்கொள்வதற்காகத் தன் தந்தையின் சைக்கிளைத்தான் எடுத்துச் செல்வாள்.
“ஏங்க, அவளுக்கு ஒரு லேடீஸ் சைக்கிள் வாங்கித் தரக்கூடாதா?” என்று சுஜாதா கணவரிடம் கேட்டபோது,
“அதெல்லாம் தேவையில்லை. நான் என் பொண்ணை ஒரு பையனைப் போலவே வளர்க்கப் போகிறேன்” என்றார்.
ஆண்கள் செய்யக்கூடிய வேலை எதுவாக இருந்தாலும், அதைத் தானும் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற வெறி மகதிக்கு உண்டு.
அவள் வளர வளர, பைக் ரேஸிங்கில் ஈடுபாடு காட்டினாள். தாயார் எதிர்ப்புத் தெரிவித்தபோது,
“இதுவும் ஒரு விளையாட்டுதான்மா” என்றாள்.
தற்போது, தனது இருபத்தைந்தாவது வயதில், ‘மகளிர் சர்க்யூட் பைக் ரேஸிங்’ போட்டியில் அகில இந்திய சாம்பியன் ஆகியிருக்கிறாள்.
கொண்டாட்டமெல்லாம் முடிந்த பிறகு, சுஜாதா கேட்டாள்.
“இதோடு உன் விளையாட்டு ஆர்வம் முடிஞ்சதா?”
“இல்லை. அடுத்த வருஷம் ஆண்களோடு சேர்ந்து ‘மிக்ஸ்டு சர்க்யூட் ரேஸிங்’ போட்டியில் கலந்துக்கப் போறேன்.”
மகதி சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள்.
