உமா ஸ்வாமிநாதன்/வறுமையின் வாசம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட கோட்ட வூடு என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி உமா ஸ்வாமிநாதன் எழுதிய “வறுமையின் வாசம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

பூக்காரி செல்லம்மாள்;
பூ விற்கும் அவளிடம் வஞ்சமில்லா புன்னகை;
தன் தொழிலை வெறும் வருமானத்திற்கான வழியாய் மட்டும் பார்க்காமல், அன்பும் நேர்மையும் கலந்த ஒரு சேவையாகச் செய்து வந்தாள்.
கனிவான அணுகு முறை; பூக்களை விற்கும் போதும், வாடிக்கையாளர்களிடம் பேசும் போதும் எப்போதும் முகமலர்ச்சியுடன் இருப்பாள்.
பேச்சில் இருக்கும் கனிவு, பூக்களின் வாசனையை விடவும் மனதிற்கு இதமளிக்கும். பூக்களின் தரத்திலும், விலையிலும், எப்போதும் நேர்மையாக இருப்பாள். வாடிய பூக்களைக் கலந்து விற்க மாட்டாள். நியாயமான விலையையே வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பாள்.
வறுமையிலும் பிறருக்கு உதவும் குணம் கொண்டவள்.
“செல்வம் இருப்பவர்கள் கொடுப்பது உதவி; ஏழ்மையிலும் கொடுப்பது தான தர்மம்.”
அன்றைய பொழுது அவளுக்குப் போதிய வியாபாரம் இல்லை. கையில் இருந்த சொற்பக் காசுகளை வைத்து, அன்றைய உணவிற்காகக் கொஞ்சம் கஞ்சி வாங்க நினைத்தாள்.
அப்போது, அவளை விடவும் மெலிந்து போன ஒரு முதியவர் பசியால் வாடி அங்கே அமர்ந்திருந்தார். அவர் கண்களில் தெரிந்த பசி, அந்தப் பூக்காரியின் வயிற்றுப் பசியை விடப் பெரிதாகத் தோன்றியது.
தன்னிடம் இருந்த அந்தச் சொற்பப் பணத்தில் ஒரு சிறு பகுதியை எடுத்து, அந்த முதியவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள்.
அது மட்டுமல்லாமல், தன்னிடம் எஞ்சியிருந்த பூக்களை ஒரு மாலையாகத் தொடுத்து அங்கிருந்த சிறிய தெய்வச் சிலையின் பாதத்தில் வைத்து, “அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்,” என வேண்டினாள்.
அன்று அவள் வயிறு நிறையவில்லை என்றாலும், அந்த முதியவரின் பசி ஆறியதைக் கண்டு அவள் மனம் நிறைந்திருந்தது.

உதவி செய்வதற்குப் பெரிய வங்கி இருப்பு தேவையில்லை; ஈரமான மனசு இருந்தால் போதும். தன்னிடம் இருப்பதே குறைவாக இருந்தாலும், அதிலும் ஒரு பங்கை இல்லாதவருக்குக் கொடுப்பதே உண்மையான மனிதநேயம்.

தான் தொடுக்கும் மாலைகளையும் பூக்களையும் இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் உயரிய பொருளாகக் கருதி, மிகுந்த சுத்தத்தோடும், கவனத்தோடும் பணிகளைச் செய்வாள். தன்னிடம் பூ வாங்க வசதி இல்லாதவர்களிடமும், சிறு குழந்தைகளிடமும், மிகுந்த அன்பு காட்டி, சில சமயம் பிரதிபலன் பாராமல், பூக்களைக் கொடுக்கும் தாராள குணம் கொண்டவள்.

அன்று இருள் பிரிந்து வெளிச்சம் எட்டிப்பார்க்காத அதிகாலை வேளை. பூ மார்க்கெட்டில் பூக்களை ஏற்றி வந்த வண்டிகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.
வெயில், மழை என பாராமல் அதிகாலையிலேயே எழுந்து பூச்சந்தைக்குச் சென்று, உழைப்பை மூலதனமாகக் கொண்டு தன் வாழ்க்கையைத் தார்மீக நெறிகளுடன் நடத்துவாள்.
“பூக்களின் மென்மை அவர் கைகளிலும், அதன் நறுமணம் அவர் குணத்திலும் நிறைந்திருக்கும்.” அன்று, ஒரு விசித்திரமான வரவு;
அன்று மாலை வானம் லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. செல்லம்மாள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தெருவோரக் குப்பைத் தொட்டியின் அருகே, ஒரு மெல்லிய முனகல் சத்தம் கேட்டது. பூனைக்குட்டி என்று நினைத்து எட்டிப் பார்த்த செல்லம்மாளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
பயத்தோடு சென்று பார்த்தவள், திடுக்கிட்டுப் போனாள். கிழிந்த துணிகளுக்கு நடுவே, பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கைகால்களை உதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தது.
அங்கே, அழுக்கடைந்த துணிகளுக்கு இடையே, பிஞ்சு விரல்களை அசைத்த படி ஒரு பச்சிளம் குழந்தை!

“ஆத்தாடி! எந்தப் பாவி பெத்த குழந்தையோ,” என்று பதறியபடி, யோசிக்கக் கூட நேரமில்லாமல் ஓடிச் சென்று அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள்.
மழையில் நனைந்திருந்த அந்தக் குழந்தையின் உடல் சில்லென்று இருந்தது. தனது சேலைத் தலைப்பால் அந்தக் குழந்தையின் ஈரத்தைத் துடைத்து, தன் நெஞ்சோடு அணைத்து கதகதப்பு ஊட்டினாள்.
நேர்மையும் பாசமும் உள்ள
செல்லம்மாளுக்கு அந்தக் குழந்தையை அப்படியே வீட்டுக்குக் கூட்டிச் செல்லத் தான் ஆசை.
ஆனால், சட்டம் என்று ஒன்று இருக்கிறதே? நேராக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு விரைந்தாள்.
யாருக்கோ பாரமாகத் தெரிந்த அந்த உயிர், செல்லம்மாளின் கண்களுக்கு ஒரு வாடாத மலராகத் தெரிந்தது.
அவளுடைய தாய்மை முடிவெடுத்த
அந்த நேரம்.
“பெத்த மனம் பித்து என்பார்கள், ஆனால் இந்தத் தாய் மனம் அந்த நொடியே அந்த உயிரைத் தத்தெடுத்துக்கொண்டது.”
செல்லமாளைச்சுற்றியிருந்தவர்கள் தடுத்தார்கள். “செல்லம்மா, உனக்கே கஞ்சிக்கு வழியில்லை, இதுல, இந்தப் பாவம் உனக்கு எதுக்கு?” என்றார்கள்.
ஆனால் செல்லம்மாள் உறுதியாகச் சொன்னாள்:
“விதி விட்டுட்டுப் போனதை, என் மனிதாபிமானம் பிடிச்சுக்கிச்சு;
இனி இது என் புள்ளை.”
காவல் நிலையத்தில் செல்லம்மாள் நடந்ததைக் கூறி அழத் தொடங்கினாள்.
காவலர்கள் கனிவுடன் அவள் செய்கையை பாராட்டினர். அங்கிருந்த பெண் காவலர் குழந்தையின் நிலையைப் பார்த்துவிட்டு, முதலுதவி அளித்தார். எதிரில் இருந்த துணிக்கடையில் குழந்தைக்கு ஏற்றவாறு தேவைப்படும் துணிகள் வாங்கி கொடுத்தார்.
இன்னொரு காவலர் கொஞ்சம் பணம் கொடுத்து, “பால் வாங்க வச்சுக்கோமா,” என்றதும், “பரவாயில்லை ஐயா,” என்றாள். இருக்கட்டும்மா என்று அவள் கையில் வைத்தார்,
செல்லம்மாளின் அன்பைக் கண்ட இன்ஸ்பெக்டர்.
“அம்மா, முறைப்படி இந்தக் குழந்தையைத் தத்துக் கொடுக்கச் சில நடைமுறைகள் இருக்கு. அதுவரை இந்தக் குழந்தையை நீங்களே கவனிச்சுக்க முடியுமா?” என்று கேட்டார்.
அந்த வார்த்தைக்காகவே காத்திருந்த செல்லம்மாள், “என் உயிரைக் கொடுத்தாவது இந்தக் குழந்தையை வளர்ப்பேன் ஐயா!” என்று உருக்கமாகக் கூறினாள்.
காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகத் தகவல்களைப் பதிவு செய்துவிட்டு, ஒரு தாய்க்குரிய பெருமிதத்தோடு அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தன் குடிசைக்கு வந்தாள் செல்லம்மாள்.
சுற்றி இருந்தவர்கள் முதலில் தடுத்தாலும், பிறகு அவளுக்கு ஆதரவாய் நின்றார்கள்.
இருண்டிருந்த அவள் வீட்டுக்குள், அந்தக் குழந்தையின் அழுகுரல் ஒரு மங்கல இசையாக ஒலித்தது. குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குழந்தை, இன்று செல்லம்மாளின் வீட்டு மகாலட்சுமியாக மாறியிருந்தது.
ஊர் மக்கள் ஆச்சரியமாகப் பார்க்க, செல்லம்மாள் மட்டும் அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்து
“இனி நீ என் செல்லம்,” என்று முத்தமிட்டாள்.
பெற்றவர்களும் இல்லாமல், கணவனும் குடித்து, குடித்து உயிரை விட சொந்த பந்தம் ஒதுங்க, தனியே
போராடிக்கொண்டிருந்த செல்லம்மாவுக்கு இந்த குழந்தை வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்கியது. யாழ் போன்ற மென்மையான குரலில் அழுது கொண்டிருந்த அந்தப் பிஞ்சிற்கு, ‘யாழிசை’ என்று பெயரிட்டு வளர்த்தாள். இன்னும் போராட்டமான வாழ்க்கையானது.
மல்லிகைப் பூ கட்டும் தொழிலில் அவளுக்குக் கிடைப்பது சொற்பக் கூலிதான். அந்த வருமானத்தில் பால் பவுடரும், குழந்தைக்கு தேவை யானது வாங்குவதற்கே அவளது வயிறு காய வேண்டியிருந்தது.
செல்லம்மாளின் உலகம் அந்த நான்கு தென்னை ஓலைகளுக்குள் அடங்கி விட்டது. காற்று பலமாக வீசினால் கிழிந்து விடுமோ என அஞ்சும் அந்த ஓலைத் தட்டிகள் தான், அவளது மானத்தையும் அவளது பிஞ்சுக் குழந்தையின் கனவுகளையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன.
அந்தச் சிறிய குடிசைக்குள் ஒரு மூலையில், பழைய துணிகளின் வாசம்; இன்னொரு மூலையில், அணைந்து போன மண்ணெண்ணெய் அடுப்பின் கசப்பான வாசனை. அந்த அடுப்பு எரிந்த நாட்களை விட, அதன் திரி காய்ந்து போய்க் கிடந்த நாட்களே அதிகம்.
வாடாத உழைப்பு, வாடும் வயிறு;
ஒவ்வொரு அதிகாலையிலும், பனி விலகும் முன்பே அவளது விரல்கள் மல்லிகைப் பூக்களோடு மல்யுத்தம் செய்யத் தொடங்கிவிடும்.
வெண்மையான மல்லிகை மொட்டுகள் அவளது கைகளில் சரங்களாக மாறும்போது, அவளது கண்கள் மட்டும் கண்ணீரில் நனைந்திருக்கும். ஊரே அந்த மல்லிகைச் சரத்தின் வாசனைக்காகக் காத்திருக்கும், ஆனால் அந்தப் பூக்களைக் கட்டும் செல்லம்மாளுக்கோ அது வெறும் பசியின் அடையாளமாகவே தெரிந்தது.
“குழந்தையின் சிரிப்பில் வயிறு நிறைந்துவிடும்,” என்று சொல்லுவார்கள். ஆனால், அந்தப் பச்சிளம் குழந்தை பசியில் அழும்போது,
ஒரு தாயின் மௌனப் போராட்டம் நடக்கும்.
குழந்தைக்குப் பால் புகட்டிவிட்டு, மிஞ்சியிருக்கும் தண்ணீரை அருந்தி விட்டுப் படுக்கும் போது, அவளது வயிறு ஒரு சுருங்கிய காகிதத்தைப் போலக் கிடக்கும்.
பசி அவளது குடலைக் கிழிக்கும் போதெல்லாம், அருகில் உறங்கும் தன் மகவின் பிஞ்சு விரல்களைப் பிடித்துக் கொள்வாள்.
அது தான், அவளுக்கு அடுத்த நாள் மல்லிகைப் பூ கட்டத் தேவையான பலத்தைத் தந்தது.

பகலில் பூ மார்க்கெட், இரவில் யாழிசைக்காக விழித்திருக்கும் தாய்மை என அவளது நாட்கள் ஓடின.
பூக்களின் வாசத்தை விட, யாழிசையின் பால் மணம் அவளுக்கு அதிக நம்பிக்கையைத் தந்தது. யாழிசை சிரிக்கும்போது செல்லம்மாளின் வறுமை மறைந்து போகும்.
“இதான் வறுமையின் வாசம் மற்றும் அன்பின் பலம்,” என்று தோன்றியது. யாழிசை வளர வளர, செலவுகளும் வளர்ந்தன. ஆனால் செல்லம்மாள் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை.
‘கல்வியே ஆயுதம்,’ என்று சொல்லிச்சொல்லி வளர்த்தாள்.
செல்லம்மாளுக்குப் படிப்பறிவு இல்லை. தன் கட்டை விரல் ரேகையை வைக்கும் போதெல்லாம் அவள் வருந்துவாள். அதனால் யாழிசையை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
சுற்றி இருந்தவர்கள் பக்கத்தில் இருக்கும் அரசாங்க பள்ளியில் சேர்த்து விடு. இங்கு படித்த எத்தனையோ பேர் பெரிய பதவியில் இருக்காங்க என்று சொல்லி
அரசாங்க பள்ளியில் சேர்க்கச் சொன்னார்கள்.
காவல் துறை அதிகாரி ஒருவர் அரசாங்க பள்ளியில் கிடைக்கும் சலுகைகள் பற்றி சொல்லி, அதை சரியாகப்பயன்படுத்திக்கொள் என்று மலரை பள்ளியில் சேர்த்து விட்டார்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி;
ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் கிடைக்கும்.
சீருடைகள் மற்றும் காலணிகள்; மதிய உணவும் பள்ளியில் கிடைத்தது.
வீட்டிற்கு அருகில் என்பதால் நடந்தே சென்றாள் மலர். செல்லம்மாவுக்கு தன் மகள் ஒரு வேளையாவது நன்றாகச் சாப்பிட முடிந்தது – மகிழ்ச்சி.
ஒருமுறை மல்லிகைப் பூ விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. கையில் காசில்லை. “நான் வாடினாலும் என் செடி வாடக்கூடாது,” என்பாள் சிரித்துக்கொண்டே. சுற்றுவட்டாரத்தில் சிலர், “யாரோ பெத்த புள்ளையை எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு வளர்க்குற?” என்று கேட்பார்கள்.
அதற்கு செல்லம்மாள் சொன்ன பதில் மிக ஆழமானது:
“பூச்செடிக்குத் தெரியுமா அது யாருக்காக மணம் வீசுதுன்னு?
அது பாட்டுக்கு வளருது, நாமும் ரசிக்கிறோம்.”
“இந்தப் புள்ளையும் அப்படித்தான். எனக்கு இது கடவுள் கொடுத்த வரம். பெத்தாத்தான் அம்மாவா? வளர்த்தா அம்மா இல்லையா?”
சவாலான காலங்களும் உண்டு.
யாழிசைக்கு ஒருமுறை கடுமையான காய்ச்சல் வந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூடப் பணமின்றி தவித்தாள் செல்லம்மாள். அன்று அடைமழை. பூக்கள் அனைத்தும் மழையில் நனைந்து அழுகி விட்டன. விற்பனைக்கு ஏதுமில்லை.
அன்று செல்லம்மாள் செய்த காரியம் ஊரையே நெகிழ வைத்தது. மழையில் நனைந்து கொண்டே ஒவ்வொரு வீடாகச் சென்று,
“உங்க வீட்டு வாசல்ல, தோட்டத்தில் இருக்கிற குப்பையை நான் அள்ளி சுத்தம் பண்ணித் தர்றேன், என் மகளுக்கு மருந்து வாங்கக் கொஞ்சம் காசு கொடுங்க,” என்று கையேந்தினாள்.
.
வறுமையின் வலியைத் தாண்டி, அதில் இருக்கும் வாழ்வியல் பாடங்களை உணர வைத்தது செல்லம்மாவுக்கு.
அவளது தாய்மை, அந்த ஊர் மக்களின் மனதைக் கரைத்தது.
காலங்கள் உருண்டோடின. யாழிசை இப்போது கல்லூரிப் படிப்பை முடித்து, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். முதல் மாதச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேராக அவள் சென்றது அந்தப் பழைய பூ மார்க்கெட்டிற்குத்தான்.
அங்கே, முதுமை காரணமாகக் கண்கள் மங்கிய நிலையில், இன்னும் பூக் கட்டிக்கொண்டிருந்த செல்லம்மாளின் கையைப் பிடித்து இழுத்தாள்.
“அம்மா, இனிமே நீ பூ விற்க வேணாம். உன்னோட இந்தப் பூ
இதோ பூத்து நிக்குது. வா வீட்டுக்குப் போகலாம்.”
செல்லம்மாள் அந்தப் பணத்தைப் பார்த்தபோது, அதில் தெரிந்ததெல்லாம் பணத்தின் மதிப்பு அல்ல; பல வருடங்களாகத் தான் சிந்திய வியர்வையின் வெற்றி முத்தாய்ப்பு.
உலகமே “குப்பை” என்று ஒதுக்கிய ஒரு மொட்டு, இன்று ஒரு வீட்டின் “வாசனை மலராக” மாறியிருக்கும் அதிசயம். மற்ற பிள்ளைகளுக்குப் பெற்றோர் என்பது உரிமை. ஆனால், இந்த மகளுக்கோ அவர்கள் “மறுபிறவி” தந்தவர்கள். அவளது ஒவ்வொரு சிரிப்பிலும், ஒவ்வொரு வளர்ச்சியிலும் அந்த நன்றியுணர்வு கலந்திருக்கும்.
தன்னை ஒருமுறை கை விட்ட உலகத்திடம் இருந்து காப்பாற்றிய கரங்களை அவள் ஒருபோதும் கைவிடமாட்டாள். மற்ற குழந்தைகளை விட இவள் காட்டும் பாசம் ஆழமானது; ஏனெனில் இதில் ரத்த உறவையும் தாண்டிய உயிரின் பிணைப்பு இருக்கிறது. ஒரு நாள் மாலை வேளையில், யாழிசை தன் தாயிடம் கேட்டாள், “அம்மா, நான் குப்பையில கிடைச்சவள்னு தெரிஞ்சும்,
என்னை எப்படி இவ்வளவு ஆசையா வளர்த்த?”
செல்லம்மாள் யாழிசையின் கைகளைப் பற்றிச் சொன்னாள்:
“பெற்றெடுத்த பந்தம் இல்லை என்றாலும், நெஞ்சோடு அணைத்த தருணமே, நீ என் உயிர் என்றானது. உதிரம் தராத உறவை, உன் மழலைச் சிரிப்பு ஈடு கட்டி விட்டது.
என் கண்களின் இமையாய் உன்னைச் சுமக்கிறேன்.
யார் பெற்றெடுத்தால் என்ன? என் கையில் உன்னை ஏந்திய கணமே நீ என் மறுபிறவி.”

“இரத்த பந்தம் தோற்றுப்போகும், உன் பிஞ்சு விரல்கள் என் விரல் கோர்க்கும் பாசத்தின் முன்னே.
ஈன்றெடுத்த வலி எனக்கில்லை, ஆனால் உன் சிறு அழுகையும் என் இதயத்தை அறுக்கின்றது.
தேடி வந்த தெய்வமாய் நீ, உன்னைத் தாங்கும் தாய்மையின் தவமாய் நான்!”
“நீ குப்பையில கிடைக்கல தாயி;
ஒரு குப்பைத் தொட்டிக்குள்ள
வைரம் கிடைச்சது.
அதைத் தூய்மைப்படுத்திக் கோர்க்குறது தான் இந்தப்
பூக்காரியோட வேலை.”
“இனி இந்த கையால் உழைத்தது போதும். நான் உன்னை பார்த்துப்பேன் அம்மா,” என்று கண்ணீரோடு செல்லம்மாளை இறுக அணைத்துக்கொண்டாள்.


**

தற்சமயம் பெங்களூருவாசியான திருமதி உமா ஸ்வாமிநாதன் தீவிரமான வாசிப்பாளர். இவர் “நந்தவன பூக்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். “உலக மாநாடு” நடத்தி வெளியிட்ட புத்தகத்தில் இவருடைய கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதுவரை 1000க்கும் மேல் சிறுகதைகளும் 300 க்கு மேல் கவிதைகளும் எழுதி இருக்கிறார். சில மாத பத்திரிகைகளிலும், மின்னிதழகளிலும் இவருடைய சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. 20க்கும் அதிகமான தொகுப்பு புத்தகங்களில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
“அனாமிகாவின் மந்திர தந்திரக் கதைகள்” என்ற புத்தகம் குழந்தை களுக்காக வெளியிட்டு இருக்கிறார். Book of recordsக்காக மற்ற தோழிகளுடன் இணைந்து 17 புத்தகங்கள் வெளியிட்டு விருது வாங்கியுள்ளார். பிரபலமான எழுத்தாளர்களான பாலகுமாரன், சாண்டில்யன் பெயர்களில் விருதுகள் வாங்கியது இவருக்கு பெருமைகள் சேர்ப்பதாகச்சொல்லுகிறார்.
“பாரம்பரிய கலைகளும், கதைகளும்” என்ற புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். “அனாமிகாவின் மந்திர தந்திரக் கதைகள்” என்ற இவருடைய புத்தகத்திற்கு தமிழ்நாடு முத்தமிழ் சங்கம் வழங்கும் ‘எழுத்தாணி விருது’ கிடைத்தது. திருச்சி முத்தமிழ் சங்கம் சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான “ஜெயகாந்தன் விருதை” இவருக்கு அளித்து கௌரவப்படுத்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன