மடிப்பாக்கம் பிரபாவதி/மிதிவண்டி

அன்று அதிசயமாக அண்ணன் வேலை செய்யும் இடத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான். வாசலில் சைக்கிளை வைத்துவிட்டு உள்ளே சென்றான்.
ஏற்கெனவே தோழிகளுடன் அங்கும் இங்குமாக மிதிவண்டி ஓட்டக் கற்றிருந்தாள் ப்ரியாக்குட்டி. சைக்கிளைப் பார்த்ததும் அவளுக்கு ஆவல் மிகுந்தது. அதற்கேற்றாற்போல் அண்ணன் சைக்கிளைப் பூட்டவும் இல்லை.
ஸ்டாண்டை எடுத்துவிட்டுத் திருப்பினாள். இடது காலால் ஒரே அழுத்துதான். முழுவதுமாகச் சுற்றி மிதித்து ஓட்டுவதற்கு அவளுடைய உயரம் போதவில்லை. முன்னும் பின்னுமாக மிதித்து இரண்டு மூன்று தெருக்களை வலம் வந்தாள்.
அவசர வேலையாக வந்த கதிரவன், வாசலில் சைக்கிளைக் காணாமல் இரைந்தான்.
“அம்மா, இங்கே வச்ச வண்டியைக் காணோம்மா!” என்று அலறினான்.
வாசலுக்கு வந்த அம்மாவுக்குப் புரிந்தது.
“ப்ரியாக்குட்டி எடுத்திருப்பாடா. அங்குட்டுப் போய்ப் பாரு” என்றாள்.
“அம்மா, அது மேஸ்திரி அண்ணன் வண்டிம்மா. ஏதாவது ஆனா, அப்புறம் அவசரத்துக்கு வண்டி தரமாட்டாரு. அவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கறீங்க!” என்றான் கோபமாக.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்த ப்ரியாக்குட்டி, “இந்தாண்ணே, எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் குடுண்ணே!” என்றாள்.
ஆசைத் தங்கையின் கன்னத்தைத் தடவி, “வாங்கிருவோம். நீ நல்லாப் படி” என்றவாறு ஏறிச் சென்றுவிட்டான்.
யாரோ ஓர் அரசியல் தலைவர் வருகையையொட்டி, சிக்னலில் காரை நிறுத்திக் காத்திருந்த ப்ரியாவின் எண்ணத்தில் பழைய நினைவுகள் நிழலாடின.

2 Comments on “மடிப்பாக்கம் பிரபாவதி/மிதிவண்டி”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன