கஸ்தூரி குருசாமி/உழைப்பின் வெற்றி

மைதிலி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். அப்பாவிடம் மிதிவண்டி வேண்டும் என்று கேட்க அவளுக்குத் தைரியம் இல்லை. அப்பா காய்கறி வியாபாரம் செய்து சம்பாதிக்கும் பணத்தில் வீட்டு செலவுகளைச் சமாளிப்பதே மாதத்தின் இருபதாம் தேதிக்குப் பிறகு சிரமமாகிவிடும்.
சிவகாசியில் பெண்கள் வீட்டிலிருந்துகொண்டே தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்கும் பணியைச் செய்து சம்பாதிப்பதை மைதிலி தினமும் பார்ப்பாள். அதுபோல, மாலையில் பள்ளியிலிருந்து திரும்பியதும் இரண்டு மணி நேரம் அந்த வேலையைச் செய்யலாமா என்று அம்மாவிடம் கேட்டாள்.
“படிப்புதான் உனக்கு முக்கியம். இந்த வேலையைச் செய்வதால் படிப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றால் செய். நானும் சும்மாதானே இருக்கிறேன். உன்னுடன் வருகிறேன்” என்றாள் அம்மா.
இரண்டு மணி நேர வேலைக்கு நாற்பது ரூபாய் கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் எட்டு மணி நேரம் வேலை செய்வாள்.
ஒரு மாதம் ஆனதும், “அம்மா, என்னிடம் இப்போது 1,840 ரூபாய் இருக்கிறது. நான் பழைய மிதிவண்டி வாங்கிக்கொள்கிறேன்” என்றாள்.
அம்மாவும் தன்னிடம் இருந்த பணத்தைச் சேர்த்து, மைதிலிக்கு ஒரு மிதிவண்டி வாங்கிக் கொடுத்தாள்.
ஒரு வாரம் சிரமப்பட்டு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டாள் மைதிலி. மகள் படிப்பதோடு ஒரு தொழிலும் செய்து சம்பாதிக்கிறாளே என்று தாய்க்குப் பெருமையாக இருந்தது.
அந்த மிதிவண்டி தனது உழைப்பின் வெற்றி என்பதில் மைதிலிக்கும் பெருமை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன