WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு ச. மணிவண்ணன் எழுதிய “முதல் குற்றவாளி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

மாலை ஐந்து மணி.
செங்குத்தாக நிற்க வைத்தது போல் நான்கு பதினோரு மாடி கட்டிடங்களை உள்ளடக்கியிருந்தது ‘ஜெயம் அபார்ட்மெண்ட்.’
வாசலில் வந்து நின்ற போலீஸ் ஜீப்பை பார்த்ததும், ஓடி வந்து பெரிய கேட்டை திறந்தான் வாட்ச்மேன்.
அவனுடைய பத்து வருட அனுபவத்தில், அந்த அபார்ட்மெண்ட் உள் போலீஸ் ஜீப் நுழைவது இதுதான் முதல்முறை என்பதால் வியர்த்து விட்டிருந்தது.
முன் சீட்டில் பெரிய மீசையுடன் விரைப்பாக உட்கார்ந்து இருந்தார் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன்.
“கியூ பிளாக் எந்த பில்டிங்ல இருக்கு?”
“ஐயா, அதோ அந்த வடக்கு பார்த்த பில்டிங் தான்,” என்று வாட்ச்மேன் சொன்னான்.
அவன் கைகாட்டிய திசை நோக்கி ஜீப் கரும்புகை கக்கி விரைந்தது.
வாட்ச்மேன் அப்பார்ட்மெண்ட்ன் செகரெட்டரிக்கு தகவல் கொடுத்தான்.
“போலீஸா? நம்ம அபார்ட்மெண்ட்க்கா?” இரண்டு ஆச்சரிய கேள்விகளை நம்ப முடியாமல் கேட்டு விட்டு, கியூ பிளாக் நோக்கி தன்னுடைய ஸ்கூட்டியை ஓட்டினார் மேனேஜர் சீனு.
மேனேஜர் சீனு மனதிற்குள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டார் ‘நல்ல டீசன்டான ஃபேமிலிஸ் தங்கியிருக்கிற இடம். இங்க எதுக்கு போலீஸ் வருது?’
அதிர்ச்சியுடன், போலீஸ் ஜீப்பின் பின்னால் ஸ்கூட்டியை நிறுத்தினார். ஜீப்பிலிருந்து குதித்து இறங்கிய இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் அடுக்குமாடியைப் பார்த்தார்.
“சார் நான் சீனு. அபார்ட்மென்ட் மேனேஜர். என்ன விஷயமா வந்து இருக்கீங்க?”
“ரத்னா ஷிப்பிங் கம்பெனி ஆடிட்டர் செல்வம் தங்கியிருக்கிற ஃப்ளோர் எங்கிருக்கு?”
“தேர்ட் ஃப்ளோர்.. சார். நான் கூப்பிட்டுட்டு போறேன்,” என்று லிஃப்ட் நோக்கி நடக்க, இன்ஸ்பெக்டர் உடன் இரண்டு கான்ஸ்டபிள்கள் பின் தொடர்ந்தனர்.
லிஃப்ட் மூன்றாவது தளத்தில் நின்றது.
லிஃப்டிலிருந்து வெளியே வந்ததும், மேனேஜர் சீனு பளபளக்கும் டைல்ஸ் தரையில் வேக வேகமாக இடது புறம் நடந்து, மீண்டும் வலதுபுறம் திரும்பி, “சார் அந்த ஃபோர்ஷன்!” என்று கை காட்டி விட்டு,
இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் எதற்காக வந்தோம் என்று சொல்லாமல் மவுனமாக இருந்ததால், ‘விஷயம் என்னவாக இருக்கும்?’ என்று மனதில் யோசித்தபடி திரும்பி நடந்தார் மேனேஜர் சீனு.
காலிங் பெல்லை அழுத்திவிட்டு, கதவு திறப்பிற்காக, இன்ஸ்பெக்டர் காத்திருந்தார். இரண்டு நிமிடம் ஆனது. கதவு திறக்கப்படவில்லை. மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினார்.
கதவு திறந்து எட்டிப் பார்த்தான் ஒரு ரெண்டுங்கெட்டான் வயது பையன். சிவந்த நிறம். கொழு கொழுவென்று இருந்தான். மீசை லேசாக அரும்பத் தொடங்கியிருந்தது. பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும் என்று கணித்தார் இன்ஸ்பெக்டர்.
“என்ன?” என்றான். போலீஸை பார்த்து அவன் மிரளவில்லை. அவன் பேச்சில் திமிர் இருந்தது. ஒரு தேர்ட் கிளாஸ் சொசைட்டி பையன் போல் பேசியதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் கொஞ்சம் அதிர்ந்தார்.
அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், “ஆடிட்டர் செல்வத்தை பார்க்கணும்.”
“வாங்க,” அவன் ஏதோ ஒரு அறைக்குள் புகுந்து கொண்டு கதவை படாரென்று சாத்திக் கொண்டான். கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டு சோஃபாவில் ஏதோ ஃபைலை பார்த்துக் கொண்டு இருந்த ஆடிட்டர் செல்வம் நிமிர்ந்து பார்த்தார்.
“வாங்க சார், உட்காருங்க. என்ன விஷயம்?” பார்த்துக்கொண்டு இருந்த ஃபைலை டீப்பாயின் மீது வைத்து விட்டு கேட்டார்.
ஆடிட்டர் செல்வம் ஐம்பது வயது கடந்தவராக இருந்தார். தலைமுடி முழுவதும் நரைத்திருந்தது.
“நீங்க தான் செல்வமா?” என்று கேட்டு, விசாரணையை ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன்.
“ஆமாம்.”
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”
“எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க?”
“ஒரு என்கொயரிக்கு வந்திருக்கோம்! கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க!”இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் குரலில் கடுமை இருந்தது.
“ம், எனக்கு ஒரே ஒரு பையன்தான். டென்த் படிக்கிறான்.”
“பேரு என்ன?”
“வர்ஷன்..”
“எங்க படிக்கிறான்?”
“இ.எஸ். இன்டர்நேஷனல் ஸ்கூல்.”
“இசிஆர் ரோட்ல இருக்கிறது தானே?”
“யெஸ்,” என்ற ஆடிட்டர் செல்வம், எதற்காக இந்த விசாரணை என்று புரியாமல் குழப்பமாக பதில் சொன்னார்.
“உங்க வொய்ஃப்?”
“அவ எங்களோட இங்க இல்லை.” பதில் சொல்லும் போதே மனைவி மீது வெறுப்பு இருப்பதை அவர் முகம் காட்டிக் கொடுத்தது.
“எவ்வளவு நாளா பிரிஞ்சு இருக்கீங்க?”
“அஞ்சு வருஷமா. டைவர்ஸ்ம் ஆகிடுச்சு!”
“எதனால பிரிஞ்சீங்கன்னு நான் கேட்க போறதில்லை. வீட்ல வேற யாரெல்லாம் இருக்கிறீங்க?”
“நான் மட்டும் தான்! எனக்கு அப்பா, அம்மா கிடையாது! சொந்தம்னு யாருமில்லை.”
“அதனால் தான் பையனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கீங்க.?”
இன்ஸ்பெக்டரை குழப்பமாக பார்த்தார் ஆடிட்டர் செல்வம்.
“என் பையன் என்ன தப்பு செஞ்சான்?”
“சின்ன தப்பு பண்ணலை; பெரிசா பண்ணியிருக்கான்,”என்று சொல்லி பற்களை நறநறவென கடித்தார் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன்.
ஆடிட்டர் செல்வம் அதிர்ச்சியில் உறைந்தார்.
“என்ன தப்பு செய்தான் இன்ஸ்பெக்டர்?”
“உங்க பையன் அவன் ஸ்கூல்ல படிக்கிற நாலு சின்ன பொண்ணுங்களை சீரழிச்சிருக்கான்.”
திக்கென்றது ஆடிட்டருக்கு.
“என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்.. அவன் சின்ன பையன். அந்தளவுக்கு தப்பு பண்ணியிருக்க வாய்ப்பில்லை!” பதறினார் செல்வம்.
“சார் உங்க பையன் சீரழிச்சது கூட படிக்கிற பொண்ணுங்க இல்ல; மூணாவது, நாலாவது படிக்கிற சின்ன குழந்தைங்களை.”
உறைந்து போனார் ஆடிட்டர். அவரால் இன்ஸ்பெக்டர் சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை.
வேகமாக எழுந்து வர்ஷன் அறையை நோக்கி ஓட்டத்துடன் போய் ஓங்கி கதவை உதைக்க, உள்ளே படுத்துக் கொண்டு லேப் டாப்பில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான் வர்ஷன்.
காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பார்த்துக்கொண்டு இருந்ததில் ஆடிட்டர் செல்வம் கத்தியது அவன் காதில் விழவில்லை. எட்டி உதைத்தார்.
இரண்டு முறை உருண்டு எழுந்தவன், காதிலிருந்து ஹெட் போனை கழட்டி கடாசி விட்டு முறைத்தான்.
“எழுந்திருடா! இதுக்கா உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தேன்.”
அந்த அறைக்குள் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் நுழைந்தார். ஒரு கான்ஸ்டபிள் ஆடிட்டரை வெளியே இழுத்துக் கொண்டு வர, அறைக் கதவை மற்றொரு கான்ஸ்டபிள் தாழ் போட்டார்.
இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் தடுமாறி எழுந்த வர்ஷன் கன்னத்தில் அவர் பங்குக்கு பளாரென்று அறைந்தார். சுருண்டு விழுந்தான்.
“எதுக்கு அடிக்கிறீங்க?”
“ம், சும்மா தான்!”
முறைத்தான் வர்ஷன்.
“எத்தனை குழந்தைகளை சீரழிச்ச?”
பதில் சொல்லவில்லை; அவன் முகத்தில் பயம் தெரியவில்லை; வருத்தமோ, கவலையோ கூட இல்லை.
செய்தது தப்பில்லை என்பது போல் பார்த்தான்.
இன்ஸ்பெக்டர் ரகோத்தமனுக்கு கோபம் குறையவில்லை. சின்ன அழகான குழந்தைகளிடம் சாக்லேட் கொடுப்பது; விவரமறியாத அந்த குழந்தைகளை தற்செயலாக சந்திப்பது போல் பழகி, நட்புடன் பேசி, பேசி அவர்கள் வீட்டிற்கு சென்று அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து, தனி வீடாக, இருவரும் வேலைக்கு செல்கின்றவர்களின் குழந்தைகளாகப் பார்த்து, பார்த்து தனியாக இருக்கும் சூழ்நிலையில் திட்டமிட்டு சீரழித்ததை ஒன்று விடாமல் கக்க வைத்தார் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன். அவர் சர்வீஸில் இது போன்ற இளம் குற்றவாளியை பார்த்தது இல்லை.
என்ன ஒரு பக்கா திட்டம். பாதுகாப்பில்லாத குழந்தைகள். பெற்றோருடன் உரையாடியும் இருக்கிறான். அவர்களிடம் நல்ல பெயர் வாங்கி, எந்த சந்தேகமும் வராதபடி பார்த்துக் கொண்டதில் கில்லாடியாக இருந்துள்ளது விசாரணையில் தெரிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன்.
“ஆன்டி! நான் திவ்யா படிக்கிற ஸ்கூல்ல தான் படிக்கிறேன். எங்க வீடு பக்கத்தில் தான் இருக்கு. திவ்யா தனியா இருக்கிறதா சொன்னா. நீங்க ஆறு மணிக்கும், அங்கிள் எட்டு மணிக்கும் வருவீங்கன்னு சொன்னா. நீங்க வர்ற வரைக்கும் துணைக்கு இருக்கட்டுமா? அவளுக்கு மேத்ஸ் வர்றாதுன்னு சொன்னா; நான் வேணும்னா சொல்லிக் கொடுக்கிறேன் நீங்க வந்ததும் நான் வீட்டுக்கு போறேன். நானும் வீட்டிற்கு போனா தனியாத்தான் இருக்கணும்,” என்று குழந்தைகளின் பெற்றோரிடமே நல்லவன் போல் பேசி, பழகி, அவர்களின் நம்பிக்கையைப்பெற்று குழந்தைகளைச்சீரழித்து இருக்கிறான்.
அந்தக் குழந்தைகளிடம் கத்தியைக் காட்டி விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கிறான். அன்று ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்து இருக்கின்றனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரிக்க, குழந்தை வர்ஷனை கைகாட்டி இருக்கிறது.
பெற்றோர்கள் பயந்து, “என்ன செய்வது? வெளியே தெரிந்தால் குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகும்?” என குழம்பி, தவித்து, ஒரு வழியாக போலீஸ் கம்ளெயின்ட் கொடுத்தனர்.
அதற்கு காரணம் தங்கள் குழந்தை போல் வேறு எந்த குழந்தையும் பாதிக்கக் கூடாது என்பதுதான்!
எந்தச்செய்தியும் வெளியே லீக் ஆகாதபடி கெஞ்சி, பயந்து நடுங்கி கொடுத்த கம்ப்ளைன்ட்டால் இன்று பல நாள் திருடன் ‘வர்ஷன்’ அகப்பட்டுக் கொண்டான். இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் விசாரணையில் ஒவ்வொரு விஷயமாக வெளிவந்தது.
“ஏம்ம, படிச்சவங்க தானே? எந்த நோக்கத்தில் பசங்க பழகுறாங்க? குட் டச்; பேட் டச்; சொல்லி கொடுத்து வளர்க்க மாட்டீங்களா? ஒத்த குழந்தைக்காகத்தான் ரெண்டு பேரும் உழைக்கறீங்க; இப்படி குழந்தைய நாசம் பண்றவனைப் பத்தி நல்லா விசாரிச்சீங்களா? அவன் வீடு எங்கிருக்கு? அவன் பெற்றோர் யார்? விசாரிக்கறது இல்லையா?” கடிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர்.
முடிவில் நிலைகுலைந்து போயிருந்த பெற்றோருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன்.
“அறைக்குள் என்ன நடக்கிறதோ?” என்ற கவலையுடன் ஆடிட்டர் செல்வம் சோஃபாவில் சரிந்திருந்தார். உடல் படபடத்தது. உடல் முழுவதும் வியர்த்தது. நன்றாக பிள்ளையை வளர்க்க வில்லையே என்ற குற்ற உணர்வு வாட்டத் தொடங்கியது.
ஆடிட்டர் செல்வம் நல்ல பணியில் இருந்த போதும் ஏதோ ஒரு வகையில் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
ஒரு விதத்தில் அவரின் அம்மா எதோ ஒரு காரணம் சொல்லி நல்ல வரன்களை தட்டிக் கழித்ததில் முப்பத்தைந்து வயதைத்தாண்டிப் போனப்பிறகு தான் வச்சலாவை திருமணம் செய்து கொண்டார். மூன்றாண்டுகள் கழித்து தான் வர்ஷன் பிறந்தான்.
அவன் பிறந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் தாத்தா, பாட்டி இருவரையும் பறிகொடுத்தான். அதன் பின்னர், தினம், தினம் கணவன் மனைவிக்குள் சண்டை. பெரும்பாலும் சண்டைக்கு காரணம் எதுவும் இருக்காது.
செல்வத்தின் முதிர்ச்சியான தோற்றம், வச்சலாவை அவனிடமிருந்து பிரிக்கும் சக்தியாக உருவெடுத்தது. ஒரு நாள் சண்டை உச்சக் கட்டத்தை அடைந்து, விவாகரத்து பெற முடிவெடுத்து விட்டார்கள். விவாகரத்து பெற விண்ணப்பித்து அலைந்ததிலும் இருவருக்குமான சண்டையில் குழந்தை வர்ஷனை சரியாகக் கவனிக்காமல் விட்டு விட்டனர். அவனுக்கு இயல்பாகவே பெரியவர்களை மதிக்கும் பண்பு வரவில்லை. அவனிடம் அன்பு செலுத்த ஆளில்லை.
வச்சலா தன் மகனை அழைத்துச்செல்ல விரும்பினாலும் வச்சலாவின் அம்மா வச்சலாவிற்கு மறுமணம் செய்து வைக்க நினைத்தாள். அதனால் வர்ஷனை வளர்க்க விருப்பம் தெரிவிக்காததால் செல்வமிடமே வளர்ந்தான்.
கேட்டதை வாங்கி கொடுப்பான். அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்க்க அதிக செல்லம் கொடுத்தது இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டதை, எண்ணி தனக்குத்தானே நொந்து கொள்வதை விட வேறு வழி அவனுக்கு தெரியவில்லை.
சாத்திய கதவு திறந்த பாடில்லை. விசாரணை முடிந்து வர்ஷனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர்.
“சார்; நல்லா பிள்ளைய வளர்த்து இருக்கீங்க; ஒரு ஹைடெக் கிரிமினல் மாதிரி உங்க பையன் செயல்பட்டு இருக்கான்.” என்று சொல்லி விட்டு அறைக்குள் நடந்த விசாரணை விவரங்களை அப்படியே சொல்லி முடித்தார்.
கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஆடிட்டர் செல்வம் அலட்சியமாக நின்றிருந்த மகனை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.
“இப்ப அடிச்சு என்ன பண்றது மிஸ்டர் செல்வம்; குழந்தை ஆசைப்பட்ட எல்லாத்தையும் உடனுக்குடன் வாங்கித்தந்து அதோட மதிப்பு என்னன்னு தெரியாம வளர்க்கறாங்க நிறைய பேரண்ட்ஸ்; அதுபோல் தான் நீங்களும் வாங்கிக்கொடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்க. எப்ப ஸ்கூல்ல இருந்து வர்றான். யாரு கூட பழகறான செல்லில் என்ன மாதிரியான விஷயங்களை தேடறான். எதையும் கவனிக்க தவறிட்டீங்க. எல்லாவற்றையும் கண்காணித்து இருக்கணும். இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது? உங்களுக்குத் தெரியாம அவனோட அம்மா அப்பப்ப கை நிறைய பணம் கொடுத்து இருக்காங்க.”
“இது வேற நடந்திருக்கா?” அதிர்ச்சி ஆனான் செல்வம்.
“பணம் கொடுத்து, செல்லம் கொடுத்து குழந்தைங்கள கெடுக்கற பெற்றோர் தான் முதல் குற்றவாளி; ஸ்கூல் டீச்சர்ஸ் டிசிபிளின் கொண்டு வர கண்டிச்சா சாலைக்கு வந்து போராடுறீங்க. வீட்லயும் கண்டிப்பு இல்லை; ஸ்கூல்லேயும் இல்லை; அப்புறம் எப்படி? இன்றைய ஜெனரேஷன் வளர வளர ஊருக்கு நாலு போலீஸ் ஸ்டேஷன் வந்திடும்.” சமூக அவலத்தை, வருத்தத்துடன் சொல்லி முடித்தார் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன்.
வர்ஷன் அவர் சொன்னதை காதில் வாங்காமல் தெனாவட்டாக நின்றிருந்தான். அதைப் பார்த்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ஆடிட்டருக்கு.
“என்னடா எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கிற? திமிரா வேற நிக்கிற! “செல்வம் மகனை முறைத்தவாறு கேட்டார்.
அவன் பதிலுக்கு சிரித்துவிட்டு, “என்னை என்ன தூக்கிலயா போட்டுட போறாங்க? நான் மைனர். ஒரு குழந்தைகள் சீர்திருத்த பள்ளியில் அட்மிட் பண்ணுவாங்க,” சொன்னான்.
இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் கடுப்பானார்.
“நீங்க வேலை பார்க்கிற கம்பெனியே சட்டத்துறை அமைச்சர்து; நீங்க எப்படியும் அவர் கையை காலை பிடித்து என்னை எப்படியும் வெளில கொண்டு வந்திடமாட்டீங்களா? உங்களால முடியாதுன்னுற பட்சத்தில் என்னோட கிளாஸ் மேட் திவாகர் சிஎம்மோட பினாமி ராமசாமி பையன். அவன் மூலம் வெளில வந்திடுவேன் நான். மாட்டினா அவன் மாட்டுவான். இது ஒரு செயின் மாதிரி போயிட்டே இருக்கும்.”
இன்ஸ்பெக்டர் ரகோத்தமனுக்கு வர்ஷன் தெனாவட்டாக ஏன் பேசுகிறான் என்று நன்றாகவே புரிந்தது.
“சார் ! இதுல பெரும் புள்ளிகள் பிள்ளைங்க சம்பந்த பட்டிருக்காங்க. ஆனா கம்ளெயின்ட் உங்க பையன் மேல் மட்டும்தான் வந்திருக்கு”
“நீங்க புரொசிடு பண்ணுங்க சார்.”
“இப்போதைக்கு நாங்க ஸ்டேஷன் அழைச்சிட்டு போறோம்,” இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் சொன்னார்.
“ஓகே சார்.” செல்வம் நாதழுதழுக்க சொல்லி விட்டு தன் அறைக்குச் சென்று சட்டை போட்டுக் கொண்டு வந்தார்.
அறையிலிருந்து வெளியே வந்தவர் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.
“சார், என் பையன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்!”
“ம்,” என்று தலையாட்டினார் இன்ஸ்பெக்டர் ரகோத்தமன்.
தன் மகனின் தோள் மீது கை போட்டவாறு பத்தடி தொலைவிலிருந்து பால்கனி அருகே அழைத்துச் சென்றார்.
இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். மகனிடம் பாசமழை பொழிந்ததை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து கவனித்தார் இன்ஸ்பெக்டர்.
செல்வம் அழுதார். பின் கண்களை துடைத்துக் கொண்டே பேசுவதும் வர்ஷன் தெனவட்டாக பதிலளிப்பதும் ‘போதும் வாங்க சார்!’ என்று இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் அழைக்க நினைத்த நிமிடம் யாரும் எதிர்பாராத தருணத்தில் பால்கனியிலிருந்து பலம் கொண்டு வர்ஷனை தள்ளி விட, திடீரென நிகழ்ந்து விட்டதில் நிலை குலைந்த வர்ஷன் மூன்றாவது மாடியிலிருந்து காற்றில் கைகால்களை அசைத்தவாறு “அம்மா,” என்ற அலறலுடன் தரையில் ‘பொத்’ என்ற சத்தத்துடன் விழுந்தான்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்டதில், இன்ஸ்பெக்டர் ரகோத்தமனும், இரண்டு கான்ஸ்டபிள்களும் அதிர்ந்து போனார்கள்.
அங்கேயே சரிந்து, மனசு உடைந்து அழுத செல்வத்தை, இரு கான்ஸ்டபிள்கள் தூக்கி நிறுத்தி, கைத்தாங்கலாக அழைத்து வந்தனர் தரைத்தளத்திற்கு. அவர்களுக்கு முன்பாகவே தரைத்தளத்திற்கு வந்துவிட்ட இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் கீழே விழுந்து கிடந்த வர்ஷனை புரட்டிப் பார்த்தார்.
வானத்தை பார்த்தபடி, கண்கள் வெறிக்க தரை முழுவதும் ரத்தம் பரவ உயிர் விட்டிருந்தான். இரு கான்ஸ்டபிள்களையும் உதறிவிட்டு ஓடி வந்து இறந்த மகனைப் பார்த்து ஓவென்று உடல் குலுங்க அழுதார் செல்வம்.
“என் கையாலேயே கொன்னுட்டேனே!”
“என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?” இன்ஸ்பெக்டர் ரகோத்தமன் கேட்டார்.
“சார் இந்த மாதிரியான சமூக விரோதிங்களை நாம் களையெடுக்கணும்; இந்த நியூஸ் எல்லா பெற்றோருக்கும் எச்சரிக்கை மணியா இருக்கணும்! பிள்ளைகளை கண்காணிச்சு வளர்க்கணும். தப்பு செய்தா, அப்பா, அம்மா தண்டனை தருவாங்கன்ற பயம் குழந்தைகளுக்கு இருக்கணும். பெத்த குற்றத்திற்கு வேற என்ன செய்ய முடியும்? எந்த ஒரு குழந்தை குற்றம் செய்தாலும் பெற்றோர் தான் முதல் குற்றவாளி,” என்ற செல்வம் போலீஸ் ஜீப்பில் ஏறி உட்கார்ந்தார்.

**திரு மணிவண்ணன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள் எழுதுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். கௌரா பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் இவருக்கு முதல் பரிசு கிடைத்தது. மேலும் பொதிகை சாரல் நடத்திய சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு மற்றும் கௌரா பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ள இவரின் பல சிறுகதைகள், தினமணி கதிர், கல்கி, குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
இவருடைய நான்கு நாவல்கள் பிரதிலிபி தளத்தில் வெளி வந்துள்ளன. சீசன் ஒன்பதில் பரிசும் பெற்றுள்ளார். WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் குழுவினர் சார்பாக வெளியிடப்பட்ட “பேரன்பின் சுகந்தம்” என்ற முதலாவது சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய “புதியதோர் உலகம் செய்வோம்,” என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது
