கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

அத்தியாயம் 4

டான் ஜுவான், மெஸ்கலிட்டோவைப் பற்றி வெளிப்படையாக எப்போதாவது பேசுவதுதான் உண்டு. ஒவ்வொரு முறையும் நான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்கும்போது, பேச மறுத்துவிடுவார். ஆனாலும், மெஸ்கலிட்டோவைப் பற்றிய ஒரு பிம்பம் மனத்தில் உருவாகும் அளவுக்குச் சில விஷயங்களைச் சொல்வார். அந்தப் பிம்பம் எப்போதும் மனித உருவத்தன்மை கொண்டதாகவே இருக்கும். மெஸ்கலிட்டோ ஓர் ஆண். அந்தச் சொல்லுக்கு ஆண்பால் இலக்கண விதி கட்டாயமாகப் பொருந்துவதால் மட்டுமல்ல; பாதுகாவலராகவும் ஆசிரியராகவும் அவர் தொடர்ந்து விளங்கியதாலும் அப்படிக் கருதப்பட்டார். நாங்கள் பேசும்போதெல்லாம், டான் ஜுவான் இந்த இயல்புகளைப் பல்வேறு விதங்களில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 1961
“பிசாசின் களை என்று அழைக்கப்படும் மூலிகை இதுவரை யாரையும் பாதுகாத்ததில்லை. அது சக்தியைப் பெறுவதற்கு மட்டுமே உதவுகிறது. ஆனால் மெஸ்கலிட்டோ ஒரு குழந்தையைப் போல மென்மையானவன்.”
“ஆனால், சில சமயங்களில் மெஸ்கலிட்டோ பயங்கரமானவனாக இருப்பதாகச் சொன்னீர்களே?”
“நிச்சயமாக அவன் பயங்கரமானவன்தான். ஆனால், அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்ட பிறகு, அவன் மென்மையானவனாகவும் அன்பானவனாகவும் இருப்பான்.”
“அவன் தன்னுடைய அன்பை எப்படிக் காட்டுகிறான்?”
“அவன் ஒரு பாதுகாவலன்; ஓர் ஆசிரியனும்கூட.”
“அவன் எப்படிப் பாதுகாக்கிறான்?”
“நீ எப்போதும் அவனை உன்னுடன் வைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால், உனக்கு எந்தத் தீங்கும் நேரிடாமல் அவன் பார்த்துக்கொள்வான்.”
“அவனை எப்போதும் என்னுடன் எப்படி வைத்துக்கொள்வது?”
“ஒரு சிறிய பையில் வைத்துக்கொள்ளலாம். அந்தப் பையை உன் அக்குளுக்குக் கீழே கட்டிக்கொள்ளலாம் அல்லது ஒரு கயிற்றால் கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்ளலாம்.”
“நீங்கள் அவனை உங்களுடன் வைத்திருக்கிறீர்களா?”
“இல்லை. ஏனென்றால், எனக்கு ஓர் ஆற்றல் துணை இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் அவனை வைத்திருக்கிறார்கள்.”
“அவன் என்ன கற்றுக்கொடுக்கிறான்?”
“சரியான முறையில் வாழ்வதைக் கற்றுக்கொடுக்கிறான்.”
“அவன் எப்படிக் கற்றுக்கொடுக்கிறான்?”
“விஷயங்களை உனக்குக் காட்டுகிறான்; எது என்ன என்பதையும் சொல்கிறான்.”
“எப்படிச் சொல்கிறான்?”
“நீயே அதை அனுபவித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.”
செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 1962
“மெஸ்கலிட்டோ உங்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லும்போது, நீங்கள் என்ன பார்க்கிறீர்கள், டான் ஜுவான்?”
“அப்படிப்பட்ட விஷயங்களைச் சாதாரணமாகப் பேச முடியாது. அதைப் பற்றி என்னால் உனக்குச் சொல்ல முடியாது.”
“நீங்கள் சொன்னால் உங்களுக்கு ஏதாவது தீங்கு நேருமா?”
“மெஸ்கலிட்டோ ஒரு பாதுகாவலன்; அன்பும் மென்மையும் கொண்ட பாதுகாவலன். ஆனால் அதற்காக நீ அவனைக் கேலி செய்யலாம் என்று அர்த்தமில்லை. அன்பான பாதுகாவலனாக இருக்கும் அவன், தனக்குப் பிடிக்காதவர்களிடம் பயங்கரத்தின் உருவமாகவும் மாறிவிடுவான்.”
“நான் அவனைக் கேலி செய்ய நினைக்கவில்லை. அவன் மற்றவர்களை என்ன செய்ய வைக்கிறான், அல்லது அவர்களுக்கு என்ன காட்டுகிறான் என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். மெஸ்கலிட்டோ எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் நான் உங்களிடம் விவரித்திருக்கிறேனே, டான் ஜுவான்.”
“உன்னைப் பொறுத்தவரை அது வேறு. ஒருவேளை, அவனுடைய வழிமுறைகள் உனக்குத் தெரியாததால்கூட அப்படியிருக்கலாம். ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதைப் போல, நீயும் அவனுடைய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.”
“இன்னும் எவ்வளவு காலம் நான் கற்றுக்கொள்ள வேண்டும்?”
“அவனே உனக்குப் புரியத் தொடங்கும் வரையில்.”
“அதற்குப் பிறகு?”
“அதற்குப் பிறகு நீயாகவே புரிந்துகொள்வாய். அதன் பிறகு என்னிடம் எதையும் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது.”
“மெஸ்கலிட்டோ உங்களை எங்கே அழைத்துச் செல்கிறான் என்பதை மட்டுமாவது சொல்ல முடியுமா?”
“அதைப் பற்றிப் பேச முடியாது.”
“அவன் மக்களை அழைத்துச் செல்லும் வேறொரு உலகம் இருக்கிறதா என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
“இருக்கிறது.”
“அது சொர்க்கமா?”
(ஆங்கிலத்தில் ‘heaven’ என்பதற்கான ஸ்பானியச் சொல் ‘cielo’. அதே சொல் ‘வானம்’ என்றும் பொருள்படும்.)
“அவன் உன்னை வானத்தின் வழியாக அழைத்துச் செல்கிறான்.”
“நான் கேட்பது, கடவுள் இருக்கும் சொர்க்கத்தைப் பற்றித்தான்.”
“இப்போது நீ முட்டாள்தனமாகப் பேசுகிறாய். கடவுள் எங்கே இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது.”
“மெஸ்கலிட்டோவே கடவுளா? ஒரே கடவுளா? அல்லது பல கடவுள்களில் ஒருவனா?”
“அவன் ஒரு பாதுகாவலன்; ஓர் ஆசிரியன் மட்டுமே. அவன் ஒரு சக்தி.”
“அந்தச் சக்தி நமக்குள்ளேயே இருக்கிறதா?”
“இல்லை. மெஸ்கலிட்டோவுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவன் நமக்கு வெளியே இருக்கிறான்.”
“அப்படியானால், மெஸ்கலிட்டோவை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் அவனை ஒரே உருவத்தில் பார்க்க வேண்டுமே?”
“இல்லை, அப்படியெல்லாம் இல்லை. அவன் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.”
வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 1962
“டான் ஜுவான், மெஸ்கலிட்டோவைப் பற்றி நீங்கள் ஏன் இன்னும் அதிகமாகச் சொல்லக்கூடாது?”
“சொல்வதற்கு ஒன்றுமில்லை.”
“நான் அவனை மீண்டும் சந்திப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய ஆயிரக்கணக்கான விஷயங்கள் இருக்குமே!”
“இல்லை. ஒருவேளை, நீ தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் எதுவுமே இல்லாமல் இருக்கலாம். நான் ஏற்கெனவே உன்னிடம் சொன்னதுபோல, அவன் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.”
“எனக்குத் தெரியும். இருந்தாலும், மற்றவர்கள் அவனைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
“அவனைப் பற்றிப் பேச விரும்புகிறவர்களின் கருத்துக்கு அவ்வளவாக மதிப்பில்லை. நீயே அதைப் புரிந்துகொள்வாய். நீயும் அவனைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவுவரைதான் பேசுவாய். அதற்குப் பிறகு, அவனைப் பற்றி ஒருபோதும் விவாதிக்க மாட்டாய்.”
“உங்களுடைய முதல் அனுபவங்களைப் பற்றி என்னிடம் சொல்ல முடியுமா?”
“அதனால் என்ன பயன்?”
“அப்படிச் சொன்னால், மெஸ்கலிட்டோவிடம் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.”
“உனக்கு ஏற்கெனவே என்னைவிட அதிகமாகத் தெரியும். உண்மையில், நீ அவனுடன் விளையாடியிருக்கிறாய். ஒருநாள், அந்தப் பாதுகாவலன் உன்னிடம் எவ்வளவு அன்பாக நடந்துகொண்டான் என்பதை நீ புரிந்துகொள்வாய். முதல் முறை அவன் உன்னிடம் நிறைய விஷயங்களைச் சொல்லியிருப்பான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால், நீ செவிடனைப் போலவும் குருடனைப் போலவும் இருந்தாய்.”

இன்னும் வரும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன