
கிராமத்தில் வசித்த காவேரிக்குச் சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும்.
ஆனால், அவளுடைய அப்பா நமச்சிவாயம் தன் சைக்கிளைத் தொடக்கூடாது என்று சொல்லியிருந்தார்.
விடுமுறை நாட்களில் தோழி கங்காவின் வீட்டுக்கு விளையாடச் செல்லும்போது, அவளுடைய சைக்கிளை ஓட்டி காவேரி பழகிக்கொண்டாள்.
ஒருநாள் அதிகாலையில், நமச்சிவாயம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார்.
அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் பதறினார். காவேரி உடனே தன் அப்பாவின் சைக்கிளை எடுத்துக் குரங்குப் பெடல் போட்டுக்கொண்டே வேகமாகச் சென்று, ஊரின் எல்லையில் இருந்த மருத்துவரிடம் அப்பாவின் நிலையைச் சொல்லி, அவரை வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
நமச்சிவாயத்தைப் பரிசோதித்த மருத்துவர், உடனடியாக முதலுதவி அளித்துவிட்டு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். காவேரியின் சமயோசிதமான செயலையும் துணிச்சலையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
“உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். சரியான நேரத்தில் என்னை அழைத்து வந்த உங்கள் மகள் காவேரிக்கு நன்றி சொல்லுங்கள்” என்றார் மருத்துவர்.
“காவேரி! உனக்கு என்ன பரிசு வேண்டும்?” என்று அப்பா கேட்டார்.
“சைக்கிள், அப்பா!” என்றாள் காவேரி.
அடுத்த நாளே அவளுக்குப் புதிய சைக்கிள் கிடைத்தது.
பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் முதல் பரிசு வென்றாள் காவேரி. சைக்கிள் ஓட்டுவதில் மட்டுமல்ல, துணிச்சலிலும் அவள் உண்மையான வீராங்கனையானாள்!
நமச்சிவாயத்திற்குத் தன் மகளை நினைத்துப் பெருமையாக இருந்தது
