எம். எல். பிரபா/அதே சைக்கிள்

கமலா ஏழாம் வகுப்பு படிக்கும்போது, அவளுடைய தோழிகள் எல்லோரும் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்துத் தானும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய அப்பாவோ வாடகைக்குச் சைக்கிள் வாங்கித் தர மறுத்துவிட்டார். பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதில் அவருக்கு விருப்பமில்லை.

ஆனாலும், கமலா தன் தோழிகளிடம் சைக்கிளைச் சிறிது நேரம் வாங்கி ஓட்டக் கற்றுக்கொண்டாள். ஒருநாள் கீழே விழுந்து காலில் அடிபட்டுவிட்டது. ரத்தத்துடன் வந்த கமலாவை வீட்டில் எல்லோரும் திட்டினார்கள். அதிலிருந்து அவள் சைக்கிள் ஓட்டவே இல்லை.

காலம் ஓடியது. அவளுக்குத் திருமணமானது. அவளுடைய கணவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அதில்தான் அவர் தினமும் வேலைக்குச் செல்வார்.

ஒருநாள் கமலா தன் ஆசையை அவரிடம் கூறினாள். அவர் வாடகைக்குச் சைக்கிள் வாங்கி வந்து, அவளுக்கு ஓட்டக் கற்றுக்கொடுத்தார். பிறகு, பழைய லேடீஸ் சைக்கிள் ஒன்றைப் பாதி விலைக்கு வாங்கித் தந்தார். அதில் அவள் ஓட்டிப் பழகினாள்.

ஆனால், அவள் கர்ப்பமானதால் தொடர்ந்து சைக்கிள் ஓட்ட முடியவில்லை. அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவள் அந்தச் சைக்கிளைப் பத்திரமாக வைத்திருந்தாள்.

அந்தக் குழந்தைக்குப் பத்து வயதானபோது, அதே பழைய சைக்கிளிலேயே அவளுடைய மகளும் ஓட்டக் கற்றுக்கொண்டாள்.

தன் சிறுவயது ஆசை மகள் மூலம் நிறைவேறுவதைக் கண்டு கமலாவின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது. அந்தச் சைக்கிள் அவளுடைய நினைவுகளை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் ஆசையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன