பி. ஆர். கிரிஜா/வீராங்கனை சுதா

சுட்டிப் பெண் சுதாவிற்குச் சைக்கிள் ஓட்டுவதில் அதீத நாட்டம். அவளுடைய அப்பா கதிரேசன், அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தார். அதனாலோ என்னவோ, அவள் முரட்டுக் காளையாகத் திமிறிக்கொண்டு, பள்ளியில் எல்லா விதமான விளையாட்டுகளிலும் பங்கேற்கத் தொடங்கினாள்.
“ஏய், சுதா! என் சைக்கிளை எடுக்காதே. எங்கேயாவது கீழே விழுந்து கிடப்பாய். அப்புறம், பள்ளிக்கூடத்துக்கு மட்டும்தான் சைக்கிள்!” என்று அப்பா எச்சரித்தார்.
சுதா அதைக் காதில் வாங்கினால்தானே!
அடுத்த நாள் வழக்கம்போல் குரங்கு பெடல் போட்டு, அடுத்த கிராமத்தில் இருக்கும் தன் தோழியைப் பார்க்கக் கிளம்பினாள்.
அப்போது வழியில், ஒரு வயதானவர் கையில் குச்சியை ஊன்றிக்கொண்டு விந்தி விந்தி நடந்துகொண்டிருந்தார். திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். சுதா உடனே சைக்கிளை நிறுத்திவிட்டு, அவரருகே ஓடினாள். அவர் சுயநினைவின்றிக் கிடப்பதைக் கண்டு பதறினாள். அருகிலிருந்த வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உதவி கேட்டாள். சிறிது நேரத்தில் அவர் கண் விழித்தார். அவரிடம் மெதுவாகப் பேசி, உடல்நிலை சற்று சீரானதும் அவருடைய வீட்டுக்குச் செல்ல உதவுவதாகக் கூறினாள்.
அவரால் நடக்க முடியாததால், சுதா அவரைச் சைக்கிளின் பின்புறத்தில் அமர வைத்தாள். மெதுவாகச் சைக்கிளை ஓட்டி, அவருடைய வீட்டில் கொண்டுபோய் விட்டாள்.
அந்த ஊரே அவளுடைய வீரதீரச் செயலைப் பாராட்டி, கதிரேசனிடம் அவளைப் புகழ்ந்து தள்ளியது.
“உன் மகள் நாளைக்கு இந்த ஊருக்கே கலெக்டர்தான், போ!” என்று வாழ்த்தினார்கள்.
கதிரேசனின் முகத்தில் பூரிப்பு. “உனக்குப் புதுச் சைக்கிள் வாங்கித் தருகிறேன்” என்று சொல்லி, அன்புடன் தன் மகளை அணைத்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன