
அந்தப் பெண்கள் பள்ளியில், கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தவுடன் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக மாணவிகளிடம் பேசி, அவர்களின் மனதை மாற்றுவதற்காகப் பள்ளி நிர்வாகம் கல்வியாளர் சுரேஷ் குமாரை உரையாற்ற அழைத்தது.
மேடையில் ஏறிய சுரேஷ் குமார், எதிரே அமர்ந்திருந்த பிளஸ் டூ மாணவிகளைப் பார்த்துப் புன்னகைத்தார். பிறகு தன் கையில் இருந்த காகிதச் சுருளைப் பிரித்து, பின்பக்கச் சுவரில் மாட்டினார். அதில் ஒரு சிறுமி புன்னகையுடன் சைக்கிளில் அமர்ந்திருந்தாள்.
“நீங்கள் எல்லோரும் சைக்கிள் ஓட்டப் பழகியிருப்பீர்கள், இல்லையா?
அப்போது முதல் நாளே கீழே விழுந்திருப்பீர்கள். முழங்காலில் அடிபட்டிருக்கும்.
அதற்காக இனிமேல் சைக்கிள் ஓட்டவே வேண்டாம் என்று விட்டுவிட்டீர்களா? அடுத்த நாளே மீண்டும் சைக்கிள் ஓட்டிப் பழக முயன்றிருப்பீர்கள், இல்லையா? அதுபோலத்தான் பரீட்சையும். ஒருமுறை தோல்வியுற்றால் பயப்படக்கூடாது. ‘வீழ்வது எழுவதற்கே’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றிகரமாகச் சைக்கிள் ஓட்டப் பழகுவதைப்போல, பரீட்சையிலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.”
முகத்தில் தெளிவுடன் மாணவிகள் கைதட்டியதும், தான் பேசியது அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார் சுரேஷ் குமார்.
